

தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் அழிந்துகொண்டிருக்கும், சிதைந்துகொண்டிருக்கும் அன்னை மொழியான தமிழை மீட்கும் நோக்குடனும், காக்கும் நோக்குடனும், உலகத் தாய்மொழி நாளான இன்று (பிப்ரவரி 21) ‘தமிழைத் தேடி...’ என்கிற தலைப்பில் சென்னையிலிருந்து சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரைக்கு விழிப்புணர்வுப் பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறேன்.
தமிழ்ச் சமூகத்துக்குத் தண்டனை: இந்தப் பயணத்தை வாய்ப்பாகவோ பெருமையாகவோ நினைக்கவில்லை. மாறாக, தண்டனையாகவே நினைக்கிறேன். அனைத்து வளமும் கொண்ட அன்னைத் தமிழை வளர்ப்பதற்கு மாற்றாக, சிதைத்த தமிழ்ச் சமூகத்தின் ஓர் அங்கம் என்கிற வகையில் இந்தத் தண்டனையை அனுபவிப்பதற்கு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் தகுதி படைத்ததுதான்.
தமிழில் பிறமொழிச் சொற்கள் கலப்பு என்பது இன்று, நேற்று ஏற்பட்டதல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழிச் சிதைவு தொடங்கிவிட்டது. அதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நூறாண்டுக்கு முன்பே மறைமலை அடிகள் தலைமையில் பாரதிதாசன், பரிதிமாற்கலைஞர், தேவநேயப் பாவாணர், கி.ஆ.பெ.விசுவநாதம் உள்ளிட்ட தமிழறிஞர்கள் இணைந்து, தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கினர்.
தமிழில் பிற மொழிக் கலப்பைத் தடுப்பதில் தனித்தமிழ் இயக்கத்தின் பங்களிப்பு எல்லையில்லாதது. ஆனாலும், தனித்தமிழ் இயக்கம் வலியுறுத்தியவற்றைத் தமிழ்ச் சமுதாயம் பின்பற்றவில்லை என்பதால், தமிழ் மொழியின் சிதைவைத் தடுத்து நிறுத்த முடியவில்லை; அது தொடர்கிறது.
கண்டித்த கவி: ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு’ என்பது சரிதான். ஆனால், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மட்டும்தான் மணமுண்டு என்று தமிழர்கள் நினைப்பதுதான் பிழையாகும். 1934 அக்டோபரில் தமது விஸ்வபாரதி பல்கலைக்கழகத்துக்கு நிதி திரட்டுவதற்காகச் சென்னை வந்திருந்த வங்க மகாகவி ரவீந்திரநாத் தாகூர், தமிழ்நாட்டு மக்களின் இந்தப் பிழையைக் கண்டித்திருக்கிறார்.
‘‘தாய்மொழியையும் அதில் உள்ள இலக்கியங்களையும் மதிக்காமல், வேற்று மொழிகளுக்குத் தங்களை அடிமையாக்கிக்கொண்டவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் அளவு வேறு நாட்டில் இல்லை. வங்கத்தில் ஆங்கிலமயமாகிப்போன சிலரைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் எழுத்தில் மட்டுமே ஆங்கிலத்தைப் பயன்படுத்துவார்கள். மற்றபடி பேசுவது எல்லாம் முழுக்கமுழுக்க வங்காளத்தில்தான். ஆனால், இங்கு (சென்னை) நிலைமை தலைகீழாக இருக்கிறது’’ என்று முகத்தில் அடித்தாற்போல் தாகூர் கூறியிருந்தார்.
எனது முயற்சிகள்: 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்’ என்கிற அமைப்பைத் தோற்றுவித்தும், அதற்கு முன் தனியாகவும், தமிழில் பிறமொழிச் சொற்கள் கலப்பதைத் தவிர்க்க வேண்டும்; இயன்றவரை தனித்தமிழில் எழுத, உரையாட வேண்டும்; தமிழைப் பயிற்றுமொழியாக்க வேண்டும்; ஆலய வழிபாடு, திருமணம் ஆகியவற்றைத் தமிழ் மொழியிலேயே நடத்த வேண்டும்; செய்தித்தாள்களில் தொடங்கி செய்தி ஊடகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் ஆகியவற்றில் அன்னைத் தமிழே ஆட்சிபுரிய வேண்டும் என்பதற்காக எண்ணற்ற பணிகளை மேற்கொண்டேன். அவற்றுக்கு ஓரளவு பயன் கிடைத்தது. ஆனால், எதிர்பார்த்த மாற்றம் நிகழவில்லை. தாகூர் கூறிய நிலையே தொடர்கிறது.
