மீண்டும் பிரபாகரன் சர்ச்சை: ஈழத் தமிழருக்கு மீட்சி தருமா?
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியிருக்கும் கருத்து, உலகமெங்கும் உள்ள தமிழ்ச் சமூகத்தின் பேசுபொருளாகியிருக்கிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர், குறிப்பாக இன்றைய இலங்கைச் சூழலில், மீண்டும் பிரபாகரனின் இருப்பு குறித்த பேச்சால் பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. பழ.நெடுமாறனின் அறிவிப்பால் ஈழத் தமிழ் மக்களுக்கு மீட்சி கிடைக்குமா என்பதை முக்கியமாக ஆராய வேண்டியிருக்கிறது.
இலங்கை அரசின் எதிர்வினை: 2009 மே 18ஆம் தேதியன்று, ஈழ இறுதிப் போர் முடிவில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதற்கு முந்தைய நாளில் பிரபாகரனின் சடலம் என முகத்தை மட்டும் காண்பித்தனர். அது சடலம் போலின்றி ஒளிப்படத்தை வைத்துச் செய்த பொம்மையைப் போல இருந்தது. ஆனால், இறுதியில் போரில் உயிர் துறந்த பிரபாகரனின் சடலம் கைப்பற்றப்பட்டதாகக் காட்டப்பட்டது நம்பக்கூடியதாக இருந்தது. பிரபாகரனின் மரணம் தொடர்பில் இலங்கை அரசு குழப்பமான நிலைகளைக் காண்பித்தமையால், ஈழத்தில் மாத்திரமின்றி உலகத் தமிழர்களிடமும் அது குறித்து ஒரு சந்தேகம் எழவே செய்தது.
பழ.நெடுமாறன் இப்படிப் பேசுவது புதிதல்ல. 2009 மே 17ஆம் தேதி ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்குப் பின்னரும் பிரபாகரன் உயிருடன் உள்ளார்; விரைவில் ஐந்தாம் ஈழப் போரைத் தொடங்குவார் என்று அவர் கூறிவந்தார். இப்போது திடீரென அவர் மீண்டும் தெரிவித்திருக்கும் இந்தக் கருத்து இலங்கையில் பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தகவல் உண்மையில்லை என்று திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத்.
“புத்த பிரான் இலங்கையில்தான் பிறந்தார் எனச் சிலர் கூறுகின்றனர். பேச்சுச் சுதந்திரம் அனைவருக்கும் உண்டல்லவா” என சூசகமாகப் பேசியிருக்கிறார் இலங்கை அரசின் அதிகாரபூர்வ அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்த்தனா. அத்துடன் நாட்டின் பாதுகாப்பை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பலப்படுத்தி வருவதாகவும் கூறியிருக்கிறார். பிரபாகரன் மாத்திரமின்றி அவருடைய மனைவி, பிள்ளைகள் எல்லாரும் கொல்லப்பட்டுவிட்டதாக இறுதிப் போரில் ராணுவப் படைத் தளபதியாகச் செயல்பட்டவரும் இன்றைய பாதுகாப்புச் செயலாளருமான மேஜர் கமால் குணரத்தினா கூறியிருக்கிறார். முன்னாள் ராணுவ அதிகாரியும் இன்றைய பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர, இந்தியாவுக்கு பிரபாகரனின் டிஎன்ஏ பரிசோதனை முடிவையோ மரணச் சான்றிதழையோ காண்பிக்கத் தேவையில்லை என்றும் பிரபாகரன் தமது எதிரி, இந்தியாவின் எதிரியல்ல என்றும் சொல்லியிருக்கிறார்.
அவசியம் என்ன?: ஈழப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 14 ஆண்டுகள் ஆகின்றன. போரின் காயங்களிலிருந்து ஈழ மக்கள் மீண்டெழுந்துவருகிறார்கள். இனப் படுகொலைக்கான நீதிக்காகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்காகவும் தினமும் போராட்டங்கள் நடக்கின்றன. இத்தகைய போராட்டங்களில் ஈடுபடும் மக்கள் பலர் மரணிக்க... மரணிக்கப் போராட்டம் தொடர்கிறது. இன்னமும் போரின் பாதிப்பு ஒரு போரைப் போலத் தெரடர்கிறது. பல தமிழ் இளைஞர்கள் இன்னமும் சிறைகளில் அரசியல் கைதிகளாக வாடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழர்களின் நிலங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையில், எந்த ஈழத் தமிழரையும் சிறையில் எளிதில் தள்ளி ஒடுக்கும் சூழல்தான் இங்கே நிலவுகிறது.
இந்த நிலையில், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் எனும் பேச்சு அவசியமானதா என்பதே கேள்வி. போரின் இறுதியில் எத்தனையோ மர்மங்களும் குற்றங்களும் மறைந்திருக்கின்றன. இனங்காண முடியாத மரணங்களும் இல்லாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைகளும் இன்னமும் புலப்படுத்தப்படவில்லை. அத்தனையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதைத்தான் ஈழ மக்கள் வலியுறுத்திவருகின்றனர். சர்வதேச விசாரணை வழியாக, பன்னாட்டு நீதிப் பொறிமுறை அடிப்படையில் அனைத்தும் வெளிச்சப்படுத்தப்பட்டு நீதி வழங்க வேண்டும் என்பதே ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பு.
