

தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு சாதியினரின் வாழ்க்கைவட்டச் சடங்குகளிலும் சில நம்பிக்கைகள் இடம்பெற்றுள்ளன. அடிப்படையில் இவை சாதி சார்ந்திருந்தாலும், கடந்தகால வரலாற்றின் எச்சங்களையும் தம்முள் அடக்கிக்கொண்டுள்ளன. இவ்வகையில் தமிழ்நாட்டில் வழக்கில் உள்ள ‘நெற்றிக்காசு வைத்தல்’ என்ற இறப்புச் சடங்கில், கடந்த கால வரலாற்றுத் தடயங்கள் சில புதைந்துள்ளன.
இறந்தவரின் நெற்றியில் நாணயத்தை வைப்பது பரவலான வழக்கமாக இன்றும் உள்ளது. இதுவே நெற்றிக்காசு எனப்படுகிறது. இறந்தவருக்கு நாணயம் எதற்கு? இதற்கான விடை தொல்லியலாளர்கள், மானுடவியலாளர்களிடம் உள்ளது.
தொல்லியல் சான்றுகள்: தொல்லியலாளர்கள் நிகழ்த்தும் அகழாய்வுகளில் புதைகுழிகளும் அடங்கும்.இவற்றில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இறந்தோரின் உடல்களை இந்தத் தாழிகளில் வைத்து அடக்கம் செய்துவந்துள்ளனர். எகிப்தியப் பிரமிடுகளில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் (மம்மிகள்) போன்று இவை பதப்படுத்தப்படவில்லை.
சடலங்கள் மக்கிப்போய் எலும்புகள் மட்டும் கிடைக்கின்றன. எலும்புகள் மட்டுமின்றி மட்பாண்டங்களும் போர்க் கருவிகளும் சுடுமண் உருவங்களும் கிடைத்துள்ளன. மட்கலயங்களில் தானியங்களை வைத்துப் புதைத்துள்ளனர். காலவெள்ளத்தில் தானியங்கள் மக்கிப்போய் அவற்றின் உமி மட்டும் பானைகளில் ஒட்டிக்கொண்டு அவை என்ன தானியம் என்பதற்குச் சான்று பகர்கின்றன.
பிரமிடுகளில் காணப்படும் பேழைகளில் மம்மிகள் இடம்பெற்றுள்ளன. இவை உயர் குடியினருடையன. குதிரைகளின் எலும்புக்கூடுகளும் மனித எலும்புக்கூடுகளும்கூடக் கிடைத்துள்ளன. எலும்புக்கூடுகள் அடிமைகளுடையன; குதிரைகளும் அடிமைகளும் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் தொல்லியலாளர்கள். மறு உலக வாழ்க்கையின் பயன்பாடு கருதியே இது நிகழ்ந்துள்ளது.
இறுதிச் சடங்குகளில்...: நிகழ்காலத்துக்கு வருவோம். ஒருவர் இறந்தவுடன் அவரது சடலத்தை நீராட்டிய பின் படுத்த நிலையிலோ அமர்ந்த நிலையிலோ வைத்துவிட்டு, அதன் தலைப்பகுதியில் நாழி என்னும் பழைய முகத்தலளவை நிறைய நெல் அல்லது அரிசியை வைப்பர். இதை ‘நிறை நாழி வைத்தல்’ என்று தென் மாவட்டங்களில் குறிப்பிடுவர். இறந்தவர் வெற்றிலை போடும் பழக்கம் உடையவர் என்றால், பிணத்தின் ஆடையில் வெற்றிலை, பாக்கு, புகையிலை போன்றவற்றை முடிந்து சுமந்துசெல்வர்; சுருட்டு முடிந்துவைப்பதும் உண்டு.
மானுடவியல் துறை இதை விளக்குகிறது: மனிதர்களிடமும் ஏனைய உயிரினங்களிலும் உயிரற்ற பொருள்களிலும் ஆவி என்கிற ஒன்று உறைந்திருக்கிறது என்ற நம்பிக்கை பண்டைய மனிதர்களிடம் நிலவியது என்கிற கருத்தை பிரிட்டனைச் சேர்ந்த மானுடவியலாளரான எட்வர்டு பர்னட் டைலர் ஒரு கோட்பாடாக வெளியிட்டார். அது ‘ஆவியம்’ (அனிமிசம்) எனப்பட்டது. அதனடிப்படையில் நோக்கினால், இறந்தவரது ஆவியின் தேவையை நிறைவேற்றவே இப்படையல்கள் படைக்கப்படுகின்றன.
