

செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த 17 வயதுச் சிறுவன்,கடந்த மாதம் அங்குள்ள பணியாளர்கள் தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சிறார் நீதி வாரியத்தின் கீழ் இயங்கும் கூர்நோக்கு இல்லங்கள், பாதுகாப்பு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஆராய்ந்து மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார்.
சிந்தனையும் சட்டமும்: வளரும் சூழலும் பிற சமூகக் காரணிகளுமே ஒருவரைக் குற்றவாளியாக மாற்றுகின்றன. எனவே, குற்றமிழைத்த சிறார்களுக்குத் திருந்துவதற்கான வாய்ப்பளித்து, அதற்கான வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்னும் சிந்தனை 19ஆம் நூற்றாண்டிலிருந்து மேற்கத்திய நாடுகளில் பரவத் தொடங்கியது. எனவே, 18 வயதுக்கு உட்பட்டவர்களை விசாரிப்பதற்குத் தனி நீதி அமைப்பு வேண்டும் என்கிற கருத்தும் வலுப்பெறத் தொடங்கியது.
இந்தப் பின்னணியில் 1899இல் அமெரிக்காவின் சிகாகோவில் முதன்முறையாகச் சிறார் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்தியாவில் குற்றங்களில் ஈடுபடும் சிறார்களைக் கையாள்வதற்கு, சுதந்திரத்துக்கு முன் பல சட்டங்களில் பல்வேறு விதிமுறைகள் இடம்பெற்றிருந்தன. சுதந்திரத்துக்குப் பிறகு சிறார் குற்றங்களைக் கையாள வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு சட்டங்கள் இருந்தன. குற்றமிழைத்த சிறார்களை அடைத்து வைப்பதற்கான அரசு கூர்நோக்கு இல்லங்களும் உருவாக்கப்பட்டன.
1959இல் குழந்தைகள் உரிமைகள் குறித்த ஐநா பிரகடனத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டது. இதையடுத்து, 1960இல் இந்தியா முழுவதும் பொருந்தக்கூடிய குழந்தைகள் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம் எந்தக் குற்றத்தை இழைத்திருந்தாலும் ஒரு சிறுவரைச் சிறையில் அடைப்பதைத் தடைசெய்தது. குழந்தைகளுக்குப் பாதுகாப்பு, பராமரிப்பு, பயிற்சி,கல்வி, மறுவாழ்வு ஆகியவற்றை அளிப்பதற்கான ஏற்பாடுகளையும் இந்தச் சட்டம் உள்ளடக்கியிருந்தது.
மாற்றப்பட்ட சட்டங்கள்: ஐநாவின் சிறார் நீதி நிர்வாகத்துக்கான குறைந்தபட்ச விதிகள் 1985இன் அடிப்படையில் இந்தியாவில் குழந்தைகள்சட்டத்தை நீக்கிவிட்டுச் சிறார் நீதிச் சட்டம் 1986இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
குழந்தைகள் உரிமைகள் குறித்த ஐநா ஒப்பந்தம் 1992இன் அடிப்படையில், இந்தியாவில் சிறார் நீதி (குழந்தைகளின் பாரமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2000 நிறைவேற்றப்பட்டது. சிறாருக்கான நீதியை உறுதிசெய்வதில் மிகவும் முற்போக்கானதாகக் கருதப்பட்ட இந்தச் சட்டம், 18 வயதுக்கு உட்பட்ட அனைவரையும் குழந்தைகள்/சிறார்கள் ஆக அங்கீகரித்தது. மேலும், குற்றமிழைத்த சிறார்களின் மறுவாழ்வுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இந்தச் சட்டம் அமைந்திருந்தது. 2006இல் இந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், 18 வயதுக்கு உட்பட்டோர் இழைக்கும் குற்றங்கள், குறிப்பாகக் கொலை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட கொடூரமான குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்தது. 2012 ‘நிர்பயா’ சம்பவத்தில் ஒரு பெண்ணைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிக் கொன்ற குற்றவாளிகளில் ஒருவர், குற்றம் இழைத்தபோது 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்ததால், அவர் கூர்நோக்கு இல்லத்தில் மூன்று ஆண்டுகள் அடைத்துவைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இது சிறார் நீதிச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்னும் குரலை உரத்து ஒலிக்கச் செய்தது.
இதையடுத்து, சிறார் உரிமைகளை நிலைநிறுத்தும் அதேவேளையில், கொடிய குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதற்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்கிற சிந்தனையின் அடிப்படையில் சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 அமல்படுத்தப்பட்டது.
இந்தச் சட்டம் கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கொடிய குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள் 16 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், அவரை 18 வயதை நிறைவுசெய்தவருக்கு இணையாகக் கருதி நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வழிவகுத்தது. மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இதைக் கடுமையாக எதிர்த்தனர்.
16 வயதுக்கு மேற்பட்டவர் கொடிய குற்றங்களை இழைத்திருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தால் அவருடைய உடல்வலிமை, மனவலிமை, ஒரு குற்றத்தின் விளைவுகளை யோசிப்பதற்கான மனநிலை, குற்றத்துக்கு வித்திட்ட சூழல் ஆகியவற்றை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் அவரை 18 வயதுக்கு மேற்பட்டவராகக் கருத வேண்டுமா, சிறாராகக் கருத வேண்டுமா என்று சிறார் நீதி வாரியமே முடிவெடுக்க முடியும்.
சிறார் நீதி வாரியம்: 2000 ஆண்டுச் சட்டத்தின் பிரிவு 4, குற்றமிழைத்த சிறார்களைக் கையாள்வதற்கு இந்தச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, கடமைகளை நிறைவேற்றுவதற்கான சிறார் நீதி வாரியங்கள் அமைக்கப்பட வேண்டும் என்கிறது. 2015 சட்டம் அனைத்து மாவட்டங்களிலும் சிறார் நீதி வாரியம் (Juvenile Justice Board) அமைக்கப்பட வழிவகுத்தது. மாநில அரசுகளால் அமைக்கப்படும் இந்த வாரியங்கள், முதல்நிலை நடுவர் (First-class Judicial Magistrate) ஒருவரையும் ஏழு ஆண்டுகளாவது சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளிலோ பொதுநலப் பணிகளிலோ ஈடுபட்ட அனுபவம் உள்ள சமூகப் பணியாளர்கள் இருவரையும் உள்ளடக்கியிருக்கும். இந்த இருவரில் ஒருவர் பெண்ணாக இருக்க வேண்டும்.
குற்றமிழைத்த சிறார்களைக் கூர்நோக்கு இல்லங்கள், பாதுகாப்பு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு அனுப்பப் பரிந்துரைக்கும் அதிகாரத்தை சிறார் நீதி வாரியங்கள் பெற்றிருக்கின்றன.
- தொகுப்பு: கோபால்