Last Updated : 21 Feb, 2023 06:42 AM

 

Published : 21 Feb 2023 06:42 AM
Last Updated : 21 Feb 2023 06:42 AM

தாக்குதலுக்கு உள்ளாகும் தாய்மொழிகள்

‘என் தாய்மொழி நாளை இறக்கப்போகிறது என்றால், இன்றே நான் இறந்துவிடுவேன்’ என்பது ரஷ்ய நாட்டில் பிறந்த, ‘அவார்’ மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ரசூல் கம்சதேவ் என்னும் கவிஞனின் வரிகள். தாய்மொழி உணர்வின் மானுடக் கொந்தளிப்பை, இந்த வரிகளே நமக்கு உணர்த்திவிடுகின்றன.

மனிதர் மீது கூடுதல் தாக்கம்கொண்டது மொழி உணர்வு. தாய்மொழியைத் தாய்ப்பாலுடனேயே குழந்தைகள் கற்கத் தொடங்கிவிடுகின்றனர். தங்கள் உணர்வுகளைத் தாங்களே புரிந்துகொண்டு, அதைச் சகமனிதரோடு பகிர்ந்துகொள்ளும் அரிய சாதனமாக மொழியை மனிதர் பழகிக்கொண்டனர். மனித விடுதலையின் ஒரு பகுதி உழைப்பு என்றால், தாய்மொழி மறுபகுதி. மொழியின் பண்பாட்டுப் பயன்பாடு, மிக ஆழமானது.

அழியும் மொழிகள்: இந்தியத் துணைக் கண்டம் என்பது வரலாற்றுரீதியாகப் பல்வேறு மொழிகள் பேசும் மக்களின் பண்பாட்டுக் கூடாரம். உலகில் 700 கோடி மக்கள் 6,500 மொழிகளைப் பேசுகின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் 130 கோடி மக்கள், 1,652 மொழிகளைப் பேசுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு இயல்பாகவே அமைந்த பண்பாட்டு அடையாளமாகும்.

எங்கிருந்தோ வந்த தீமையாக, இந்த அடையாளத்துக்கு இப்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 250 மொழிகள் மறைந்துவிட்டன; 122 மொழிகள் மரணப் படுக்கையில் இருக்கின்றன எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

லாப வெறி பிடித்து அலையும் உலகமயம், இயற்கை வளங்களை மட்டும் அழிக்கவில்லை; ஆதிகுடிகளின் பல நூறு மொழிகளையும் தினமும் படுகொலை செய்துகொண்டிருக்கிறது. இந்தப் பண்டைய மொழிகள் இயற்கையின் நுட்பங்களை ஆழமாகக் கற்றறிந்தவை.

பிரபஞ்ச அழிவைப் பாதுகாக்கும் நுட்பங்கள்கூட இந்த மொழிகளுக்குத் தெரிந்திருக்கக்கூடும். இவற்றின் அழிவு, யோசித்துப் பார்க்க முடியாத பேரழிவு என்பதை இன்றைய ஆதிக்க-சுயநலக் கூட்டத்தால் அறிந்துகொள்ள முடியாது. அழிவிலிருக்கும் பெரும்பான்மை மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பது கவலைக்குரியது.

திராவிட மொழிகளின் தொன்மை: இன்றைய இந்தியாவிலும் அதன் எல்லையோரங்களிலும், ஒரு காலத்தில் திராவிட மொழிக் குடும்பம் புகழ்பெற்றிருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துவருகின்றன. திராவிட மொழி பேசியவர்கள் பொ.ஆ.மு. (கி.மு.) 3,500 வாக்கில், இந்தியா முழுவதும் வாழ்ந்தனர் என்கிற கருத்தை மொழி அறிஞர்கள் ஒருமனதாக ஒப்புக்கொள்கின்றனர். சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள் அந்த மக்கள்தான் என்பதும் இன்று உறுதிசெய்யப்பட்டு வருகிறது.

திராவிட மொழிகள், இந்தியத் துணைக் கண்டத்தின் பூர்வ மொழிகளாகக் கருதப்படுகின்றன. திராவிட மொழிகள் நான்கு பிரிவுகளைக் கொண்டவை என்பதையும், டிரமிலா என்பது, இதில் முக்கிய மொழி என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் முந்தைய ஆய்வுகளை கால்டுவெல், எல்லீஸ் போன்ற ஆங்கிலேயர்கள் நிகழ்த்தியிருந்தனர். இவர்கள்தான் திராவிட மொழிக் குடும்பம் தொன்மையானது என்பதை உலகறியச் செய்தவர்கள்.

பலிபீடத்தில் மொழிகள்: காலப்போக்கில் ஆரியரின் வருகை, பூர்வகுடி மக்களான திராவிடர்களுக்குப் பெரும் நெருக்கடியாக அமைந்தது. போர்களாலும் வேறு காரணங்களாலும் அவர்கள் புலம்பெயர்ந்து வெளியேறி, தொலைதூர நிலப்பகுதிகளில் குடியேறியிருக்க வேண்டும்.

