இடையிலாடும் ஊஞ்சல் - 11: விலங்கு நலனும் `மிருக பல`மும்

இடையிலாடும் ஊஞ்சல் - 11: விலங்கு நலனும் `மிருக பல`மும்
Updated on
2 min read

காதலும் அதற்கு எதிர்ப்பும் எப்போதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போலத் தொடர்வது வரலாறு. ஓர் ஆண் ஒரு பெண் மீது/ஒரு பெண் ஓர் ஆண் மீது கொள்ளும் தனித்த வகை அன்பைக் காதல் என்கிறோம். மூன்றாம் பாலினத்தவர் காதலும் திருமணமும் சமூக அங்கீகாரத்தைப் பெறும் சூழல் உருவாகியிருக்கிறது. பாலியல் ஈர்ப்பு என்பது இயற்கையானது. அது காப்பாற்றி வளர்க்கப்பட்டு கல்யாணம் வரைக்கும் போக வேண்டும் என்கிற கட்டாயம் ஏதுமில்லை. போனால் மட்டுமே அது ‘வெற்றி பெற்ற காதல்’ என்று சமூகம் மதிக்கிறது. திருமணத்தில் முடியாத எத்தனையோ காதல்கள் அமரக் காதல்களாகி பல காவியங்களால் பாடப்பெற்றுள்ளன.

லைலா-மஜ்னூ, அனார்கலி-சலீம் என்று பல கதைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டிலும் கவிச் சக்கரவர்த்தி கம்பரின் மகன் அம்பிகாபதியும் மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் மகள் அமராவதியும் கொண்ட காதலும் அது நிறைவேறாமல் போனதும் இன்றைக்கும் காவியமாகக் கொண்டாடப்படுகிறது. நூற்றாண்டு காணும் எழுத்தாளர் கு.அழகிரிசாமி எழுதிய ‘கவிச்சக்கரவர்த்தி’ என்கிற நாடகத்தில் இந்தக் காதலைக் குறித்து மன்னரோடு கம்பர் வாதம் செய்யும் காட்சி அறிவுபூர்வமானது.

கம்பர்: நீ கூறுவதெல்லாம் உண்மை. நீ பொய் சொல்ல மாட்டாய் என்பதை நான் அறிவேன். உன்னுடைய எந்த உண்மையும் எந்த நியாயமும் இந்த இரு இளம் உயிர்களையும் காப்பாற்றப் போவதில்லை. நானோ உயிரைக் காக்கும் தர்மத்தைப் பேசுகிறேன்.

சோழன்: இங்கே உயிரைக் காப்பாற்ற எண்ணுவதே அதர்மம்.

கம்பர்: (உரத்த குரலில்) குலோத்துங்கா! நீ சொல்வதை நான் ஏற்கவே முடியாது. மரண தண்டனை பெறக் கூடியவாறு இவர்கள் செய்த குற்றம் என்ன? வெளிப்படையாகக் கேட்கிறேன்; மன்னன் மகளைப் புலவன் மகன் மணந்தான் என்றால், அது குற்றம் என்று எந்த தர்ம சாஸ்திரம் கூறுகிறது?

சோழன்: அப்படி ஒரு திருமணம் நடந்தது உண்டா? நீங்களே சொல்லுங்கள். நமக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் தர்ம சாஸ்திரம் அறியாதவர்களா?

கம்பர்: ராஜகுடும்பங்களுக்குள் திருமணம் நடப்பதே நியாயம் என்கிறாய். குலோத்துங்கா, எத்தனை ராஜகுடும்பங்களின் பூர்வோத்திரத்தை நீ அறிவாய்? கொலைகாரனும் கொள்ளைக்காரனும்கூட ஆயுதங்களையும் ஆட்களையும் திரட்டி மிருக பலத்தினால் மன்னனாகிவிட முடியும். அப்படி மன்னர் பதவிபெற்ற கொலைகாரர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். இரண்டு மூன்று தலைமுறைகள் கழிந்துவிட்டால், கொலைகாரனுடைய பரம்பரையும் ராஜவம்சமாகி அங்கே பெண் கொடுப்பதும், பெண் எடுப்பதும் தர்ம சாஸ்திரம் கூறும் நீதியாகவும் ஆகிவிடுகிறது, உன் போன்ற மன்னர்களுக்கு! உங்கள் ராஜகுடும்பப் பெண் ஒருத்தியை ஹொய்சள மன்னன் வல்லாளனுக்கு மணம் முடித்துக்கொடுத்தாயே, வல்லாளனுடைய முன்னோர் எப்படிப்பட்டவர்கள் என்று அறிந்துகொண்ட பிறகா கொடுத்தாய்?

