சீறும் சூரியன்: பூமிக்கு ஆபத்தா?
பிப்ரவரி 11 அன்று தென் ஆப்பிரிக்காவில் சிற்றலை ஒலிபரப்பில் திடீரெனப் பாதிப்பு ஏற்பட்டது. பலருக்கு எப்படி அது நிகழ்ந்தது எனத் தெரியவில்லை. ‘துடிப்புப் பகுதி AR3217’ என அழைக்கப்படும் சூரியக் கரும்புள்ளிப் பகுதியில், இந்திய நேரப்படி இரவு 9.20 மணிக்கு ஏற்பட்ட சிறிய சூரிய ஒளிப்புயல்தான் அதற்குக் காரணம்.
சூரிய இயக்கத் துடிப்பில் 11 ஆண்டு ஊசல் காலம் கொண்ட ஏற்ற இறக்கம் உள்ளது. 2019 டிசம்பரில் தொடங்கிய இந்த ஊசல் இப்போது ஏறுமுகத்தில் உள்ளது. ஜூலை 2025இல் இது உச்சம் அடையும். எனவே, அடுத்த சில மாதங்களில் சீற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கையும் தீவிரமும் கூடும் என எச்சரிக்கிறார்கள் விண்வெளி வானிலை ஆய்வாளர்கள்.
சூரியச் சீற்றம்: சூரியனின் வெளிப்புற மண்டலமான கரோனாவிலிருந்து (Corona) ஒவ்வொரு விநாடியும் சூரியக் காற்று எனப்படும் மின்னூட்டம் கொண்ட அயனித் துகள்களின் வீச்சு நிகழ்கிறது. பெரும்பாலும் எலெக்ட்ரான்களைக் கொண்ட இந்தக் காற்று, கோள்களுக்கு இடையே உள்ள விண்வெளியில் நொடிக்குச் சுமார் 200 முதல் 400 கி.மீ. வேகத்தில் வீசுகிறது. காற்று வீசும்போது புகைபோக்கியிலிருந்து வெளிவரும் புகை, வால்போல நீண்டு அசையும் அல்லவா? அதுபோல வீசும் சூரியக் காற்றால்தான் வால்விண்மீன்களுக்கு வால் உருவாகிறது.
சூரியனின் நடுக்கோட்டுப் பகுதி 25 நாள்களுக்கு ஒருமுறை சுழலும்போது, அதன் துருவப் பகுதி சுழல்வதற்கு 35 நாள்களை எடுத்துக்கொள்கிறது. இந்த நிலையில், சூரியன் தன்னைத் தானே சுற்றிக்கொள்ளும்போது வட துருவத்திலிருந்து புறப்பட்டு வளைந்து தென் துருவத்தை எட்டும் கண்களுக்குப் புலப்படாத காந்தப் புலக்கோடுகள் முறுக்கிக்கொள்கின்றன. வளைந்து நெளிந்து முறுக்கம் பெறும் காந்தப்புலக் கோடுகள், உடைந்து சிதையும்போதுதான் சூரியனில் சீற்றம் ஏற்படுகிறது.
சூரிய சூறாவளி: முறுக்கிக்கொண்ட காந்தப்புலக் கோடுகள் சில வேளை அதிலிருந்து வெட்டிக்கொண்டு நேர்க்கோடுபோலச் சூரியனிலிருந்து விண்வெளி நோக்கிச் செல்லலாம். இதைச் சூரிய காந்தப்புலத் துளை என்கிறார்கள். இந்தத் துளை வழியே மேலும் உக்கிரமான - நொடிக்கு 800 கி.மீ. - வேகத்தில் அயனித் துகள்கள் அந்தத் திசை நோக்கிப் பாயும்; இதுவே சூரிய சூறாவளி. சில சமயம் முறுக்கிய காந்தப்புலக் கோடுகள் சட்டென்று வெடித்துப் புதிய இணைப்பைப் பெறலாம். அப்போது சிதையும் காந்தப்புலத்தின் ஆற்றல் எக்ஸ் கதிர், காமா கதிர் என மின்காந்த அலைகளை உருவாக்கி ஒளிப்புயலாக வெளிப்படும். மின்னல் அடித்ததுபோல அந்தப் பகுதியில் பிரகாசம் திடீரெனக் கூடும்.
முறுக்கம் ஏற்பட்ட காந்தப்புலக் கோடுகள் தம்முள் இணைந்து துண்டித்தும்கொள்ளும். துண்டாகும் காந்தப்புலக் கோடுகள், எரிமலை வெளியிடும் மக்மா (Magma) குழம்புபோலச் சூரியனிலிருந்து பிரிந்து விண்வெளியில் பரவும். மேகம் உயர்வதுபோலச் சூரியனிலிருந்து வெளியேறும் காந்தப்புலக் கோடுகள், அயனிப் பொருள்களைத் தன்னுடன் எடுத்துச் செல்லும். இதனைச் சூரிய எரிமலை வெடிப்பு அல்லது சூரிய நிறை வெளியேற்ற வெடிப்பு (coronal mass ejection) என்பார்கள்.
காக்கும் கவசங்கள்: இந்தக் கதிர்வீச்சிலிருந்து தற்காத்துக்கொள்ள பூமிக்கு இரண்டு கவசங்கள் உள்ளன. முதலாவது - பூமியின் காந்தப்புலக் கோடுகள். கிரிக்கெட் மட்டையில் பந்து பட்டுத் தெறிப்பதுபோல, சூரியக் காற்றிலிருந்து பாய்ந்துவரும் அயனித் துகள்களைப் பூமியின் காந்தப்புலக் கோடுகள் திசைதிருப்பிவிடும்.