தெற்கிலிருந்து வடக்குவரை பரவி நிற்கும் இந்திய மலைத்தொடர்களில் பழங்குடி மக்கள் பேசும் மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றே கருதப்படுகின்றன. இவைதான் இன்று ஆதிக்க சக்திகளின் பலிபீடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மொழிகள்.

இந்தியாவின் தாய்மொழி குறித்த ஆய்வில் வேறு ஒன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காஞ்சிபுரத்தில் தொன்மையான பல்கலைக்கழகம் ஒன்று இருந்ததைப் போல, பாட்னா என்னும் பாடலிபுத்திரத்திலும் ஒரு பல்கலைக்கழகம் இருந்தது. பௌத்தமும் சமணமும் இங்குதான் பிறந்தன. உலக அளவில் பெரும் புகழ்பெற்ற இந்தத் தத்துவங்கள் பாலி, பிராகிருத மொழிகளில் எழுதப்பட்டன.

இந்த மொழிகள் இன்று எங்கு போயின? இவை அனைத்தும் அழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டுவிட்டன. இதன் பின்னரும் அவதி, போஜ்புரி, ஹரியாண்வி, மகதி, மைதிலி, பஹாரி, சத்ரி மொழிகள் செல்வாக்குடன் அங்கு வாழ்ந்தன. இந்த மொழிகளும் அழிக்கப்பட்டன. இதற்கு இந்தி எவ்வாறு மிக முக்கிய மாற்றாக வந்தது என்பது ஆராயத்தக்கது.

பிரிவினையின் பாதிப்பு: ஆட்சிக் காலத்தை நீட்டிக்க இந்து, முஸ்லிம் உள்பகையைத் திட்டமிட்டு வளர்ப்பதை, நீண்ட காலத் தந்திரத்துடன் ஆங்கிலேயர் செயல்படுத்திவந்தனர். இதற்கு இவர்களுக்கு ஒரு மதத்தினரிடம் மற்றொரு மதத்தினருக்கு மதவெறுப்பை வளர்ப்பது மட்டும் போதுமானதாக இல்லை. மொழியும் தேவைப்பட்டது.

உருதைத் தேசிய மொழியாக்க பாகிஸ்தானுக்கு பிரிட்டிஷார் வழிவகுத்துக் கொடுத்தனர். இந்தி, இந்துக்கள் அனைவருக்குமான மொழி இல்லை என்பதைப் போலவே உருது, இஸ்லாமியர் அனைவருக்குமான மொழி அல்ல. இது, பிற மொழிகளை ஆதிக்கம் செய்தபோது, தன் தாய்மொழிக்காகப் போராடி வங்கதேசம் தனது சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது.

புது உலகம் வேண்டும்: இன்று, ‘ஒரு நாடு, ஒரு மொழி’ கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. தாய்மொழியின் மூலம்தான் வளர்ச்சி, முன்னேற்றம் முதலான அனைத்தும் சாத்தியம் என்றால், வேறொரு மொழியை ஏன் திணிக்க வேண்டும்? அனைத்து மொழி பேசும் மக்கள் கொடுத்த வரிப்பணத்தை, ஒரு மொழியை வளர்ப்பதற்கு மட்டும் செலவழிப்பது அறம் சார்ந்த செயல்பாடா?

இன்று, இந்தி ஆதிக்கத்தால் அனைத்து மொழிகளும் நெருக்கடியில் சிக்கிக் கிடக்கின்றன. தங்கள் மொழியின் அழிவு பற்றி மராட்டியரும் பஞ்சாபியரும் பேசத் தொடங்கிவிட்டனர். குஜராத் மொழிக்குச் சில தனித்தன்மைகள் உண்டு. மத்தியில் ஆட்சி செய்வோர் தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த மொழியும் அழிக்கப்பட வேண்டுமா என்கிற குரல் அந்த மண்ணில் எழுந்துவிட்டது.

அனைத்து மொழிகளையும் நேசிக்கும் புது உலகம் ஒன்று நமக்கு வேண்டும். இதற்கு, ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து நிற்கும் வெகுமக்களின் தாய்மொழிக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாகும்.

பிப். 21: உலகத் தாய்மொழிகள் நாள்

‘ஒரு நாடு, ஒரு மொழி’ கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. தாய்மொழியின் மூலம்தான் வளர்ச்சி, முன்னேற்றம் முதலான அனைத்தும் சாத்தியம் என்றால், வேறொரு மொழியை ஏன் திணிக்க வேண்டும்?

- சி.மகேந்திரன் மூத்த தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி; தொடர்புக்கு: singaram.mahendran@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x