முதுமக்கள் தாழியிலும் பிரமிடுகளிலும் காணப்படும் பொருள்கள் இறந்தவரின் தேவையை நிறைவுசெய்யும் நோக்கில் வைக்கப்பட்டவைதாம். வெற்றிலை, புகையிலை கட்டிவிடுதலும் வாய்க்கரிசி போடுதலும் இதே நோக்கில்தான் நிகழ்கின்றன. பிணத்தை எடுத்துச் செல்லும் வாகனத்தில் முறுக்கு, வாழைப்பழம் கட்டுவதும்கூட இதே நோக்கத்தை உள்ளடக்கியதுதான்.
உணவுத் தேவைக்குத் தானியங்கள், தற்காப்புக்கு ஆயுதங்கள் என்று தனித்தனியாக வைப்பதற்கு மாற்றாக நாணய வடிவிலான பணம் விளங்கத் தொடங்கியதும், பிற பொருள்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன.
காசு வந்த கதை: தமிழ்நாட்டில் உலோக நாணயப் புழக்கம் இருந்தமை குறித்த பதிவுகள் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன. பல்லவர், பாண்டியர், சோழர் ஆட்சிக் காலங்களில் உலோக நாணயங்கள் அச்சடிக்கும் நாணயச் சாலைகள் இருந்துள்ளன. ரோம் நாட்டவரின் நாணயங்களும் இங்கு புழங்கியுள்ளன.
இருப்பினும், பண்டமாற்று முறையும் புழக்கத்தில் இருந்துள்ளது. இடைக்காலச் சோழர் ஆட்சியில் நெசவாளர்கள், எண்ணெய் உற்பத்தியாளர்கள் போன்ற கைவினைஞர்களிடம் இருந்து பொருள் வடிவிலோ நாணய வடிவிலோ வரி வாங்கப்பட்டுள்ளது. பொருளாக அன்றி, நாணய வடிவில் வரி செலுத்துவோர், ‘காசாயக் குடிகள்’ என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இங்கு ‘காசு’ என்பது நாணயத்தையும், ‘ஆயம்’ என்பது வரியையும் குறிக்கிறது. காசு வடிவில் வரிசெலுத்துவோர் தனியாக அடையாளப்படுத்தப்படுவதை உயர்வின் அடையாளம் எனக் கூற இடமுள்ளது. இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தைவிட எரிப்பது உயர்வானது என்கிற கருத்து நிலைப்பாடு வைதீகப் பரவலின் விளைவாக வளர்ச்சியுற்ற நிலையில், இது ஒரு விவாதப் பொருளாகவே இருந்துள்ளது.
நம்பி நெடுஞ்செழியன் என்கிற மன்னன் இறந்தபோது அவனது உடலை எரிப்பதா, புதைப்பதா என்ற சிக்கல் எழுந்துள்ளது. அவனது சிறப்பியல்புகளை எடுத்துரைத்த புலவர், ‘இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ’ (இரண்டும் ஒன்றுதான்) என்று கூறிச் சிக்கலுக்கு முடிவுகட்டியுள்ளார் (புறநானூறு: 239:20).
இத்தகைய சிந்தனைகள், பொருள்களை உடன்வைத்துப் புதைக்கும் வழக்கத்தைக் குன்றச் செய்துவிட்டன. மறு உலக நம்பிக்கைக்குத் துணையாகப் பாவம் - புண்ணியம் என்ற கருத்தாக்கங்கள் செல்வாக்குப் பெற்றதும் சமயக் குருக்கள் வழியே வீடுபேறு பெறலாம் என்ற நம்பிக்கை பரவலாயிற்று. இறந்தோர் சார்பாக உணவருந்தி அவர்களது பாவம் போக்குவோர் உருவாயினர். இந்த வழக்கத்தை ஏற்காத ‘கபிலர் அகவல்’, ‘….அருந்திய உணவால் யார் பசி களைந்தது?’ என்கிற வினாவை எழுப்பியது.
இத்தகைய சமூக மாற்றங்களினால், பொருள்களுக்கு மாற்றாக நெற்றிக்காசு வைத்தல் என்ற சடங்கு தோன்றியுள்ளது. அத்துடன் இறந்தோர் நினைவாக ஆறுகளில் நாணயங்களை இடும் வழக்கமும் உருவாகியுள்ளது. தொல்லியல் அறிஞர் முனைவர் வெ.வேதாசலம் பழங்கால நாணயங்கள் ஆறுகளில் கிடைப்பதாக உரையாடலின்போது குறிப்பிட்டது இத்துடன் பொருத்திப் பார்க்கத்தக்கது.
- ஆ.சிவசுப்பிரமணியன் பேராசிரியர், பண்பாட்டு ஆய்வாளர்; தொடர்புக்கு: sivasubramanian@sivasubramanian.in