

சென்னை ஏழு கிணறு பகுதியில் உள்ள வள்ளலார் வாழ்ந்த இல்லத்துக்குச் சென்றிருந்தேன். ஏன் சென்றோம் என மனம் கசந்துவிட்டது. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய’ உச்சகட்ட மனிதநேயர். ‘மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்’ எனப் பறைசாற்றிய நன்னெறியாளர். ‘கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக!’ எனக் கொதித்தெழுந்த புரட்சித் துறவி.
அவர் வாழ்ந்த இல்லம் இப்போது குண்டும் குழியான தெருவில், நெருக்கமான வீடுகளுக்கு இடையில், பரிதாபமாகத் தோற்றமளித்தது. அதிர்ச்சியும் வேதனையும் மனதைக் கவ்வின. உலகச் சிந்தனையாளர்கள் வரிசையில் வைத்துப் போற்றத்தக்க ஓர் அரிய ஆளுமைக்கு நாம் செலுத்தும் மரியாதை இவ்வளவுதானா?
நினைவு இல்லம் என்பது எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தது அந்த வீடு. அவரது வாழ்வின் விவரங்கள், நூல்கள், ஆற்றிய பணிகள் - இப்படி எதுவுமே அங்கு இல்லை. அந்த இடம் தனியாருக்குச் சொந்தமாக இருப்பதாக அறிந்துகொண்டேன். அதேசமயம், நினைவில் வாழும் புரட்சியாளர் புலவர் கலியபெருமாள் - வாலாம்பாள் ஆகியோரின் மூத்த மகன் மறைந்த வள்ளுவனின் துணைவியார் அகிலா, நல்வாய்ப்பாக நீதிமன்றத்தை அணுகி, வள்ளலார் வாழ்ந்த இடத்தைத் தமிழ்நாடு அரசு தன் பொறுப்பில் எடுத்து, அதைப் பேண வேண்டும் எனச் சட்டப் போராட்டம் நடத்தி, ஏறக்குறைய அது நிறைவடையும் நிலையில் உள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு அருட்பிரகாச வள்ளலார் வாழ்ந்த சென்னை இல்லத்தைத் தன் பொறுப்பில் ஏற்று, அந்த இல்லத்தை எடுத்துக்காட்டான ஒரு நினைவு இல்லமாக மாற்றியமைக்க வேண்டும் என அனைவரும் குரல் கொடுப்போம்.
- கண.குறிஞ்சி (ஃபேஸ்புக்)