

இலங்கையின் நான்காம் கட்டப் போர் முடிவடைந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஈழத் தமிழ் மக்களின் வாழ்வை வெகுவாகப் பாதித்த அந்தப் போர் பற்றிய பதிவுகளை ஈழத் தமிழ் இலக்கியம் பலவாறு பதிவுசெய்து வருகிறது. அந்த வகையில் தீபச்செல்வனின் படைப்புகள் கவனிக்கத்தக்கவை. கவிதை, கட்டுரை, கதைகள் எனப் பல வடிவங்களில் தீபன் அந்தச் சூழலை எழுதிவருகிறார். அந்த வரிசையில் 2009 காலகட்டப் போரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வகித்த பங்கு என்ன என்பதைத் தனது ‘பயங்கரவாதி’ நாவல் வழி அவர் பதிவுசெய்துள்ளார்.
இந்த நாவல் மாறன் என்கிற கதாபாத்திரத்தை நாயகனாக முன்னிலைப்படுத்துகிறது. ஆனால் மலரினி, துருவன், சுதர்சன், பாரதியம்மாள் எனப் பலரின் கதைகளையும் சொல்கிறது. ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் உக்கிரமான போர் நடந்த பின்னணியில் யாழ்ப்பாணத்தை இந்நாவல் கதைக்களமாகக் கொண்டுள்ளது. புலிகளின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகள், திரிகோணமலை எனப் பகுதிகளும் வருகின்றன. ஆனால், யாழ்ப்பாணச் சூழலே நாவல் சொல்ல விரும்பிய மையம். கிளிநொச்சிப் பகுதியில் பிறந்து வளர்ந்து கல்லூரிப் படிப்புக்காக மாறன் யாழ்ப்பாணப் பகுதிக்குள் நுழைகிறான். இயல்பான வாழ்க்கைப்பாடுள்ள பகுதி என அரசு அறிவித்த அந்தப் பகுதியில் அவனுக்கு உருவாகும் பதற்றத்தைத் தொடக்கத்திலேயே நாவல் சித்தரித்துவிடுகிறது. சோதனையின்போது சிதறிய ‘ஈழ இலக்கிய வரலாறு’ புத்தகத்தைப் பார்த்த இலங்கை ராணுவ அதிகாரி, ‘எல்டிடிஈ ஈழம் புடிக்கிறது, நீ ஈழம் படிக்கிறது?’ எனக் கேட்கிறார். ஈழம் என்ற சொல் பயன்பாடே இலங்கை ஆதிக்கத்துக்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது என்பதை இக்காட்சி பதிவுசெய்கிறது.
இதன் காலகட்டம் 2005-2009. ஆனால், நாவல் மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும்போது சற்றே பின்நோக்கிப் பயணித்துத் திரும்புகிறது. மாறனின் கதை பத்து இருபது வருஷங்களுக்கு முன்பு நடக்கிறது. முகத்துவாரத்தில் தன் நண்பருடன் மீன் பிடிக்கச் செல்கிறார் சோழன். மனைவி, கைக்குழந்தையான மாறன், வயல் வரப்பு என ஓர் அழகான வாழ்க்கை அங்கே இருக்கிறது. அந்த நினைப்பில் தூண்டிலில் கவனம் குவித்திருக்கிறார். விடிந்தும் விடியா ரம்மியமான காலைப் பொழுது. அந்தப் பொழுதுக்கு திடீரென வாளும் துப்பாகிகளும் வந்திறங்குகின்றன. நண்பரின் தலையைத் துப்பாக்கிக் குண்டு துளைக்க, சோழனின் தலையை வாள் துண்டாக்குகிறது. ஒரு ஜனநாயக அரசின் ராணுவம் வாளைப் பயன்படுத்தித் தன் சொந்த மக்களின் தலைகளைக் கொய்கிறது. அதிர்ச்சியூட்டும் இம்மாதிரிக் காட்சிகள் வழி இலங்கை இயல்பு வாழ்க்கையைக் கேள்விக்கு உட்படுத்துகிறது இந்நாவல். ‘தமிழ் நிலத்தில் சாவு ஒரு மலிந்த சரக்கு/அழிவு விலை குறைந்த பொருள்’ என்ற மு.பொன்னம்பலத்தின் கவிதைச் சொற்களைப் போல் ஈழத்தின் அழிவை இம்மாதிரிக் காட்சிகள் வழி நாவல் விவரிக்கிறது.
புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியின் வாழ்க்கையை சுதர்சன் என்கிற கதாபாத்திரத்தின் கிளிநொச்சிப் பயணம் வழி தீபன் சித்தரித்துள்ளார். இந்த நாவலில் போர்க் காட்சிகள் நேரடியாகச் சித்தரிக்கப்படவில்லை; போர் மக்களின் வாழ்க்கையில் நிகழ்த்தும் குறுக்கீடுகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. போரால் நிலத்தை, உறவுகளை, வாழ்க்கையை இழந்தவர்கள் நாவலின் குறுக்கும் நெடுக்குமாகப் பயணிக்கிறார்கள். பிரதான கதாபாத்திரங்களுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் உணர்வுபூர்வமான பின்னணியை தீபன் சொல்கிறார். பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் இதனுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள்.