சோழன்: கம்பரே, உங்களை வாதில் வெல்ல மகாகவிகளாலுமே முடியாது. என்னால் முடியும் என்று யாருமே சொல்ல மாட்டார்கள். நான் கொடுத்த தண்டனையை மாற்றவே முடியாது.

கம்பர்: மிருக பலத்தால் வெல்கிறாய்.

காலந்தோறும் இப்படிப்பட்ட ‘மிருக பல’த்தால் காதல் எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த ஆண்டு 2023இல் விலங்குகளுக்கான நலவாரியம் - மத்திய அரசின் இத்துறை - காதலுக்கும் காதலர் தினத்துக்கும் எதிராகக் கொடியைத் தூக்கியது. மேற்கத்தியக் கலாச்சாரத்தில் வந்த காதலர் தினத்துக்கு மாறாகப் பசுவைக் கட்டிப்பிடித்துக் காதலை வெளிப்படுத்துமாறு சுற்றறிக்கை விட்டது. ‘பசுவைக் கட்டிப்பிடித்தால் உணர்வுப்பெருக்கு ஏற்படும். தனி மனிதருக்கும் மக்கள் குழுவுக்கும் ஆனந்தம் பெருகும்’ என்று ‘விஞ்ஞானபூர்வமான’ விளக்கமும் அளித்திருந்தது. சமூக வலைத்தளங்களில் இந்த அறிக்கைப் பல வடிவங்களில் கேலிக்கு உள்ளாக்கப்பட்ட பிறகு, அத்துறை தன் அறிவிப்பைத் திரும்பப்பெற்றது.

‘அரசுத் துறை திரும்பப்பெற்றாலும் நாங்கள் பசுவைக் கட்டிப்பிடிப்போம்’ என்று இந்து மக்கள் கட்சி அறிவித்தது. சென்னையில் கடந்த 14ஆம் தேதி காவிக்கொடிகள், காதலர் தினத்துக்கு எதிரான அட்டைகள் சகிதம் முழக்கமிட்டபடி எத்திராஜ் மகளிர் கல்லூரியை நோக்கிச் சென்ற பாரத் இந்து முன்னணியினர் காவல் துறையின் தலையீட்டால் கலைந்து சென்றுள்ளனர். இந்துத்துவத் தீவிரவாத அமைப்புகள் காதலருக்கு எதிராகக் கிளம்பியிருப்பது ஒன்றும் புதிதல்ல. பூங்காக்களில் கைகோத்து நடக்கும் காதல் ஜோடிகளைச் சுற்றிவளைத்து அங்கேயே கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லித் தாலியோடு அலைந்ததையும், உருட்டுக்கட்டைகளால் காதலர்களை இவர்கள் அடித்து விரட்டியதையும் கடந்த பல ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதில் வியப்பொன்றுமில்லை. சாதியை நேசிப்பவர்கள், மதத்தைத் தூக்கிப்பிடிப்பவர்கள் மனிதக் காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது தெரிந்த உண்மைதான்.

ஆனால், மதச்சார்பற்ற ஜனநாயக சோஷலிஸக் குடியரசான இந்தியாவின் ஓர் அரசுத் துறையே காதலர் தினத்துக்கு எதிராகக் களம் இறங்கியது ஒரு மோசமான முன்னறிவிப்பாகத் தெரிகிறது. பசுவைக் கட்டிப்பிடிக்க வேறு ஏதாவது ஒரு நாளைச் சொல்லியிருந்தால்கூட நாம் சிரித்துக் கடந்திருக்கலாம். ஆனால் காதலர் தினத்தைச் சிறுமைப்படுத்தும் உள்நோக்கம் இந்தத் துறையின் சுற்றறிக்கையில் ஒளிந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. குலோத்துங்கச் சோழன் அம்பிகாபதியைக் கொலைக்களத்துக்கு அனுப்பியதுபோல மத்திய அரசு காதலுக்கு எதிராக அதிகாரபூர்வமாகக் கிளம்பிவிட்டதா என்கிற கேள்வி எழுகிறது. இது ஜனநாயகத்துக்கே ஆபத்தல்லவா?

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in