இரண்டாவது - பூமிக்கு மேல் 60 கி.மீ. முதல் 1,000 கி.மீ. வரை பரவியிருக்கும் அயனியாக்கப்பட்ட வளிமண்டலம் (Ionosphere). இது துப்பாக்கிக் குண்டு துளைக்காத கவசம்போல அயனித் துகள்களை உறிஞ்சித் தடுத்து நிறுத்திவிடுகிறது. பூமியின் வட-தென் துருவ முனைகளில் காந்தப்புலக் கோடுகளின் ஊடே துளை உள்ளது. சூரியக் காற்று எடுத்துவரும் அயனித் துகள்கள் இந்தத் துவாரம் வழியே பூமியின் வட-தென் துருவங்களின் உள்ளே ஒவ்வொரு விநாடியும் நுழையும்.
வட-தென் துருவப் பகுதிகளில் அயனியாக்கப்பட்ட வளிமண்டலத்தில் உள்ள அயனி ஆக்ஸிஜன், அயனி நைட்ரஜன் அணுக்களில், சூரியக் காற்றிலிருந்து வரும் எலெக்ட்ரான்கள் மோதும்போது பல வண்ண ஒளி உருவாகும். இதைத்தான் ‘துருவ ஒளி’ என்கிறோம். மேலும், சூரியக் காற்றின் வேகத்தைப் பொறுத்து பூமியின் அயனியாக்கப்பட்ட வளிமண்டலப் பகுதியின் தடிமன் வேறுபடும். இதன் தொடர்ச்சியாகச் சிற்றலை ஒலிபரப்பின் தரத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும். தென் ஆப்பிரிக்காவில் நிகழ்ந்தது இதுதான்.
என்னென்ன பாதிப்புகள்? சூரியனில் எல்லா நாள்களிலும் ஏதாவது சீற்றம் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கும். சூரியனின் மேற்புறத்தில் ஏற்படும் பெருஞ்சீற்றம் பூமியை நோக்கியுள்ள திசையில் அமைந்துவிட்டால், பூமியில் காந்தப்புலப் புயல் ஏற்படும். இதன் மூலம், மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் ஆபத்து இல்லை என்றாலும் செயற்கைக்கோள்கள், மின்னணுக் கருவிகள், மின் விநியோகம் முதலிய தொழில்நுட்பங்கள் பாதிக்கப்படும்.
தீவிர ஒளிப்புயல் ஏற்பட்டால் விண்வெளியில் பரவும் இந்த மீயாற்றல் மின்காந்த அலைகள், பூமியின் மேற்புறத்தில் உள்ள அயனி மண்டலத்தை ஆட்டம்கொள்ளச் செய்யும். மேலும். அதனூடே பரவும் புற ஊதாக்கதிர் பூமியின் மேற்பரப்பு வளிமண்டலத்தை வெப்பமடைய வைத்து விரிவடையச் செய்யும். விரிவடைந்த வளிமண்டலம் தாழ் விண்வெளியில் பறந்துகொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள் மீது உராய்வு விசையைச் செலுத்தி, அவற்றின் பாதையில் நுட்பமான மாறுதல்களை ஏற்படுத்திவிடும்.
அயனியாக்கப்பட்ட வளிமண்டலத்தைத் தாக்கி, உலகம் முழுவதும் சிற்றலை தொடர்பில் பாதிப்பு ஏற்படுத்தும். மேலும், விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள் மீது எலெக்ட்ரான் பரவி, நிலை மின்னூட்டத்தை ஏற்படுத்தி மின்னணுக் கருவிகளைப் பாதிக்கும்.
விண்வெளி வானிலை: இன்று சுமார் 8,000 செயற்கைக்கோள்கள் பூமியை வலம் வந்துகொண்டிருக்கின்றன. தடையில்லா மின் விநியோகத்தை நம்பித்தான் தொலைத்தொடர்பு முதல் மருத்துவமனை அவசரப் பிரிவுக் கருவிகள்வரை இயங்குகின்றன. எனவே, விண்வெளி வானிலை நிலவரத்தைத் தெரிந்துகொள்ள விஞ்ஞானிகள் எப்போதுமே முயல்கிறார்கள்.
அதே நேரம், சூரிய சூறாவளி, சூரிய எரிமலையின் தாக்கம் மூன்று, நான்கு நாள்களுக்குப் பிறகே பூமியில் தெரியத் தொடங்கும். எனவே, பல விண்வெளி ஆய்வு மையங்கள் சூரியச் சீற்றத்தை உடனே இனம்கண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கின்றன.
ஒளியின் வேகத்தில் பரவும் ஒளிப்புயல் எட்டு நிமிடங்களில் பூமியை வந்தடையும். எனவே, விண்வெளித் தொலைநோக்கி இனம் கண்டாலும் பயன் ஏதுமில்லை. எனவே, சூரியச் சீற்றம் ஏற்படுவதற்கு முன்னரே இனம் காண முடியுமா என விஞ்ஞானிகள் ஆய்வு நடத்திவருகிறார்கள். கொல்கத்தாவில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மையத்தில் (CESSI), ஆராய்ச்சியாளர் திவ்யேந்து நந்தி தலைமையிலான குழு, கணினி ஒப்புருவாக்கம் (Computer Simulation) வழியே, சூரியனின் மேல் வளிமண்டலமான கரோனாவின் வடிவம் மற்றும் கட்டமைப்பைக் கணிக்க முதற்கட்ட ஆய்வை நடத்தி வெற்றிகண்டுள்ளது. எதிர்காலத்தில் சூரியச் சீற்றம் ஏற்படும் முன்னரே கணிக்க முடியும் என்ற நம்பிக்கையை இது விதைத்துள்ளது.
- த.வி.வெங்கடேஸ்வரன் | விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி; தொடர்புக்கு: tvv123@gmail.com
