ந.பிச்சமூர்த்தியின் சிறார் கதை உலகம்!

ந.பிச்சமூர்த்தியின் சிறார் கதை உலகம்!
Updated on
3 min read

தமிழ் இலக்கிய முன்னோடிகளில் ஒருவர் ந.பிச்சமூர்த்தி. கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை உள்ளிட்ட தளங்களில் ஆகச் சிறந்த பங்களிப்பு செய்தவர். புதுக்கவிதை, சிறுகதை குறித்த சிறுபேச்சிலும் இவர் பெயர் இடம்பெறாமல் போகாது. இவரின் மற்ற படைப்புகள் சிலாகித்தும் விவாதிக்கவும்பட்ட அளவுக்கு இவர் எழுதிய சிறார் கதைகள் கவனம் பெறவில்லை.

குழந்தைகள் மீது எப்போதுமே நேசம் கொண்டவராகவும், அவர்களின் அக உலகைப் பற்றித் தெரிந்துகொள்ளும் தேடலையும் கொண்டிருந்தார் பிச்சமூர்த்தி. அவரின் ‘பலூன் பைத்தியம்’ எனும் கட்டுரையில், குழந்தைகள் ஏன் பலூனை விரும்புகின்றன எனும் கேள்வி எழுப்பிச் சில விடைகளை உருவாக்குகிறார். பலூனில் உள்ள வண்ணங்களே குழந்தைகளைக் கவர்கின்றன என்றால் பூ, மேகம், வானம் உள்ளிட்டவற்றிலும் வண்ணம் இருக்கிறதே என்று அக்காரணத்தை ஒதுக்குகிறார். இவ்வாறு ஒவ்வொன்றாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார். அதாவது, “வித்தில்லாக் கத்திரிக்காயைப் போல் வாடி வதங்கிய பலூன் சிவப்புச் சந்திரனும் பச்சைச் சூரியனுமாக மாறிவிடுகிறதல்லவா - குழந்தைகள் கையில் ஏறியவுடன்? சிருஷ்டி சக்தி என்று ஒன்றிருக்கிறது. அதுவும் தங்களுக்குள் இருக்கிறது என்ற அறிவை இந்த விந்தை குழந்தைகளுக்குப் புகட்டுகிறது. நமக்கிருக்கும் சக்தியை வெளிப்படுத்துவதில்தான் இன்பம் உண்டாகிறது. இந்த இன்பத்தை நீடிக்கச் செய்ய வேண்டுமென்ற வெறிதான் பலூன் உடைந்துவிடுவதைக்கூட லட்சியம் செய்வதில்லை!” என்பதாக உணர்கிறார்.
தான் நினைப்பதில் ஓர் ஆன்மிக கனத்தை இறக்குவதுபோல அவருக்கே தோன்றியிருக்கக்கூடும். அதனால்தான், பலூன்கள் பறப்பது குழந்தைகளின் வெகுவிருப்பத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று வேறொரு கோணத்தையும் குறிப்பிடுகிறார்.

பிச்சமூர்த்தியின் குழந்தைகள் நாட்டம்

ந.பிச்சமூர்த்தியை ‘எழுத்து’ இதழுக்காக சி.சு.செல்லப்பா எடுத்த நேர்காணலில், ‘ஞானிகளுடன் உங்களுக்கு ஏதேனும் பரிச்சயம் ஏற்பட்டதா?’ எனக் கேட்கிறார். அதற்கு துறவிகள், மனநலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்கள் குறித்து விரிவாகப் பதில் அளித்துவரும் பிச்சமூர்த்தி இறுதியாக, ‘குழந்தைகள் என்றால் எனக்கு மிக விருப்பம். சொல்லப்போனால், என்னையும் மீறியே அவர்களுடன் கலந்துவிடுவேன்’ என்கிறார்.

இப்படியாக, குழந்தைகள் மீதான நேசமே, அவர்களுக்கான கதைகளை எழுதவைத்திருக்கலாம். பிச்சமூர்த்தி எழுதிய சிறார் கதைகளை, அவர் மரணத்துக்குப் பிறகு தொகுத்திருக்கிறார் சி.சு.செல்லப்பா. 1977ஆம் ஆண்டில் வெளியான ‘காக்கைகளும் கிளிகளும்’ எனும் அந்த நூலில் மொத்தம் பத்து சிறுகதைகள் அடங்கியுள்ளன. ‘இக்கதைகள், 1934 முதல் 1968 வரையில் ஹனுமான், சுதேசமித்திரன் முதலிய பத்திரிகைகளில் வெளியானவை’ என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் செல்லப்பா. சுமார் 34 ஆண்டுகளில் சிறார் கதைகள் பத்து மட்டுமல்ல. கூடுதலாகவும் எழுதியிருக்கலாம். தேடினால் அவை கிடைக்கக்கூடும். செல்லப்பாவும் சிறுவர்களுக்கான கதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டுபவர் என்பதால், அக்கதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்.
‘காக்கைகளும் கிளிகளும்’ தொகுப்பில் உள்ள கதைகள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் சொல்லப்படும் வகையிலேயே அமைந்துள்ளன. ‘எமனை முட்டிய எருமைக் கிடா’ எனும் கதையின் கீழே ‘நாட்டுக் கதை’ என்ற குறிப்பும் இடம்பெற்றிருக்கிறது.

