சொல்… பொருள்… தெளிவு | ஆன்லைன் சூதாட்டத் தடை

சொல்… பொருள்… தெளிவு | ஆன்லைன் சூதாட்டத் தடை
Updated on
2 min read

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் விளையாடி, பணத்தைத் தொலைத்து, நிம்மதியிழந்து இதுவரை 45 பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த விளையாட்டைத் தடை செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்ட மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

நான்கு மாதங்களைக் கடந்துவிட்ட நிலையில், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்திவருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில் இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பான சட்ட நிலைப்பாடு என்ன?

இந்தியச் சட்டம்: மத்திய அரசின் ‘பொதுச் சூதாட்டச் சட்டம் 1867’, இந்தியாவில் நடைமுறையில் உள்ள சூதாட்டம் தொடர்பான ஒரே சட்டமாக உள்ளது; இது மிகப் பழைய சட்டம். இன்றைய நவீன ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், ஆன்லைன் கேசினோக்கள் ஆகியவற்றை இச்சட்டத்தால் கையாள முடியாது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மாநில அரசுகளின் சட்டங்கள்: சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துவது மாநிலப் பட்டியலில் வருகிறது. அதன்படி, மாநில அரசுகள் தங்கள் அதிகார வரம்பில் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்த உரிய சட்டத்தை உருவாக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிராக பிரத்யேகமான மத்தியச் சட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில், மாநில அரசுகள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்துச் சட்டங்களை இயற்றுகின்றன.

எந்தெந்த மாநிலங்கள்? ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை அல்லது ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்கள் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இல்லை. டெல்லி, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்கள் பொதுச் சூதாட்டச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு நிறைவேற்றியுள்ளன.

சிக்கிம், மேகாலயா, நாகலாந்து, டாமன் & டையூ யூனியன் பிரதேசம் ஆகியவை தங்கள் அதிகார வரம்பின் கீழ் பொதுச் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்தச் சட்டங்களை உருவாக்கியுள்ளன. ஆந்திரம், தெலங்கானா, ஒடிஷா, அசாம் ஆகிய மாநிலங்கள் கற்பனையான விளையாட்டுகளையும், பந்தயம் கட்டும் விளையாட்டுகளையும் தடைசெய்துள்ளன. கர்நாடகம் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையும் தடை செய்த நிலையில், கடந்த ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தால் அது ரத்தானது; கேரளத்திலும் இதேதான் நடந்தது.

ஏன் ரத்து? ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக மாநில அரசுகள் சட்டங்கள் கொண்டுவந்தாலும், அது ரத்தாகும் நிலை ஏற்படுகிறது. திறமையை உள்ளடக்கிய போட்டிகள் சூதாட்டம் அல்ல என்று 1957ஆம் ஆண்டில் ஒரு தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த விளையாட்டுகளின் தொழில் சார்ந்த நடவடிக்கைகள் அரசமைப்புச் சட்டம் 19(1)(g)இன் கீழ் வருகிறது. இது சட்டப்படியான தொழில்கள், வணிகத்தை மேற்கொள்ளும் உரிமை ஆகும்.

1968 இல், ரம்மி என்பது ‘மூன்று அட்டை’ போன்ற முற்றிலும் வாய்ப்பு அடிப்படையிலான விளையாட்டு அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ரம்மியில் அட்டைகளை வரிசைப்படுத்துதல், நிராகரித்தல் ஆகியவை கணிசமான திறமையை உள்ளடக்கியது, வெற்றிக்கான வாய்ப்புகள் கணிசமான அளவு திறமையைச் சார்ந்திருக்கும் விளையாட்டு சூதாட்டம் அல்ல என்றது உச்ச நீதிமன்றம். எனவே, ரம்மி உள்பட சூதாட்டப் பாணியிலான ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிராக மாநில அரசுகள் சட்டங்களை இயற்றினாலும், இந்த வாதத்தையே ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் முன்வைக்கின்றன.

தமிழ்நாட்டின் நிலை என்ன? தமிழ்நாடு அரசு 2020இல் கொண்டுவந்த தடைச் சட்டத்தைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது. இதன் தொடர்ச்சியாக, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழுவின் பரிந்துரையின்படி, புதிய சட்ட மசோதாவைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. அது ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் திறமைக்கும் வாய்ப்புக்கும் உள்ள வித்தியாசத்தை வேறுபடுத்தியே சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, ஒரு விளையாட்டை நேரில் விளையாடும்போது, அனைத்துச் சூழல்களும் விளையாடுபவருக்குத் தெரியும். ஆனால், ஆன்லைனில் யாரையும் எளிதாக ஏமாற்றி, பணத்தைச் சுரண்டும் வாய்ப்புகள் உள்ளன. அதன் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடைசெய்ய தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியுள்ளது.

என்ன தேவை? ‘இந்தியாவில் 19 மாநிலங்கள் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாகச் சட்டம் இயற்றியுள்ளதால் தற்போதைய சூழ்நிலை குழப்பமாக உள்ளது. இதனை ஒழுங்குபடுத்த ஒரே மாதிரியான சட்டம் நாடு முழுக்கத் தேவை’ என்று மத்திய மின்னணுவியல் - தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் தெரிவித்திருந்தார்.

இணையத்துக்கு மாநில எல்லைகள் கிடையாது. அந்த வகையில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாகத் தேசிய அளவில் சட்டம் தேவை. பொதுவான சட்டத்தை மத்திய அரசு இயற்றும்வரை, மாநில அரசுகளின் சட்டங்கள் அமலில் இருப்பது பல அப்பாவிகளின் உயிரைக் காக்கும்.

தொகுப்பு: டி.கார்த்திக்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in