

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் 1965இல் தொடங்கியவை அல்ல. சுதந்திர இந்தியாவில் அரசமைப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பே இந்தித் திணிப்புக்கான ஆயத்தங்கள் தொடங்கிவிட்டன.
அந்த முயற்சிக்கு எதிராக அப்போதே உருவான கடுமையான எதிர்ப்புகள் வரலாற்றில் என்றைக்கும் நினைவுகூரப்பட வேண்டியவை. பள்ளிகளில் கட்டாய இந்திக்கு எதிரான மொழிப் போராட்டத்தின் (1937-39) விளைவால், தமிழ் உணர்ச்சிபூர்வமான விஷயமாக மாற்றப்பட்டதும், அதன் பேரில் உணர்வுபூர்வமாக வெகுமக்கள் ஈர்க்கப்பட்டதும் நடந்தேறின.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறைபட்ட இந்தப் போராட்டத்தில் இருவர் உயிர்த் தியாகமும் செய்தனர்; அவர்கள்: ல.நடராசன், தாளமுத்து.
இந்தித் திணிப்புக்கு எதிராக 1938இல் நடந்த மறியலில் ஈடுபட்ட பலரில் ஒருவராகக் கைதுசெய்யப்பட்ட நடராசனுக்கு, ஏழரை மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறைவாசத்தின்போது ஏற்பட்ட வயிற்றுவலி காரணமாக, டிசம்பர் 30 அன்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு உடல்நிலை மோசமாகி, தண்டனைக் கைதியாகவே 1939 ஜனவரி 15 அன்று நடராசன் காலமானார்.
மறியல் செய்ததற்காக ஆறு மாதக் கடுங்காவலும் 15 ரூபாய் தண்டமும் தண்டனையாகப் பெற்றிருந்த தாளமுத்து, சிறைபட்ட மூன்று வாரங்களுக்குள் காலமானார் (1939 மார்ச் 11). மொழிக்காகத் தன்னுயிர் ஈந்த நடராசன் – தாளமுத்து என்ற இரட்டைப் பெயர்கள் தமிழுணர்வு கொண்டோரின் மனதில் நீங்கா இடம்பெற்றவை.