சத்தியவாணி முத்து சமரசமற்ற போராளி

சத்தியவாணி முத்து சமரசமற்ற போராளி
Updated on
3 min read

குலக்கல்வித் திட்டத்துக்கு எதிராகத் திமுகவினர் போராடிவந்த நேரம் அது. அண்ணா, நெடுஞ்செழியன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டதால் போராட்டம் இன்னும் தீவிரமடைந்திருந்தது. அப்போது முதல்வர் ராஜாஜி வீட்டின் முன்பு நிறைமாத கர்ப்பிணி ஒருவர் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தார்.

அவரை எதிர்கொள்ள முடியாமல் போலீஸாரே திகைத்து நின்றனர். யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் வீட்டின் மதிற்சுவரைக் கடந்து உள்ளே நுழைந்து தரையில் படுத்துப் போராட்டத்தைத் தொடர்ந்தார் அந்தப் பெண். அந்த உக்கிரம், காங்கிரஸ் அரசை அதிரவைத்ததுடன், திமுகவினரைப் பெருமிதம் கலந்த வியப்பில் ஆழ்த்தியது. கொள்கைப் பிடிப்பும் அபாரத் துணிச்சலும் நிறைந்த அந்தப் பெண் - சத்தியவாணி முத்து.

சமூகப் பார்வை: சமரசமற்ற போராளியாக இறுதிவரை வாழ்ந்த சத்தியவாணி முத்து, ஹோமியோபதி மருத்துவம் படித்தவர். அம்பேத்கர் நடத்திவந்த தாழ்த்தப்பட்டோர் சம்மேளனத்தின் சென்னை மாநகர மகளிர் பிரிவின் தலைவராகப் பொதுவாழ்வைத் தொடங்கியவர்.

அவரது தந்தை நாகைநாதர், பெரியார் முன்னெடுத்த தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு அதில் முனைப்புடன் ஈடுபட்டிருந்தார். சிறுமியாக இருந்தபோது பல கூட்டங்களுக்குச் சென்றுவந்த அனுபவம் சத்தியவாணியிடம் அரசியல் பார்வையை விதைத்திருந்தது.

அவரது முற்போக்குக் கொள்கைகளுக்குத் துணை நிற்கும் வகையில், எம்.எஸ்.முத்து அவரது வாழ்க்கைத் துணையாக அமைந்தார். பல முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்ட தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நன்றியுரை நிகழ்த்துமாறு சத்தியவாணிக்கு எம்.எஸ்.முத்து அளித்த ஊக்கம், சிறந்த மேடைப்பேச்சாளராக அவர் வளர உதவியது.

பின்னாள்களில் சத்தியவாணியின் உரைவீச்சைக் கேட்டு வியந்த பெரியார், தனது இயக்கத்தில் இணைய அழைப்பு விடுத்தது வரலாறு. பல போராட்டங்களில் சத்தியவாணிக்குத் துணையாகப் பயணித்தார் கணவர் முத்து. தனது தனித்தன்மை, தளராத போராட்ட குணம் ஆகியவற்றின் மூலம் தமிழக அரசியலில் தனக்கென தனித்த இடம்பிடித்தார் சத்தியவாணி.

வரலாற்று சாட்சியம்: பல முக்கியமான அரசியல் திருப்புமுனைகளின் சாட்சியமாக சத்தியவாணி இருந்திருக்கிறார். முற்போக்கான பல நிகழ்வுகளின் தொடக்கப்புள்ளியாகவும் திகழ்ந்திருக்கிறார். 1944இல் சேலத்தில், தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், திராவிடர் கழகமாக மாற்றமடைந்த தருணத்தில், அந்தக் கூட்டத்தில் அவரும் பங்கேற்றிருந்தார்.

1949 செப்டம்பர் 18 அன்று, சென்னை ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்காவில், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திமுக எனும் புதிய கட்சி தொடங்கப்பட்ட நிகழ்வின் மேடையை அலங்கரித்த தலைவர்களில் ஒரே ஒரு பெண் சத்தியவாணிதான். 1967இல் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், மக்களுக்கு என்ன நன்மைகளைச் செய்துவிட முடியும் என அண்ணா சற்றே தயங்கியபோது, அவருக்கு ஊக்கம் கொடுத்த தலைவர்களில் அவரும் ஒருவர்.

அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், முதல்வர் பதவிக்கு மு.கருணாநிதியின் பெயரை முன்மொழிந்தவர் அமைச்சர் கே.ஏ.மதியழகன்; வழிமொழிந்தவர் சத்தியவாணி. 1971 சட்டமன்றத் தேர்தலில் திமுக வென்ற பின்னர் அண்ணா சமாதிக்குத் திறந்தவெளி ஜீப்பில் கருணாநிதி, எம்ஜிஆர் போன்றோர் சென்றபோது அதில் சத்தியவாணியும் இருந்தார். இப்படி மிக நீண்ட அரசியல் பயணம் அவருடையது.

தனிச் சிறப்புகள்: 1957இல், திமுக களமிறங்கிய முதல் சட்டமன்றத் தேர்தலில் - வெவ்வேறு சின்னங்களுடன் சுயேச்சை வேட்பாளர்களாகப் போட்டியிட்டு - வெற்றி பெற்ற 15 பேரில் சத்தியவாணியும் ஒருவர். அந்த வகையில் அக்கட்சியின் முதல் பெண் எம்எல்ஏ அவர்தான்.

