பல்லவ மன்னன் மகேந்திரர்: கலைஞர்களின் கலைஞர்

பல்லவ மன்னன் மகேந்திரர்: கலைஞர்களின் கலைஞர்
Updated on
4 min read

சோழ மன்னன் இராஜராஜர் அளவிற்குப் பல்லவ மன்னன் மகேந்திரர் மக்கள் உள்ளங்களில் இடம்பெறாமைக்குச் ’சிவகாமியின் சபத’த்தின் கதைப்போக்கும் ஒரு காரணம். காதலில் தோய்ந்த இளம் உள்ளங்களைப் பிரிப்பவராகவும் போரில் தோற்பவராகவும் அப்புதினத்தில் மகேந்திரர் காட்டப்பட்டிருப்பார். கதையின் புனைவிற்கும் வரலாற்றின் உண்மைக்கும் இடையில்தான் எத்தனை இடைவெளி! அது கல்கியின் கற்பனைப் படைப்பு என்பதும் பல்லவர் தலைநகரான காஞ்சிக்குள் இரண்டாம் புலிகேசி நுழையவேயில்லை என்பதும் புதினம் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எனில், மகேந்திரர் யார்? அவரைப் பற்றிய அறிமுகம் தேவைதானா? எளிய மக்களின் வாழ்வியலைத் தேடி வரலாறு பயணிக்கத் தொடங்கியிருக்கும் இந்தக் காலத்தில் ஓர் அரசரைப் பற்றிய படப்பிடிப்பு ஏன்? கேள்விகள் இப்படிப் பலவாக எழுந்தாலும், விடை ஒன்றுதான். மகேந்திரர் வரலாற்றை உருவாக்கிய மக்கள் மன்னர். தம் காலத்தின் சமூக நிகழ்வுகளை நாடகங்களாகவும் சமயச் சிந்தனைகளைச் சிற்பங்களாகவும் படைத்த புதுமை விரும்பி. மகேந்திரருக்கு முன்னால் வடதமிழ்நாட்டில் கற்கோயில்கள் இல்லை. செங்கல், மரம், உலோகம், சுதையாலான கட்டமைப்புகளே வழக்கிலிருந்த அக்காலத்தே, அழியாத கட்டமைப்புகளைக் கல்லில் உருவாக்கிய முதல் அரசராக மகேந்திரர் பொலிகிறார். விழுப்புரத்திற்கு அருகிலுள்ள மண்டகப்பட்டு எனும் சிற்றூரில் பெரும் பாறையொன்றைக் குடைந்து அவரால் உருவாக்கப்பட்ட கோயில்தான் இப்பகுதியில் தோன்றிய முதல் குடைவரை.

மகேந்திரர்
மகேந்திரர்

மகேந்திரரின் படைப்புகள்

சங்க காலத்தின் இறுதிப்பகுதியாக அறியப்படும் பொதுக்காலம் 2ஆம் நூற்றாண்டிற்கும் மகேந்திரரின் ஆட்சிக்காலமான 6ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிக்கும் இடையில் தமிழ்நாட்டில் நேர்ந்த சமூக, சமய மாற்றங்களின் பதிவுகளாகவே மகேந்திரரின் படைப்புகள் விளங்குகின்றன. பெரும்பாறை, குன்று அல்லது மலையின் ஒருபகுதியை முன்னிருந்து பின்னாகக் குடைந்து, அதில் மக்களுக்கான கூடம் ஒன்றையும் அக்கூடத்தின் பிற்பகுதியிலோ பக்கவாட்டிலோ இறைவடிவம் இருத்த அறையொன்றையும் பல்லவச் சிற்பிகள் உருவாக்கினர். சங்க காலத்திலிருந்த, ‘பொதியில்’ என்ற வழிபாட்டிடத்தின் கல் வடிவமாகவே இத்தகு குடைவரைகளை மகேந்திரர் தோற்றுவித்தார். மக்கள் கூடும் கூடம், அவர்கள் மண்டும் அகமாகி, மண்டகம் எனப் பெயர் விளங்கி, நாட்போக்கில் மண்டபமாகத் திரிந்தது. இறைவடிவுக்கான அறை இறையகமாகிக் கருவறையானது. குரங்கணில்முட்டம் குடைவரை கல்வெட்டுகளில் ஒருகல் மண்டகமாகவே அறியப்படுவது இங்கு நினைக்கத்தக்கது.

