துருக்கி துயரம்: பேரழிவு கற்றுத்தரும் பாடம்

துருக்கி துயரம்: பேரழிவு கற்றுத்தரும் பாடம்
Updated on
2 min read

துருக்கியிலும் அதன் அண்டை நாடான சிரியாவிலும் பிப்ரவரி 6 அன்று ஏற்பட்ட நிலநடுக்கம், இந்த ஆண்டின் மிகப் பெரிய துயரங்களில் ஒன்றாகப் பதிவாகியிருக்கிறது. இதுவரை 41,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் நிலையில், இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது. கடும் குளிர்காலம் என்பதால் மீட்புப் பணிகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

அடிக்கடி நிலநடுக்கப் பேரழிவைச் சந்திக்கும் நாடு துருக்கி. ‘அனடோலியன்’ எனப்படும் மேலடுக்குத் தட்டில் அமைந்திருக்கும் இந்நாட்டில், 1999இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 17,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2020இல் மட்டும் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

பொறியியல் உள்ளிட்ட பல அறிவியல் துறைகளில் நாம் உயரங்களைத் தொட்டிருந்தாலும், இயற்கைப் பேரழிவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை. குறிப்பாக, எதிர்கொள்ளவே முடியாத பேரழிவான நிலநடுக்கம் பல உயிர்களைப் பறித்துவிடுகிறது. பெரும் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்படுவது குறித்து முன்கூட்டியே தெரிந்துகொள்வதற்கான நம்பகமான வழிமுறைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, நிலநடுக்கத்தால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்க, பாதுகாப்பான கட்டிடங்களை உருவாக்கும் வழிகளைத் தேடுவதுதான் நம் முன் உள்ள ஒரே சாத்தியக்கூறு.

பாதுகாப்பற்ற கட்டுமானங்கள்: துருக்கி பல்கலைக்கழகப் பேராசிரியர் அஹமது யாகுட்டும், அவரது சக பேராசிரியர்களும் இணைந்து ஆய்வுக் கட்டுரை ஒன்றை 2014இல் வெளியிட்டுள்ளனர். அதில், ‘செங்கல் மற்றும் கான்க்ரீட்தான் துருக்கியில் பிரதானக் கட்டிடப் பொருள்கள். இங்கு பல கட்டிடங்களுக்கு நிலநடுக்க அதிர்வலைகளை எதிர்கொள்ளும் திறன் கிடையாது’ என அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

செங்கல் கட்டிடங்களும், நடுத்தர கான்க்ரீட் கட்டிடங்களும் துரித முறையில் மதிப்பீடு செய்யப்படுவதாகவும், ஏராளமான கட்டிடங்கள் ‘விசித்திர’மான முறையில் கட்டப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், ‘கட்டிடங்களின் உண்மை நிலையை மனதில்கொண்டு, அபாய நிகழ்வுகளைத் தடுக்க முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்’ என்றும் வலியுறுத்தியிருக்கின்றனர்.

என் நண்பர் ஒருவர் சமீபத்திய துருக்கி நிலநடுக்கக் காணொளி ஒன்றைப் பகிர்ந்து, “இந்தக் கட்டிடங்கள் இரும்புக் கம்பிகள் கொண்ட கான்கிரீட் கட்டிடங்களா அல்லது கல் கட்டிடங்களா?” எனும் கேள்வியை எழுப்பியிருந்தார். உயரமான பெரும் கட்டிடங்கள் நொடிப்பொழுதில் சரிந்து விழுவதைப் பார்த்து அவருக்கு இந்தச் சந்தேகம் எழுந்ததில் வியப்பு ஒன்றுமில்லை. இயற்கையின் விதிகள் மீறப்பட்ட அனைத்துவித கட்டிடமும் நிலநடுக்கத்துக்குப் பலிதான் என்று அவருக்கு விளக்க நான் முயலவில்லை. சுருக்கமாக ‘RC’ என்று பதிலளித்தேன்.

அதாவது, வலுவூட்டப்பட்ட கான்க்ரீட் (Reinforced Concrete). இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்படும் கட்டிடங்கள் நிலநடுக்கத்தை எதிர்கொள்ளக்கூடியவை எனப் பரவலாக நம்பப்படுகிறது. இது தொடர்பான விவாதங்களும் ஆய்வுகளும் நடக்கின்றன.

கட்டிட விதிகளும் பாதுகாப்பும்: சிறிய, நடுத்தரக் கட்டிடங்களை எடுத்துக்கொண்டால், இந்தியாவின் நிலைமை துருக்கியைவிட எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல. துருக்கி ஆய்வாளர்கள், ‘விசித்திரம்’ என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டது ‘கட்டிட விதிமுறைகளின் ஒட்டுமொத்தப் புறக்கணிப்பு’ என்பதைத்தான்.

