

திரிபுராவில் நாளை நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல், இந்த ஆண்டின் முதல் தேர்தல் எனும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. 25 ஆண்டுகளாக ஆட்சிப்பொறுப்பில் இருந்த மாணிக் சர்க்கார் தலைமையிலான இடது முன்னணி, 2018இல் பாஜகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது.
அதை மீட்டெடுக்க இந்த முறை பிரயத்தனங்கள் நடக்கின்றன. இடது முன்னணியில் இந்த முறை காங்கிரஸும் இடம்பெற்றிருக்கிறது. 2019இல் தொடங்கப்பட்ட திப்ரா மோத்தா கட்சியும் (திரிபுரா பூர்வகுடிகள் முன்னேற்ற மண்டலக் கூட்டணி) இந்தத் தேர்தலில் களமிறங்கியிருப்பதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
60 இடங்களைக் கொண்ட திரிபுரா சட்டமன்றத்தில், 20 இடங்கள் பழங்குடியினருக்கான தனித்தொகுதிகள். மக்கள்தொகையில் 31.1% பழங்குடியினரைக் கொண்ட திரிபுராவில், அம்மக்களின் நலன் சார்ந்த அரசியல் நகர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த முறை இடது முன்னணி சார்பில் மாணிக் சர்க்கார் போட்டியிடவில்லை. பழங்குடியினத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் தலைவர் ஜிதேந்திர சவுத்ரி முன்னிறுத்தப்படுகிறார்.
மறுபுறம், பழங்குடிகள் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் பகுதிகளுக்கான வளர்ச்சித் திட்டங்களை பாஜக முன்வைக்கிறது. கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டி, மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன், இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட இலவச வாக்குறுதிகளையும் வழங்கியிருக்கிறது. இதுவரையிலான சாதனைகளுடன், பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் வழக்கமாக வைக்கப்படும் ‘இரட்டை இன்ஜின்’ முழக்கமும் ஓங்கி ஒலிக்கிறது.
இந்தத் தேர்தலில், திரிப்ராலாந்து தனிமாநிலக் கோரிக்கையை திப்ரா மோத்தா கட்சி முன்னெடுத்திருக்கிறது. கடந்த தேர்தலில் இதே கோரிக்கையை முன்வைத்த திரிபுரா பூர்விக மக்கள் முன்னணியுடன் பாஜக கூட்டணி சேர்ந்ததை மாணிக் சர்க்கார் விமர்சித்தார். எனினும், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அந்தக் கோரிக்கை குறித்து பாஜக விவாதிக்கவே முன்வரவில்லை என திரிபுரா பூர்விக மக்கள் முன்னணி சில மாதங்களுக்கு முன்புகூட குறைகூறியது.
ஆனால், இந்தத் தேர்தலில் அது குறித்து அக்கட்சி அமைதிகாக்கிறது. 55 தொகுதிகளில் பாஜக போட்டியிட, ஐந்து தொகுதிகளில் மட்டும் அக்கட்சி களம்காண்கிறது. திரிபுரா பிளவுபடுவதை அனுமதிக்க முடியாது எனக் கண்டிப்புடன் கூறிவருகிறது பாஜக.
இதுவரை ஒரு தொகுதியில்கூட வென்றிராத திரிணமூல் காங்கிரஸ், தங்களால்தான் பாஜக அரசைத் தோற்கடிக்க முடியும் என முழங்குகிறது. பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை எனும் நிலையில், 28 இடங்களில் மட்டும் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் குறித்து காங்கிரஸ் கடுமையாக விமர்சிக்கிறது. பாஜகவின் ‘சி டீம்’ எனும் விமர்சனத்தை திரிணமூல் எதிர்கொள்கிறது.
கேரளத்தில் எதிரும்புதிருமாக நிற்கும் மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் அதிகாரத்தைக் கைப்பற்ற திரிபுராவில் கைகோத்திருப்பதாகப் பிரதமர் மோடி விமர்சிக்கிறார். மார்க்சிஸ்ட் - காங்கிரஸ் கூட்டணி திப்ரா மோத்தா கட்சியுடன் தேர்தலுக்குப் பிறகான கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கக்கூடும் என்றும் கணிப்புகள் உண்டு. அக்கட்சித் தலைவர் பிரத்யோத் மாணிக்யா ‘கிங் மேக்கர்’ ஆவார்என்றும் பேசப்படுகிறது.
அக்கட்சி குறித்துத்தான் பாஜகவும் அதிகம் விமர்சிக்கிறது. பதிலுக்கு, பழங்குடியினத்தைச் சேர்ந்த திரெளபதி முர்முவைக் குடியரசுத் தலைவராக்கியது உள்ளிட்ட அடையாள அரசியலை மட்டுமே பாஜக முன்னெடுப்பதாக பிரத்யோத் மாணிக்யா விமர்சிக்கிறார். முடிவுகள் மார்ச் 2 இல் தெரியும்.