ஆட்சிக்குரிய அரசுப் பெயரான மகேந்திரவர்மர் தவிர, பல்வேறு புனைபெயர்களைச் சிறப்புப் பெயர்களாகக் கொண்டு அவற்றைக் கல்வெட்டுகளிலும் பதிவுசெய்த முதல் அரசராகப் பொலிபவர் மகேந்திரரே. தமிழ், தெலுங்கு, பிராகிருதம், சமஸ்கிருதம் என நான்கு மொழிகளிலும் சிறப்புப் பெயர்கள் கொண்டு விளங்கும் முதல் அரசரும் இவரே. கல்வெட்டுகள் சுட்டும் அத்தனை சிறப்புப் பெயர்களுக்கும் ஏற்றவராய்த் திகழ்ந்த வாழ்க்கையினர் மகேந்திரர் என்பதை ஓரிரு சான்றுகளால் உறுதிப்படுத்தலாம்.

விசித்திர சித்தர்

‘அனைத்துத் திசைகளிலும் பரவியவர்’ எனும் பொருள்பட அமைந்த மகேந்திரரின் பிராகிருத மொழிச் சிறப்புப் பெயருக்கேற்பவே அவரது குடைவரை முகப்புகள் நாற்றிசைப் பார்வையில் அமைந்துள்ளன. அக்குடைவரைகளின் கருவறைகளும் நாற்றிசைப் பார்வை கொண்டுள்ளன. ‘கலைப்புலி, பலவும் பாடுபவர், கோயிலெழுப்பி, தேர்ந்த ஞானி’ எனும் பொருள்களில் அமைந்த சிறப்புப் பெயர்கள் அவரது பன்முகக் கலையாற்றலை, அறிவுத்திறத்தை, வீரச்செறிவை உணர்த்துமாறு மின்னுகின்றன. மகேந்திரரின் சிறப்புப் பெயர்கள் குறித்த விரிவான ஆய்வை மைக்கேல் லாக்வுட், மு. நளினி உள்ளிட்ட ஆய்வாளர்களின் நூல்களில் காணலாம்.

‘விசித்திர சித்தர்’ எனும் சிறப்புப் பெயருக்கேற்பவே தாம் எடுப்பித்த அனைத்துக் குடைவரைகளிலும் பல புதுமைகளை முயன்று பார்த்தவர் மகேந்திரர். மக்கள் மண்டும் மண்டகத்தைச் சில குடைவரைகளில் இரு பகுதிகளாகப் பிரித்திருப்பது போலவே, தளவானூரில் கருவறைக்கு முன்றில் அமைத்துள்ளார். மண்டகப்பட்டில் சிவபெருமான், திருமால், நான்முகன் ஆகிய மூன்று தெய்வங்களுக்குமாய் மூன்று இறையகங்களை உருவாக்கிய அவ்வரசர், திருமாலுக்கு மட்டுமாய் மகேந்திரவாடியில் ஒரே கருவறையுடன் மகேந்திரவிஷ்ணு கிருகத்தைத் தோற்றுவித்தார். சிராப்பள்ளி, சீயமங்கலம், மாமண்டூர்க் குடைவரைகள் சிவபெருமானுக்கெனத் தனி இறையகங்கள் கொள்ள, பல்லாவரம் குடைவரை ஐந்து கருவறைகளுடன் உருவானது. அவர் காலத்ததாகக் கொள்ளத்தக்க மற்றொரு மாமண்டூர்க் குடைவரையிலோ மீண்டும் மூன்று கருவறைகள்.

இசைத் திறம் இயம்பும் கலை

சிற்பங்களே இல்லாத குடைவரையாக மாமண்டூர் முதல் குடைவரை அமைய, வெளியிலும் உள்ளிலுமாய்க் காவலர் சிற்பங்களுடன் தளவானூர் சத்ரு மல்லேசுவராலயம் பொலிகிறது. தமிழ்நாட்டுக் கலை வரலாற்றின் முதல் கங்கையேற்ற சிவபெருமானின் எழிலார்ந்த செதுக்கல் சிராப்பள்ளிக் குடைவரையைச் செழிப்பாக்க, சிவபெருமானின் முதல் ஆடல்தோற்றமும் சங்க இலக்கியப் போர்க்கள ஆடலான ஒள்வாள் அமலையின் படப்பிடிப்பும் நந்தியணுக்கராக சிவனும் உமையும் தோன்றும் முதல் பதிவும் சீயமங்கலம் அவனிபாஜனத்தில் காட்சியாகின்றன.

