உடைந்து எழும் நிலம்

கில்காமெஷ்
கில்காமெஷ்
Updated on
3 min read

இந்த ஆண்டின் மிக மோசமான இயற்கைப் பேரிடராக, துருக்கி-சிரியா நிலநடுக்கம் வரலாற்றில் பதிவாகியுள்ளது; ஒருவேளை இந்த நூற்றாண்டின் மிக மோசமான ஒன்றாகவும் இருக்கலாம். அங்கு பதிவாகும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு நாளும் உயர்ந்துகொண்டே செல்கிறது. துருக்கியிலும் சிரியாவிலும் சேர்த்து சுமார் 2.3 கோடிப் பேர் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது.

இன்றைய சீனாவின் ஷாங்டோங் மாகாணத்தில் உள்ள தய் மலைப் பகுதியில், பொ.ஆ.(கி.பி) 1831 காலகட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட முதல் நிலநடுக்கமாகக் கருதப்படுகிறது. கிரேக்கத் தத்துவவியலாளர்களான அரிஸ்டாட்டில், தாலெஸ் போன்றோரின் பதிவுகள், நிலநடுக்கம் பற்றிய ஆரம்ப கால அறிவியல் அவதானிப்புகளையும் கருதுகோள்களையும் வழங்குகின்றன. கடவுளரின் கோபத்தால் நிலம் நடுங்குகிறது (உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்றன) என்கிற பொதுவான நம்பிக்கையும் கதையாடலும் பண்டைய மக்களிடம் பரவலாக நிலவின. ஆனால், நிலநடுக்கம் என்றால் என்ன என்பதை அறிவியல் வரையறுத்துவிட்டது. எனினும், நிலம் எப்போது நடுங்கும் என்பதை அறிவியலால் இதுவரை துல்லியமாகக் கணிக்க முடியவில்லை என்பது, நிலநடுக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளின் தீவிரத்தைத் தவிர்க்க முடியாத ஒன்றாகவே தொடரவைக்கிறது.

மனிதகுலம் தன்னுடைய அனுபவங்களை மொழி உருப்பெறுவதற்கு முன்பே (குகை, பாறை) ஓவியங்கள் மூலம் பதிவுசெய்யத் தொடங்கிவிட்டது. நாகரிக வளர்ச்சியில் மொழியின் இயக்கம், இலக்கியத்தைப் பிறப்பித்தது. மனிதகுலம் இயற்கையிலிருந்து அந்நியப்பட்டிருக்காத பண்டைய காலத்தில், இயற்கையுடனான மனிதனின் தொடர்பாடல் இலக்கியத்தின் முதன்மை அம்சமாக இருந்திருக்கிறது; இயற்கைப் பேரிடர்களை மனிதகுலம் எப்படி எதிர்கொண்டது என்பதை அது கையாண்டிருக்கிறது. அந்த வகையில், இலக்கியத்தில் நிலநடுக்கம் பற்றிய தொடக்க காலப் பதிவு, ‘கில்காமெஷ் காப்பிய’த்தில் காணப்படுகிறது. வரலாறு நெடுகிலும், பல்வேறு பண்பாடுகளின் இலக்கியத்தில் நிலநடுக்கம் ஒரு முக்கிய அங்கமாக இருந்துவருகிறது. சமூக, அரசியல் எழுச்சிகளுக்குக் குறியீடாகவும், மனிதகுலம் அந்தப் பேரிடரை எதிர்கொண்டு எப்படி முன்னேறுகிறது என்பதையும் இலக்கியம் பதிவுசெய்துவந்திருக்கிறது.

நிலநடுக்க இலக்கியம்

நான்கு ‘டெக்டானிக் ப்ளேட்ஸ்’ இணைவில், சுமார் 6,852 தீவுகளால் ஆன ஒரு நாடு ஜப்பான். இப்பெருந்தீவுகள் ஆண்டொன்றுக்கு ரிக்டர் அளவில் 5.0 அல்லது அதற்கு மேலான அளவில் 1,500க்கும் அதிகமான நில அதிர்வுகளைச் சந்திக்கின்றன. இதன் விளைவாக, 1608 முதல் 1945 வரை சராசரியாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை டோக்கியோ அழிக்கப்பட்டு, மீண்டும் கட்டப்பட்டுள்ளது. பூகம்பம், சுனாமி, எரிமலைச் சீற்றம் என நூற்றாண்டுகளாக இயற்கைப் பேரிடர்களை எதிர்கொண்டுவரும் ஜப்பானியர்களின் மனமும் புலனுணர்வும், அதற்கேற்பத் தகவமைத்துக்கொண்டுள்ளதாக அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன; அது அவர்களது சமூகப் பண்பாட்டுக் கூறுகளின் உருவாக்கத்திலும் தாக்கம் செலுத்துகின்றன. ஜப்பானில் ‘நிலநடுக்க இலக்கியம்’ (ஷின்சாய் புங்காகு) பிறந்தது இப்படித்தான்.