துளி தேனும் வண்ணத்துப்பூச்சியும்

வீடுகளில் குழந்தைகளுக்குச் சொல்லும் வழமையான கதையையும் பாணியையும் எடுத்துக்கொண்டு, அதன் கருவையும் சொல் முறையையும் கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கிறார் பிச்சமூர்த்தி. ‘கடுதாசும் தேனும்’ எனும் கதையில் கழுதை தன் வயிறு நிறைய கூடை கூடையாகக் காகிதங்களை எதிர்பார்க்க, துளி தேனில் வயிறு நிறையும் வண்ணத்துப்பூச்சியைக் கிண்டல் செய்யும் கதை. நன்னெறிக் கதையின் சாயல் கொண்டதுதான், என்றாலும் அதைப் பிரச்சாரமாகச் செய்யாமல் காட்சி விவரிப்பில் கதையாக்கியிருப்பார்.

‘காக்கைகளும் கிளிகளும்’ கதையின் கரு, புதிய ஊருக்குச் செல்லும் பறவைக் கூட்டத்தில், காக்கைகள் பெரிய புளியமரத்தில் கூடு கட்டிக்கொள்ளும். கிளிகள் உள்ளிட்ட மற்ற பறவைகள் எங்கு தங்குவது என்று குழம்பும். புயல் வீசும் காலம் என்பதால், ‘நாமும் புளியமரத்தில் தங்கலாம்’ என்று அவை முடிவெடுக்கும். ஆனால், ‘செத்த மாட்டைத் தின்னும் ஈன சாதி காக்கைகளோடு நாமும் சேர்ந்து வசிப்பதா?’ என்று கிளிகள் மறுக்கும். அவை தனித்து நிற்கும் தென்னை மரத்தில் வசிக்கும். வீசிய புயலில் அத்தென்னைமரம் வீழ்ந்து கிளிகள் காயமுறும். வழக்கமாக நகரும் இக்கதையின் இறுதியில், ‘தனி மரம், தனி வீடு, தனி சாதி என எல்லாவற்றுக்குமே எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் இதே கதிதான்’ என்று கிளி பேசுவதாக எழுதுகிறார் பிச்சமூர்த்தி. இதே கதைக் கருவை வைத்துப் பின்னாளில் அழ வள்ளியப்பா ‘இரு காக்கைகள்’ எனும் கதையை எழுதினார். பிச்சமூர்த்தி கதையோடு இதை ஒப்பிட்டால் இன்னும் வெகு எளிமையோடு அது இருக்கும்.

காட்டு விலங்குகளுக்கு சிங்கம்தான் ராஜா என்பதுபோல, பறவைகளுக்கு யார் ராஜா எனும் கேள்வியை எழுப்பி, ஒவ்வொரு பறவையாகப் போட்டியிடுவதும், யார் கண்ணுக்கும் தெரியாத குயிலை ராஜாவாக்கும் கதையே ‘பட்சிராஜா தேர்தல்’. அதேபோல, ராணுவத்தில் தன் கையை இழந்து தவிக்கும் ஒருவரின் சூழலை விவரித்து நம்பிக்கை தரும் விதமாக முடிக்கும் கதையே ‘அர்ச்சுனன்’.
‘மி – தி – ய – டி’ எனும் சத்தம் போடும் மணி, ராஜகுமாரியும் கம்பளிப்பூச்சியும், குண்டு முத்து உள்ளிட்ட கதைகள் இப்போது படித்தாலும் சுவாரஸ்யமாகவே உள்ளன. குறிப்பாக, நீதிக் கதைகளின் தொனி இருந்தாலும் அக்கால வழக்கப்படி கதை முடிந்ததும் ‘இதனால் அறியப்படும் நீதி என்பது...’ என்ற துருத்தல் இல்லை. ந.பிச்சமூர்த்தியின் மற்ற ஆக்கங்களைப் போல அவரின் சிறார் கதைகளும் வாசிக்கவும் விமர்சிக்கவும்பட வேண்டியது அவசியம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in