உழைப்புச் சந்தை: ஒரு குறுக்குவெட்டுப் பார்வை

உழைப்புச் சந்தை: ஒரு குறுக்குவெட்டுப் பார்வை
Updated on
2 min read

இப்போது தனக்கு 52 வயது என்கிறார் முருகன். அவரது வீட்டருகே இருக்கும் கல்லூரி கட்டப்பட்டே 50 ஆண்டுகள் இருக்கும். தான் சிறுவனாக இருந்தபோது அந்தக் கல்லூரியே உருவாகவில்லை என்றும் முருகன் சொல்கிறார். அவ்வாறெனில், அவருக்குக் குறைந்தபட்சம் 60 வயதாவது இருக்க வேண்டும். அவர் குடியிருக்கும் பகுதி அரை நூற்றாண்டுக்கு முன் ஒரு குக்கிராமம். இன்று அது மாநகராட்சி எல்லைக்குள் இருக்கிறது. வீட்டின் அருகிலேயே தொடக்கப் பள்ளி, கல்லூரி இருந்தாலும் கல்வி குறித்து அவரோ அவரது பெற்றோரோ நினைத்திருக்கவில்லை. இன்றைக்கு அவர் விவசாயக் கூலித் தொழிலாளி. காலையில் 7 மணிக்குப் போனால் மதியம் 2 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுகிறார்.‌ இது தவிர, நகர்ப் பகுதியில் உள்ள வீடுகளைச் சுற்றி புல் வெட்ட, புதிதாக வீடுகள் கட்டத் தொடங்கினால் அந்த இடங்களைச் சுத்தம் செய்ய என நாளொன்றுக்கு ரூ.1,500 வரைகூடச் சம்பாத்தியம் பெறுகிறார்.

அவர் முதன்முதலாகச் செய்த வேலை ஆடு மேய்த்தல். வருடத்துக்கு ரூ.200 சம்பளம். 10 வருடங்களுக்குப் பின்னர் அந்த வேலையைவிட்டு நின்றபோது, வருடம் ரூ.700 சம்பளம்.‌ இப்போது விவசாயக் கூலித் தொழிலில் நாளொன்றுக்கு ரூ.700 சம்பாதிக்கிறார். இதில் ஆரம்பத்தில் தினக்கூலியாக ரூ.12 கிடைத்தது. படிப்படியாக அதிகரித்து ரூ.80 வரை வாங்கிக்கொண்டிருந்த நிலையில், அதைவிட்டு போர்வெல் வேலைக்குச் சென்றார். மாதம் ரூ.100 சம்பளம். ஏழு வருடம் பயணித்தார். வேலையைவிட்டு நின்றபோது தினப்படி ரூ.50. திருமணத்துக்குப் பின்னர் மீண்டும் விவசாயக் கூலி.

முருகனின் மனைவி வீட்டு வேலைக்குச் செல்கிறார். மாதம் ரூ.4,500 வருவாய் ஈட்டுகிறார். முருகனுக்குத் தினமும் வேலை கிடைக்கும் என்றெல்லாம் உத்தரவாதம் இல்லை. ஆனால், தினமும் இரண்டு குவார்ட்டர் மது நிரந்தரம். அதற்கு ரூ.280; வெற்றிலை, பாக்கு, புகையிலைக்கு ரூ.20 என ரூ.300 அவருக்கு மட்டுமே செலவாகிறது. எனினும், இருவரும் கடும் உழைப்பாளிகள் என்பதால், கடன் இல்லை. முருகனின் தந்தை சம்பாதித்துவைத்த 7 சென்ட் நிலத்தில் அவர் பங்குக்கு 2 சென்ட் வந்தது. அதில் ரூ.90 ஆயிரம் செலவில் குடிசை அமைத்துள்ளார். இன்றைய விலைவாசியில் வீடு கட்டுவதெல்லாம் முருகனுக்குச் சாத்தியமே இல்லை.