அன்னைத் தமிழைக் காக்க வேண்டும் என்பதற்காகப் பல்வேறு தரப்பிலிருந்தும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக, செய்தி ஊடகங்களிலும், நாளேடுகளிலும் இப்போது தனித்தமிழ்ச் சொற்கள் குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாற்றத்தில் நான் தொடங்கி நடத்திய ‘தமிழ் ஓசை’ நாளிதழுக்கும் பெரும் பங்குண்டு. ஆனால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் ஆங்கிலக் கலப்பு குறையவில்லை.
அரசு அலுவலகங்களின் நிலை: அரசுத் துறைகளில் தமிழ் மொழியின் பயன்பாடு முழுமையாக இல்லை என்பதே வருத்தமளிக்கும் உண்மை. தமிழ்நாட்டில் ‘தமிழ் ஆட்சி மொழிச் சட்டம்’ 1956இல் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இன்னும் தமிழ்நாடு அரசின் ஆட்சிப் பீடமான தலைமைச் செயலகத்தில் தமிழ் இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை.
‘‘ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கமானது கீழ் நிலையிலுள்ள சார்நிலை அலுவலகங்களில் நல்ல முன்னேற்றத்தினை எய்தியுள்ளது. மேலே செல்லச் செல்லத்தான் முன்னேற்றத்தின் அளவு குறைந்துள்ளது’’ எனத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி வை.பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.
வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழ் மொழியில்தான் இருக்க வேண்டும் என்று 1983இல் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரும் தீர்மானம் சட்டமன்றத்தில் 2006இல் நிறைவேற்றப்பட்டது.
அந்தக் கனவும் இன்னும் நனவாகவில்லை. ‘தமிழ் கட்டாயப் பாடச் சட்டம்’ 2006இல் நிறைவேற்றப்பட்டாலும் இன்னும் செயல்வடிவம் பெறவில்லை. மக்களின் நிலை இன்னும் மோசம். தமிழ்நாட்டில் எங்கும் தமிழ் இல்லை என்பதே உண்மை.
தமிழ் அழியாது: தமிழ் மொழி ஓர் ஆலமரம். அதை யாராலும் வீழ்த்திவிட முடியாது. ஆனால், ஆலமரத்தின் வேர்களிலும் விழுதுகளிலும் நஞ்சு செலுத்தும் செயலைத்தான் நாம் செய்துகொண்டிருக்கிறோம். இதே நிலை தொடர்ந்தால், இன்னும் பல பத்தாண்டுகள் கழித்துத் தமிழ் என்கிற பெயரில் ஒரு மொழி இருக்கும். ஆனால், அதில் தமிழ் இருக்காது.
முழுக்கமுழுக்க அரைகுறை ஆங்கிலச் சொற்களும், வடமொழிச் சொற்களும்தாம் கலந்திருக்கும். இந்த ஆபத்தை மக்களுக்கு எடுத்துக் கூறி, அன்னைத் தமிழைக் காக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ‘தமிழைத் தேடி...’ என்கிற என் பயணத்தின் நோக்கம் ஆகும்.
எந்த நாட்டில் ஆட்சியில், கல்வியில், வழிபாட்டில், நீதியில், ஊடகங்களில், அன்றாடப் பயன்பாட்டில் தாய்மொழிக்கு முதல் மரியாதை வழங்கப்படுகிறதோ, அந்த நாட்டில் அம்மொழியை அழிவிலிருந்து மீட்டெடுப்பது மிகவும் எளிது என்று மொழி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் தமிழைக் காப்பதற்கும் இதுதான் சரியான தீர்வு. தமிழ்நாடு அரசு இந்த உண்மையை உணர்ந்து பள்ளிகளில் தொடங்கி அலுவலகங்கள், நீதிமன்றங்கள், ஆலயங்கள், திருமணங்கள் என அனைத்திலும் அன்னைத் தமிழ் ஆட்சி செலுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.
- ச.இராமதாசு | நிறுவனர், பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை; தொடர்புக்கு: tamilosai1@gmail.com