கட்டிடக் கலை மனித நாகரிகம் தோன்றிய காலத்தியது. ஆகவே, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் கட்டுமானம் என்பது தொழில்நுட்பத்தை அதிகமாகச் சாராமல் பாரம்பரியத்தைச் சார்ந்தே உள்ளது. மேற்கத்திய நாடுகளில் தொழில்நுட்பங்களைப் பின்பற்றிக் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. விதிகளைப் பின்பற்றுவது அவர்களது பாரம்பரியமாகிவிட்டது. ஆகவே, நிலநடுக்க விதிகளைப் பின்பற்றிக் கட்டிடங்கள் கட்டப்படுவது அவர்களை நிலநடுக்கப் பேரழிவிலிருந்து ஓரளவேனும் பாதுகாக்கிறது.

இந்தியாவின் முயற்சி: இந்தியாவில் நிகழ்ந்த இரு நிலநடுக்கங்கள் குறிப்பிடத்தக்கவை: மகாராஷ்டிரத்தின் லாத்தூர் (1993), குஜராத்தின் பூஜ் (2001) நிலநடுக்கங்களுக்குப் பிறகு புதிய திட்டம் ஒன்று 2001இல் வகுக்கப்பட்டது. நாடு முழுவதும் பொறியாளர்கள், கட்டிட வடிவமைப்பாளர்கள், ஒப்பந்ததாரர்களுக்குப் பாதுகாப்பான கட்டிட முறைகள் பற்றிய பயிலரங்குகள் நடத்தப்பட்டன. பொறியியல் கல்லூரிகளுக்கு, நிலநடுக்கப் பாதுகாப்புடனான கட்டுமானம் குறித்த புத்தகங்கள் வழங்கப்பட்டன.

கட்டிடவியல் பாடத்திட்டங்களில் முக்கியமான மாற்றங்களை அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) பரிந்துரைத்தது. ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களுக்கு ஆறு மாதப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. தொலைத்தொடர்புப் பயிற்சிகள் போன்றவையும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன.

மக்களுக்கு விழிப்புணர்வு தேவை: பாரம்பரிய முறைக் கட்டிடங்களால் நிலநடுக்கத்தை எதிர்கொள்ள முடியாது என்பதுதான் நிதர்சனம். மேலும், நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய தன்மையுடன் கட்டிடங்களை உருவாக்கத் தேவையான கோட்பாடுகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை.

இது தொடர்பான புரிதல் ஏற்பட்டிருப்பதால், அரசுகள் பொறுப்புடன் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது ஆறுதலைத் தருகிறது. சமீபத்தில் தமிழ்நாடு அரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, அங்கீகாரம் இல்லாமல் கட்டிடம் கட்டுதல், சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து பெற்ற அனுமதியை மீறுதல் போன்ற தவறுகளை அதிகாரிகள் உடனுக்குடன் களஆய்வு செய்ய வேண்டும்; மூன்று வாரங்களுக்கு ஒருமுறை உரிய ஆவணத்தில் பதிவுசெய்ய வேண்டும். தவறு நிகழ்ந்தால், அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர்.

ஒத்துழைப்பு அவசியம்: அரசின் இந்த சீரிய முயற்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வும் தீவிரப்படுத்தப்பட வேண்டும். பொறியாளர்களுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் தொடர்ச்சியாகப் பயிலரங்குகள் நடத்தப்பட வேண்டும்.

அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளர்களின் திறமையை மக்களின் பயன்பாட்டுக்கு உரிய முறையில் கொண்டுசெல்ல வேண்டும். மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, பொறியாளர்கள் தங்களை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அங்கீகாரம் பெறும் பொறியாளர்களைத் தேர்வுசெய்யும் முறையிலும் சீர்திருத்தங்கள் தேவை.

இந்தியாவிடம் உள்ள மனிதவளமும் நிபுணத்துவமும் உலகத் தரம் வாய்ந்தவை. தேவையான விதிகளும் ஒழுங்குமுறைகளும் முறையாக இயற்றப்பட்டுள்ளன. அவற்றை அமல்படுத்துவதில் உண்மையான அக்கறை செலுத்தப்பட்டால், நிலநடுக்கம் போன்ற பேரழிவுகளைத் தாங்கும் கட்டிடங்களை அதிகரிக்க முடியும். துருக்கிப் பேரிடர் நமக்கு வழங்கும் பாடம் இதுதான்.

- சி.கோதண்டராமன் முன்னாள் முதல்வர், புதுவை பொறியியல் கல்லூரி; தொடர்புக்கு: skramane@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in