இசையில் இவருக்கும் இவர் தேவிக்குமிருந்த நுட்பமான அறிவைத் தெளிவாக்கும் மாமண்டூர்க் குடைவரைக் கல்வெட்டு, மகேந்திரரின் இசைத்துறை சார்ந்த சாதனைகளை முன்வைக்கிறது. இதன் முதல் வரியிலமைந்த, ‘கந்தருவ சாஸ்திரம்’ எனும் தொடர், அக்காலத்தே வழக்கிலிருந்த இசைநூலைக் குறிப்பதாகவும் அக்கந்தருவ இசையில் மகேந்திரர் தனித்திறம் பெற்றிருந்ததாகவும் அறிஞர்கள் குறிக்கின்றனர். அப்பர் தம் பதிகம் ஒன்றில் சுட்டும், ‘கந்திருவம் பாட்டிசையிற் காட்டுகின்ற’ எனும் தொடருக்குப் பொருள் எழுதுகையில், கந்திருவம் அப்பர் காலத்தே வழக்கிலிருந்த இசைநூலைக் குறிப்பதாக உரையாசிரியர் சுட்டுவது கருதத்தக்கது. மகேந்திரர் இலக்கிய ஈடுபாடும் கொண்டிருந்தமை இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ள வால்மீகி, வியாசர் பெயர்களால் தெளிவாகிறது.

மத்தவிலாசப் பிரகசனம் தந்த மன்னன்

இம்மாமண்டூர்க் கல்வெட்டே மகேந்திரரின் படைப்புகளாகக் கருதப்படும் இரண்டு எள்ளல் நாடகங்களை அறிமுகப்படுத்துகிறது. மத்தவிலாசப் பிரகசனம், பகவத்தஜ்ஜுகம் என்றறியப்படும் இவ்விரு நாடகங்களும் அச்சில் ஏறியுள்ளமை சிறப்பு. மத்தவிலாசப் பிரகசனம் சமயவாதிகளின் நெறிமீறல்களைத் தெளிவுபடுத்துவதுடன் சட்டம், நீதி, ஒழுங்கு ஆகியவை அக்காலத்தே எந்த அளவிற்குப் பாழாகியிருந்தன என்பதையும் வெளிச்சப்படுத்துகிறது. நாடகம் அமைந்திருக்கும் முறை, காட்சிகள், மையக்கருத்து இவை மூன்றுமே இந்நாடகம் ஏழாம் நூற்றாண்டின் புரட்சிமிகு புது முயற்சி என்பதை உணர்த்து கின்றன. மகேந்திரரின் கலையறிவு, சமூகப் பார்வை, உளப்பாங்கு என அனைத்தையும் காட்டும் இந்நாடகம் போலவே, பகவத்தஜ்ஜுகம் பாடம் கேட்கவேண்டியதின் இன்றியமையாமையை வலியுறுத்திச் சமயப்போலிகளை அடையாளப்படுத்துகிறது. எழுத்தாளராகவும், கட்டட, சிற்ப அறிஞராகவும், இசை, நாடக மேதையாகவும் சிறந்த சமூக சிந்தனையாளராகவும் தம் படைப்புகளின் வழி வெளிப்படும் மகேந்திரர் மக்களால் நினைவுகூரப்படவேண்டியவர்.

ஒரு மனிதனை அடையாளப்படுத்துவன வாழும்போது அவன் விட்டுச் செல்லும் முத்திரைகள்தான். காலம் இந்த முத்திரைகளை மிகுந்த கவனத்துடன் பாதுகாத்து, வரலாற்றுக் கண்களின் முன் எடைபோட நிறுத்துகிறது. எதையும் எவ்விதச் சார்புமின்றிப் பார்வையிடும் வரலாறு, அந்த முத்திரைகளுள் மகத்தானவற்றைத் தன் தலை மேல் சுமந்து தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்கிறது. அப்படித் தலைமுறை தலைமுறையாக வாழும் அபூர்வ மனிதர்களுள் ஒருவர்தான் மகேந்திரவர்மர். காலநடையில் அறிவியல் அற்புதங்கள் வளரும், மாறும், தேயும், அழியும். ஆனால், கலைப்படைப்புகள் எவ்வளவுதான் மாற்றங்களை, முன்னேற்றங்களைச் சந்திக்க நேர்ந்தாலும், பழைமைக்குள்ள மதிப்பும் சிறப்பும் குன்றுவதேயில்லை.

கலைஞர்கள் கடவுளைப் போல, அவர்களும் படைப்பதால். கலைஞர்கள் கவிஞர்கள் போல, அவர்கள் படைப்புகளும் கவிமொழி பேசுவதால். கலைஞர்கள் சரித்திரம் போல, அவர்தம் படைப்புகள் காலங்கடந்தும் நிற்பதால். மகேந்திரவர்மர் கலைஞர்களின் கலைஞர், கலைவரலாற்று முதல்களை முடிவின்றிச் சுமப்பதால். முன்னோக்கிப் பார்ப்பதையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டிருந்த இப்பேரறிவாளரை, இவரின் புனைபெயர்களுள் ஒன்றான. ‘அபிமுகன்’ என்று அழைத்துப் பெருமைப்படுத்துவதுதான் எத்தனை பொருத்தமானது!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in