காத்திருக்கும் ஆபத்துகள்: இந்தச் சூழலில், பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பு ஈழத் தமிழ் மக்களைத்தான் வெகுவாகப் பாதிக்கும். ராணுவத்தை அகற்ற மாட்டோம் என்று பிடிவாதம் காட்ட இலங்கை அரசுக்கு இது கூடுதல் வாய்ப்பளிக்கும். ஈழ மக்கள் தொடர்ந்து ராணுவப் படைகளுக்கு மத்தியிலும் ராணுவ முகாம்களுக்கு மத்தியிலும் வாழும்படி செய்துவிடும். தமிழர் நிலங்களை விடுவிக்க மறுக்கும் இலங்கை அரசுக்குச் சாதகமான சூழலை உருவாக்கும். சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளைத் தொடர்ந்து சிறையில் தள்ளும். ஆக, ஈழத் தமிழ் மக்கள் எத்தனையோ இழப்புகளைச் சந்தித்துப் போராடிவரும் நிலையில், ஒரே ஒரு பேச்சின் வாயிலாக 2009ஆம் ஆண்டுக்கு அவர்களைத் தள்ளிவிட்டிருக்கிறார் பழ.நெடுமாறன். அவரது பேச்சு சிங்கள இனவாத அரசியல்வாதிகளுக்குப் பெரும் தீனியாகவும் அமைந்துவிட்டது. அவர்கள் இப்போதே இதைப் பயன்படுத்தி ஈழ மக்களை நோகடிக்கத் தொடங்கிவிட்டார்கள். பழ.நெடுமாறன் ஈழத்தில் இனவெறியை விதைக்கிறார் என்றும் குற்றம்சாட்டுகிறார்கள்.
மறுபுறத்தில் பழ.நெடுமாறனின் பேச்சைப் பயன்படுத்தி, ராஜபக்சவினர் அதிகாரத்தைக் கைப்பற்றத் திட்டமிடப்படுவதாகச் சிங்கள ஊடகம் ஒன்று கூறுகிறது. அரசியலில் பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கும் மகிந்த ராஜபக்சவும் கோத்தபய ராஜபக்சவும் இப்போது பிரபாகரன் உயிருடன் உள்ளார் என சிங்கள மக்கள் மத்தியில் இனவெறியை ஏற்படுத்தி, அதன் ஊடாக அரசியல் அதிகாரத்தைப் பெறும் வாய்ப்புகள் உள்ளன.
அத்துடன் போருக்குப் பிறகு சமூக மட்டத்தில் கலந்து வாழும் முன்னாள் போராளிகளையும் இது பாதிக்கும். ஏற்கெனவே அவர்களில் பலர் மர்ம மரணங்களைத் தழுவிவருகிறார்கள். அத்துடன் அவர்கள் மீதான கண்காணிப்பும் விசாரணையும் அழுத்தமாகத் தொடர்கின்றன. இந்த நடவடிக்கைகளை இலங்கை ராணுவம் இனிமேல் இன்னமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அறமற்ற செயல்: பிரபாகரன் உயிருடன் இருப்பது உண்மையானால் ஈழத் தமிழ் மக்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள். அதே நேரம், லட்சம் ஈழ மக்கள் கொல்லப்பட்ட களத்திலிருந்து அவர் மாத்திரம் தப்பிச் சென்று ஒரு நாட்டில் தஞ்சமடைபவர் அல்ல; பிரபாகரன் அப்படியான தலைவர் அல்ல என்பதையே ஈழ மக்கள் உறுதியாக நம்புகின்றனர். நிலைமை இப்படியிருக்க, ஈழத் தமிழர்களின் பிரச்சினையில் மிக நீண்ட காலமாகத் தொடர்புபட்டு ஆதரவளித்து வந்த பழ.நெடுமாறன், ஈழத்தில் இன்றுள்ள சூழலைப் புரிந்துகொள்ளாமல் இப்படிப் பேசியிருப்பது வருந்தத்தக்கது. தன்னுடைய நலன்களுக்காக, பிழையான வழிநடத்தல்களால் இப்படிப் பேசுவது அறமா என அவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.
ஈழ மக்கள் மிக விரும்பும் போராளித் தலைவரான பிரபாகரனை வைத்தே ஈழ மக்களுக்கு இத்தனை பாதிப்புகளை ஏற்படுத்துவது என்பது பிரபாகரனுக்கு எதிரான செயல். 2009 ஆயுதப் போராட்ட மௌனிப்புக்குப் பிறகு, சர்வதே நீதி நோக்கிப் பெரும் சவால்களின் மத்தியில் செல்லும் ஈழ மக்களின் போராட்டத்தையே இது பாதிக்கும் என்பதைத்தான் அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.