1923இல் ஏற்பட்ட ‘பெரும் கன்டோ நிலநடுக்க’த்துக்குப் பிறகு, மிகப் பயங்கரமான ஒன்றாக, 1995இல் ஏற்பட்ட ‘பெரும் ஹான்ஷின் நிலநடுக்கம்’ (அல்லது ‘கோபே நிலநடுக்கம்’) ஜப்பானின் வரலாற்றில் பதிவாகியுள்ளது. இன்றைய ஜப்பானின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான ஹருகி முரகாமியின் சொந்த ஊரான கோபேயில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்துக்குப் பிறகு, அவர் எழுதிய ‘நடுக்கத்துக்குப் பிறகு’ சிறுகதைத் தொகுப்பு, ‘நிலநடுக்க இலக்கிய’த்துக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகச் சுட்டப்படுகிறது.

அச்சமயம் அமெரிக்காவில் வசித்துவந்த முரகாமி, பிற்பாடு ‘நியூ யார்க்கர்’ இதழுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், இந்த நிலநடுக்கம் குறித்து இப்படிக் கூறியிருக்கிறார்: “இந்தப் பேரழிவால் பாதிக்கப்பட்டுத் துயரில் உள்ள மக்களுக்கு, ஒரு நாவலாசிரியராக என்னால் என்ன செய்ய இயலும் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். நிலநடுக்கத்தின்போது என்ன நிகழ்ந்திருக்கும் என்று என்னால் கற்பனை செய்ய முடியும் என்று நினைத்தேன்; கற்பனைதான் என்னுடைய சொத்து. ஆக, என்னால் முடிந்தது நல்ல புனைவு ஒன்றை எழுதுவதே. ஏனென்றால், நல்ல கதை ஒன்றை எழுதும்போது (வாசகரும் எழுத்தாளரும்) ஒருவரை ஒருவர் மேலதிகமாகப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் ஒரு வாசகர், நான் ஓர் எழுத்தாளர். உங்களை எனக்குத் தெரியாது. ஆனால், புனைவு என்னும் கீழுலகில் நமக்கிடையே உள்ள ரகசியப் பாதையில் நம் ஆழ்மனதின் செய்திகளைப் பகிர்ந்துகொள்வோம். எனவே, நான் பங்களிக்க வேண்டிய வழி அதுவே என்று நினைத்தேன்.”

துருக்கியின் கதை

ஜப்பானைப் போலவே, துருக்கியும் வரலாறு நெடுகிலும் நிலநடுக்கத்தை எதிர்கொண்டுவரும் ஒரு நாடுதான். அந்நாட்டின் நாட்டுப்புறக் கதைகள் தொடங்கி நவீன இலக்கியம்வரை நிலநடுக்கம் பற்றிய பதிவுகள் ஏராளமாக உள்ளன. ‘20ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த துருக்கி நாவலாசிரியர்’ என ஓரான் பாமுக் போற்றும், அகமத் ஹம்தி தன்பினாரின் ‘நேர நெறிமுறை நிலையம்’ நாவல், 1894 இஸ்தான்புல் நிலநடுக்கத்தைப் பதிவுசெய்திருக்கிறது. தற்போதைய பேரழிவு குறித்து, ‘நியூ யார்க் டைம்ஸ்’ நாளிதழில் எழுதிய கட்டுரையில், நிலநடுக்கம் குறித்த தன்னுடைய அனுபவங்களைப் பாமுக் நினைவுகூர்ந்திருக்கிறார்:

“இது கடந்த 80 ஆண்டுகளில் துருக்கியைத் தாக்கிய மிகப் பெரிய நிலநடுக்கம்; அருகிலிருந்தும் தொலைவி லிருந்தும் என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்து நான் உணரும் நான்காவது பெரிய நிலநடுக்கம். 17,000க்கும் அதிகமானோரைப் பலிகொண்ட 1999 ‘மர்மரா’ நிலநடுக்கத்துக்குப் பிறகு, மிக மோசமாகச் சிதிலமடைந்த ஊர்களில் ஒன்றான யாலொவாவுக்குச் சென்றேன். இடிபாடுகளைக் களைந்து உதவ முடியும் என்கிற எண்ணத்தில், பொறுப்பும் குற்ற உணர்வும் மேலிடப் பல மணி நேரம் கான்கிரீட் சிதிலங்களிடையே நான் உலவினேன். ஆனால், ஒருவருக்குக்கூட உதவ இயலாமல் நான் வீடு திரும்பினேன். விரக்தியும் சோகமும் நிறைந்த அன்றைய காட்சி என்னுள் தங்கிவிட்டது, நான் அதை மறக்கவே நினைத்தேன். ஆனால் முடியவில்லை.”

புனைவு என்னும் கீழுலகில் உள்ள ரகசியப் பாதையில் ஆழ்மனதின் செய்திகளை வாசகருடன் பகிர்ந்துகொள்ள, இந்த நிலநடுக்கம் குறித்த புனைவு ஒன்றை ஒருவேளை பாமுக் இந்நேரம் எழுதத் தொடங்கியிருக்கக்கூடும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in