எனினும், அவரது சமூகப் பொருளாதார வாழ்க்கை நிலை எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. பண வருவாய் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், விலைவாசி அதற்கு மேல் அதிகரித்திருக்கிறது. தனது தந்தையின் காலத்தில், 15 சென்ட் நிலம் ரூ.30க்கு விற்பனைக்கு வந்தபோதும் பணம் இல்லாததால் 7 சென்ட் தான் அவரால் வாங்க முடிந்தது என்று இப்போதும் முருகன் வருத்தப்படுகிறார். ஆனால், இன்றைக்கு முருகனால் ஒரு சென்ட்கூட வாங்க இயலாது. விவசாயக் கூலித் தொழிலாளிகளுக்காக எத்தனையோ திட்டங்கள் வந்துள்ளன. முருகன் போன்றவர்களுக்கு அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியவில்லை என இந்தப் பிரச்சினையை நாம் எளிதாகப் புறந்தள்ளிவிட்டுச் செல்லலாம். அவரைப் பொறுத்தவரை முன்பைவிட இப்போது வாழ்க்கை நன்றாக இருக்கிறது. அவ்வளவுதான்!

முருகனின் வாழ்க்கையை ஒரு தனிமனித வாழ்வாக நாம் புரிந்துகொள்ளக் கூடாது. உழைப்புச் சந்தையின் இந்திய அளவிலான போக்குகளை அறிந்துகொள்ள அவர் குறித்த தகவல்கள் பயன்படுகின்றன எனலாம். முருகன், வருடாந்திரச் சம்பளத்துக்கு ஆடு மேய்க்கச் சென்ற காலத்தில் கிராமப்புறங்களில் பெரும்பாலான வேலைகள் வருடக் கூலி அடிப்படையிலேயே தீர்மானம் செய்யப்பட்டன. பண்ணை அடிமை முறை அல்லது ஒருவகைக் கொத்தடிமை முறை என இதைக் கொள்ளலாம். அடுத்து, தினக்கூலியாகப் பல்வேறு பணிகளைச் செய்துவந்த முறைமை. தற்போதைய முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பில் முறைசாராத் தொழிலாளிகளாக மக்கள் மாற்றப்பட்டனர் அல்லது மாற்றம் அடைந்தனர். தற்போது அவர் செய்துவரும் வேலைகள் அதன் அடுத்த கட்டமான ‘கிக்’ பொருளாதாரத்தின் (Gig Economy) தன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளன. முற்றிலும் தற்காலிகமாக, பகுதி நேரமாக, துண்டுதுண்டாக, வெவ்வேறு வேலைகளை வெவ்வேறு ஒப்பந்ததாரர்களிடம் எந்தவிதப் பணிப் பாதுகாப்பும் இன்றி செய்துவருவதையே இந்த ‘கிக்’ பொருளாதாரத் தன்மையில் தொழிலாளிகளின் நிலையாகக் குறிப்பிடலாம். 50 வருடங்களுக்கும் மேலாக உழைப்புச் சந்தையில் (Labour Market) முருகன் தன் உழைப்பை வழங்கிவந்தாலும், ஜமீன்தாரி முறையிலான வேலைத் தன்மை ‘கிக்’ பொருளாதாரமாக மாற்றம் அடைந்தாலும் பொருளியல்ரீதியாக ‌மாற்றம் இல்லை என்பது தெளிவு.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடைந்துவிட்டது என்கிறோம். ஆனால், அதற்குள் 94% மக்கள் முறைசாராத் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக நாட்டின் வளர்ச்சி இருக்கிறதா என்று சிந்திக்க வேண்டும். இதற்கு முருகனின் வாழ்க்கை ஒரு சாட்சியம். அரசு இப்படியான தொழிலாளர்களின் வாழ்க்கையிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு உழைப்பாளர்களுக்கான கொள்கை உருவாக்கம் செய்தால்தான் அவர்களது வாழ்வில் மாற்றங்கள் நிகழும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in