Last Updated : 29 May, 2017 09:16 AM

 

Published : 29 May 2017 09:16 AM
Last Updated : 29 May 2017 09:16 AM

அறிவோம் நம் மொழியை... எழுத்துக்கு வரும் பேச்சு வழக்கு!

சில சொற்களைப் பிரித்து எழுதுவதா, சேர்த்து எழுதுவதா எனும் குழப்பம் பலருக்கும் பல சூழல்களிலும் எழுகிறது. பேச்சு வழக்கில் இடம்பெறும் சொற்களை எழுத்தில் கொண்டுவரும்போதும் இந்தப் பிரச்சினை வருகிறது. எடுத்துக்காட்டாக, ‘கிட்ட’ என்னும் சொல்லை எடுத்துக்கொள்வோம். ‘அவரிடம் சொல்ல மாட்டேன்’ என்பதைப் பேச்சு வழக்கில் ‘அவர்கிட்ட சொல்ல மாட்டேன்’ என்று சொல்வோம். ‘அவர் அருகில் வந்தார்’ என்பதை ‘அவரு கிட்ட வந்தாரு’ என்று சொல்வது உண்டு. இந்த இரண்டு சூழல்களிலும் ‘கிட்ட’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுவதா, சேர்த்து எழுதுவதா?

கதாபாத்திரங்களும் செய்திக் கட்டுரையில் மேற்கோள் காட்டப்படும் நபர்களும் பேசுவதைக் கூடியவரை அவர்கள் சொன்னபடி எழுதவே கதாசிரியர்களும் இதழாளர்களும் முயற்சிசெய்வார்கள். எனவே, என்கைல சொல்லு, அவராண்ட குடு, பிளேட்டைத் திருப்பிப்போடு முதலான வழக்குகள் கதைகளிலும் செய்திக் கட்டுரைகளிலும் இடம்பெறக்கூடும். முட்டுக்கொடுத்தல், தூக்கிப்போடுதல் முதலான சொற்கள் பேச்சு வழக்கிலும் உரைநடை வழக்கிலும் உச்சரிப்பில் மாற்றமடையுமே தவிர, இரண்டிலும் ஒரே விதத்தில்தான் பயன்படுகின்றன. ஆனால், கிட்ட, கைல, (உன்)னாண்ட முதலான சொற்கள் உரைநடையில் பயன்படுத்தப்படுவதில்லை. இதுபோன்ற சொற்களை எழுத்தில் கொண்டுவரும்போது எப்படிக் கையாள்வது?

போல, கொண்டு, வை, வா முதலான சொற்களுக்குச் சொல்லப்பட்ட அதே முறைதான் இந்தச் சொற்களுக்கும் பொருந்தும். தனிப் பொருள் தந்தால் பிரித்து எழுதலாம். முன்னால் வரும் சொல்லோடு சேர்ந்து, தன் தனிப் பொருளுக்கு மாறுபட்ட பொருளைத் தந்தால் சேர்த்து எழுதலாம்.

கிட்ட என்னும் சொல் அருகில் என்னும் தனிப் பொருளில் வந்தால் பிரித்து எழுதலாம். (அவரி)டம் என்னும் பொருளில் வந்தால் சேர்த்து எழுதலாம். ‘அவர்கிட்ட சொல்லியாச்சு’, ‘அவன் கிட்ட வந்து நின்னான்’ ஆகிய எடுத்துக்காட்டுகளில் இந்த வேறுபாடு துல்லியமாகத் துலங்கும்.

‘எங்கைல சொல்லு, நான் யார்கைலயும் சொல்ல மாட்டேன்’ என்று சொல்லும்போது கைல என்பது கை என்னும் தனிப் பொருளைத் தரவில்லை, எனவே சேர்த்து எழுதலாம். ‘எங் கைல குடு’, ‘அப்பா கைல அடிபட்டிருக்கு’ ஆகியவற்றில் கை என்பது கை என்னும் பொருளைத் தருவதால் பிரித்து எழுதலாம்.

போடு என்பதைக் கொல் / கொலைசெய் என்னும் பொருளில் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறார்கள். இதை எழுத்தில் கொண்டுவரும்போது, இது அலாதியான தனிப்பொருள் தருவதால் பிரித்தே எழுத வேண்டும்.

பேச்சு வழக்கில் உள்ள சக்கைபோடு, அடக்கிவாசி போன்ற பல சொற்களுக்கும் இதே அடிப்படையில் முடிவுகாணலாம்.

- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x