1967இல் முதன்முதலில் திமுக ஆட்சி அமைந்தபோது, அரிஜன நலத் துறை முதன்முதலாகத் தொடங்கப்பட்டது. அதன் அமைச்சர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அதேபோல, முதன்முதலில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற காங்கிரஸ் அல்லாத தமிழக அரசியல் தலைவர்களில் ஒருவர் சத்தியவாணி.

முதுகுளத்தூர் படுகொலைச் சம்பவம் தொடர்பாக காமராஜர் அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்போது, ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் வலிகளைத் தனது உரையில் கண்ணீருடன் பதிவுசெய்தார் சத்தியவாணி. திமுக ஆட்சிக்குவந்த ஒரே ஆண்டில் கீழ்வெண்மணியில் நடத்தப்பட்ட படுகொலைச் சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியிருந்த நேரம்.

முதல்வர் அண்ணாவின் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், கருணாநிதி, மாதவன் ஆகிய அமைச்சர்களுடன் சத்தியவாணியும் அங்கு சென்றார்; உதவிகளை ஒருங்கிணைத்தார். ஒடுக்கப்பட்டோர், பெண்கள் நலனில் அக்கறை செலுத்தினார். ஆதிக்க சக்திகளின் மிரட்டல்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டார்.

திமுகவிலிருந்து விலகல்: தனது வளர்ச்சியில் அண்ணா காட்டிய அக்கறையையும் வழங்கிய முக்கியத்துவத்தையும், ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைகளைப் பெற அவர் காட்டிய முனைப்பையும் சத்தியவாணி நெகிழ்ச்சியுடன் பதிவுசெய்திருக்கிறார். ஆரம்பத்தில் அரசியல்ரீதியாக அம்பேத்கருக்குக் கிடைத்த தோல்வியும், ஒடுக்கப்பட்டோருக்காகப் பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் முன்னெடுத்த போராட்டங்களும்தான் திராவிட இயக்கத்தின் மீதான ஈர்ப்பை சத்தியவாணிக்கு வழங்கின.

ஒருகட்டத்தில் அவரே திமுக மீது அதிருப்தி கொண்டது ஒரு கசப்பான திருப்பம். அவைத் தலைவர் பதவிக்குத் தன்னைப் பரிந்துரைத்தது உட்பட பல தருணங்களில் கருணாநிதி தனக்கு உறுதுணையாக இருந்ததாக சத்தியவாணி குறிப்பிட்டிருக்கிறார்.

சென்னை வியாசர்பாடியில் அம்பேத்கர் பெயரில் கலைக் கல்லூரி தொடங்கப்பட்டதற்குக் கருணாநிதியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சத்தியவாணி கொடுத்த அழுத்தம்தான் முக்கியக் காரணம். எனினும், அண்ணாவுக்குப் பிறகு திமுகவில் தாழ்த்தப்பட்டோருக்கான முக்கியத்துவம் குறைந்துவருவதாக 1974இல் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி கட்சியிலிருந்து வெளியேறினார் சத்தியவாணி.

அவருடன் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், இரண்டு மேலவை உறுப்பினர்கள், ஒரு எம்.பி ஆகியோரும் வெளியேறிய நிலையில், தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் எனும் கட்சியை சத்தியவாணி தொடங்கினார். முன்னதாக, குடும்பக் கட்டுப்பாடு திட்டம், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரைக் குறிவைத்து செயல்படுத்தப்படுவதாக அவர் எழுப்பியவிமர்சனம் திமுகவுக்குள் சலனத்தை ஏற்படுத்தியிருந்தது.

முதல்வர் கருணாநிதியின் ஆதரவாளராகவே கருதப்பட்ட ஆளுநர் கே.கே.ஷா, இது தொடர்பாக சத்தியவாணியிடம் விளக்கம் கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்த பல நிகழ்வுகள் திமுகவுக்கும் அவருக்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்தன.

இறுதி ஆசை: 1977 தேர்தலில் அதிமுக வென்ற பின்னர், அக்கட்சியில் தனது கட்சியை இணைத்துவிட்டார் சத்தியவாணி. அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் எனும் முறையில்தான் மத்திய அமைச்சரவையில் அவர் இடம்பிடித்தார். மகளிர்க்கு முக்கியத்துவம் வழங்குவது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை அண்ணாவின் வழி எம்ஜிஆர் முன்னெடுத்ததாகப் புகழாரம் சூட்டினார்.

அதேவேளையில், திமுக மீதான அவரது அபிமானம் முற்றிலுமாக விலகிவிடவில்லை. எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் 1989இல் திமுகவுக்குத் திரும்பினார். எனினும், தீவிர அரசியலில் அவர் ஈடுபடவில்லை. 1999 நவம்பர் 11 அன்று சத்தியவாணி மறைந்தார். அவரது உடலுக்கு திமுக கொடி போர்த்தப்பட்டு மரியாதை செய்யப்பட்டது; அது அவரது இறுதி ஆசையும்கூட.

திமுகவின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான சத்தியவாணி முத்துவின் நூற்றாண்டு இது. தமிழ்நாடு அரசு தானாகவே முன்வந்து விழா எடுத்துக் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால், தோழமைக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இது குறித்து அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்பதுதான் புரியாத புதிர்.

பிப்ரவரி 15: சத்தியவாணி முத்து நூற்றாண்டு

- வெ.சந்திரேமாகன்; தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in