அந்த மாணவர்கள் சொந்த மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி அறவழியில் போராட்டம் நடத்துகிறார்கள். அதை ஒரு ஜனநாயக அரசு எப்படிக் கையாண்டது என்பதை சான்றுடன் தீபன் இதில் ஆவணப்படுத்தியுள்ளார். மாணவத் தலைவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்; அடித்து நொறுக்கப்படுகிறார்கள். நான்காம் கட்டப் போர் தொடங்கிய பிறகு மாறும் யாழ்ப்பாண நகரக் காட்சிகள் பீதியுடன் விவரிக்கப்பட்டுள்ளன. அந்தக் காலகட்டத்தில் சிக்கிக்கொள்ளும் மக்களை ராணுவம் எதிராளியைப் போல் நடத்துவதையும் தீபன் சித்தரித்துச் செல்கிறார்.
இந்நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ள நிலம், சங்கக் கவிதைகளின் காட்சிகளைப் போல் விரிகிறது. ஈழத் தமிழ்ப் பரப்பின் மரங்கள், மலர்கள், பறவைகள், சிறு விலங்குகள் என செளந்தர்யம் மிளிரும் காட்சிகளைப் பெரும் விருப்பத்துடன் தீபம் விளம்பியுள்ளார். நாவலின் காட்சிகளுக்கும் மாந்தர்களுக்கும் அந்நிலத்தின் தனித்துவமான மலர்களைச் சூட்டுகிறார் தீபன். நாவலின் கதாநாயகிக்கோ நந்தியாவட்டம், செவ்வரத்தம், வெண் நெருஞ்சி, தென்னப் பூ என மலர்களால் ஆலாபனை செய்கிறார். யாரும் இல்லாத காட்சியில் ஒரு பறவையோ சிறு விலங்கோ இருக்கிறது. இது ஒருவகையில் நாவலில் இல்லா இயல்பு வாழ்க்கையின் எஞ்சிய நினைவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. கூடு கட்டும் அணில் தவறவிடும் ஒரு பஞ்சுத் துண்டை மாறன் அதனிடம் தூக்கிப் போடுகிறான். அது நன்றி சொல்வதைப் போல் பார்த்தது என ஒரு காட்சியில் வருகிறது. இது உயர்வு நவிற்சியாகத் தோன்றினாலும் இதற்குள் இருக்கும் மனம், ஈழப் போர்ச் சூழலில் கவனிக்கத்தக்கது. நாவலில் கையாளப்பட்டிருக்கும் மொழி ஈழத் தமிழ்ப் பயன்பாட்டுச் சொற்களுடன் பசுமையாக உள்ளது. சங்கத் தமிழ்ச் சொற்கள் ஈழத்தில் பயன்பாட்டில் உள்ளதை இந்த நாவல் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது. கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மட்டுமல்லாமல் விவரிப்பு மொழியிலும் இந்த ஈழத் தமிழ்ச் சொற்களைப் பார்க்க முடிகிறது.
புலம்பெயர் காட்சிகள் நாவலில் அடிக்கடி நிகழ்கின்றன. உறவுகளை, நிலத்தை, நினைவுகளை அங்கே விட்டுவிட்டு ஈழ மக்கள் நடந்த அளக்க முடியாத துயரத்துக்குள் தீபனின் விவரிப்பு நம்மை அழைத்துச் செல்கிறது. பெண்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள். ஒரு தெய்வம் உடைத்து நொறுக்கப்படுகிறது. நினைவுகளோ அழிக்கப்படுகின்றன. எளிமையான மனிதர்களின் உறவுகள் கபடமில்லாமல் நாவலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. காதல் பூப்பதும் நட்பு அரும்புவதும் சட்டென நிகழ்கிறது. அதை பெரும் விவரிப்புக்குள் நாவல் எடுத்துச் செல்லவில்லை. போர்ச் சூழலின் காட்சிகள் துரித கதியில் நாவலில் சொல்லப்பட்டுள்ளன. கதை சொல்லி நாவலின் நிகழ்வுகளில் அந்த மனிதர்களில் ஒருவராக சாட்சியம் வகிக்கிறார். அதனால் நிகழ்வுகளுக்கு இடையில் விவரிப்பில் கதைசொல்லி ‘எழுத்தாளர்’ என்ற நிலையை எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் எழுத்தாளரின் விவரிப்பு என்ற குறுக்கீட்டை நிகழ்த்தவில்லை. நடந்த சம்பவங்களின் போக்கில் கதை செல்கிறது.
ஈழப் போர்க் காலகட்டத்தில் அதற்கு அருகே நடந்த ஓர் அறப்போராட்டத்தையும் இலங்கை ராணுவம் அதைக் கையாண்ட விதத்தையும் சொன்ன வகையில் இந்நாவல் சர்வதேச அளவில் வைத்துப் பேசப்பட வேண்டியது எனலாம்.