

சர்வதேசப் புகழ்பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முரகாமியின் புதிய நாவல் இந்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முரகாமியின் பதிப்பாளர் சின்ஜோசா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். ஆனால், நாவலின் தலைப்பு உள்பட கூடுதல் தகவலை அவர் வெளியிடவில்லை. இந்த நாவல் ஜப்பானிய மொழியில் 1,200 பக்கங்கள் வரை வந்துள்ளதாகத் தெரிகிறது. இது ஏப்ரல் 13 அன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் ஜப்பானிய மொழியிலும் பிறகு ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியாகும் எனப் பதிப்பாளர் கூறியுள்ளார். கடைசியாக முரகாமியின் நாவல் 2017ஆம் ஆண்டு வெளிவந்தது. 6 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வரும் நாவல் என்பதால், இதன் மீது சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. முரகாமி தமிழில் நன்கு கவனம் பெற்ற எழுத்தாளர். ‘காஃப்கா கடற்கரையில்’, ‘நோர்வீஜியன் வுட்’, ‘இஸ்புட்னின் இனியாள்’ ஆகிய அவரது நாவல்கள் ஏற்கெனவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
நூல் வெளியீட்டு நிகழ்வு
வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி வரும் வெள்ளிக் கிழமை (17.02.2023) அன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வை நடத்தவுள்ளது. காலை 10 மணி அளவில் தொடங்கவுள்ள விழாவில் இரா.சீனிவாசன், த.குணாநிதி ஆகியோர் பதிப்பித்துள்ள சண்முகக் கவிராயரின் ‘மகாபாரத வசன காவியம்’ நூலும் இரா.சீனிவாசன் எழுதிய ‘இலக்கிய வரலாற்று வரைவியல்’ நூலும், இரா.சீனிவாசன், மு.ஏழுமலை எழுதிய ‘தமிழ்ப் பண்பாட்டில் திரெளபதி வழிபாடு’ நூலும் வெளியிடப்படவுள்ளன. இம்மூன்று நூல்களும் பரிசல் பதிப்பக வெளியீடுகள். விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ, பேராசிரியர்கள் இரா.ஜெயராமன், வே.நெடுஞ்செழியன், கி.பார்த்திபராஜா, செள.கீதா உள்ளிட்ட பலர் பேசவுள்ளனர்.