

‘நான் நேசிக்கும் என் தாய்மண்ணுக்குச் சில வாரங்களில் திரும்பிவந்துவிடுவேன்’ - 2016இல் மருத்துவச் சிகிச்சைக்காகத் துபாய்க்குவிமானம் ஏறியபோது பர்வேஸ் முஷரஃப் சொன்ன வார்த்தைகள் இவை. ஆனால், ஆறேழு ஆண்டுகளுக்குப் பின்னர் உயிரற்ற சடலமாகத்தான் அவரது மீள்வருகை நிகழ்ந்திருக்கிறது.
பாகிஸ்தானுக்கு அவரது சடலம் கொண்டுவரப்படுவதில் ஏற்பட்ட தாமதம் தொடங்கி, அவருக்கு அரசு மரியாதை செலுத்த எழுந்த எதிர்ப்புகள்வரை எல்லாமே சர்ச்சைக்குரிய விஷயங்களாகவே இருந்தன. இறுதியில், கராச்சியில் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார் முஷரஃப்.
கார்கில் போரின் காரணகர்த்தா: இயல்பிலேயே இந்தியா மீது பகைமை கொண்டிருந்த முஷரஃப், ஜனநாயகத்துக்கு எதிரான கொள்கை கொண்டிருந்த முன்னாள் அதிபர் ஜியா உல் ஹக்கைத் தனது ஆதர்சமாகக் கருதியவர். இந்தியாவைப் பரம எதிரியாகக் கருதிய பிரதமர் பேநசீர் பூட்டோவின் பேராதரவைப் பெற்றவர். ஆட்சியாளர்களிடமும் ராணுவ உயரதிகாரிகளிடமும் முஷரஃப் பெற்றிருந்த நற்பெயர், ராணுவத்தில் உயர் பதவிகளை - மூப்பு அடிப்படையையெல்லாம் கடந்து - அடைய அவருக்குத் துணைபுரிந்தது.
1990 களின் ஆரம்பத்திலேயே கார்கில் மீது தாக்குதல் நடத்தலாம் என பேநசீருக்கு யோசனை தெரிவித்தவர் முஷரஃப். எனினும், அதை பேநசீர் ஏற்கவில்லை. பின்னாள்களில், தனது அரசை வெளிப்படையாக விமர்சித்துப் பேசிய ராணுவத் தளபதி ஜஹாங்கிர் கராமத் மீது கோபத்தில் இருந்த அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீஃப், 1998இல் அவருக்குப் பதிலாக முஷரஃபை ராணுவத் தளபதியாக்கினார்.
அதைப் பயன்படுத்தித் தனது தடாலடித் திட்டங்களை அமல்படுத்தினார் முஷரஃப். அதில் ஒன்றுதான் கார்கில் மீதான ஊடுருவல். முன்பு சியாச்சென் பகுதியைக் கைப்பற்ற எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் கார்கில் மீது அவர் கண்வைத்தார். கார்கிலை வைத்து காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்று திட்டமிட்டார். அதை எதிர்கொள்ள இந்திய ராணுவம் திணறும் என்றே நினைத்திருந்தார்.
அவர் போட்ட தப்புக்கணக்கு, பாகிஸ்தானுக்குப் பலத்த அடியைக் கொடுத்தது. அதுவரை அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக இருந்த பாகிஸ்தான், அதிபர் பில் கிளின்டனின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. உண்மையில், அதற்குச் சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் வாஜ்பாய் பேருந்து மூலம் பாகிஸ்தான் சென்று நவாஸ் ஷெரீஃபுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டதை முஷரஃப் ரசிக்கவில்லை எனக் கருதப்படுகிறது. வாஜ்பாய்க்கு மரியாதை நிமித்தம் அவர் ‘சல்யூட்’ கூட அடிக்கவில்லை என ஒரு செய்தி உண்டு. இறுதியில் கார்கில் அவருக்கு மறக்க முடியாத பாடத்தைக் கற்றுக்கொடுத்தது.
அமெரிக்காவிடம் இரட்டை வேடம்: செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பழிவாங்க அல் கய்தா மீது அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளுக்கு வேறு வழியின்றி ஆதரவளித்தார் முஷரஃப். இதனால், ஜார்ஜ் புஷ்ஷின் கையாள் எனும் விமர்சனத்தையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ‘புஷரஃப்’ (Busharraf) என்று அவரைக் கிண்டலாக விளித்தனர் பலர். ஆனால், பயங்கரவாத அமைப்புகள் மீது உறுதியான நடவடிக்கைகளை அவர் எடுக்கவில்லை என அமெரிக்கா அதிருப்தியடைந்தது.
மறுபுறம், அமெரிக்காவுடனான அவரது நெருக்கமான உறவு பாகிஸ்தானில் அவர் மீது அதிருப்தியை உருவாக்கியது. ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பழங்குடிப் பகுதிகளில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு அனுமதியளித்தது அந்த அதிருப்தியை அதிகரித்தது. இதனால், பாகிஸ்தானையும், வெளிநாடுகளையும் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் அவரைக் கொல்ல முயன்ற சம்பவங்களும் நடந்தன.
அரசியல் தந்திரங்கள்: ராணுவத்தில் இருந்தபோது, பேநசீரிடம் அரசியல் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டவர் முஷரஃப். பின்னாட்களில் பேநசீரையே நாடுகடத்த அவர் உத்தரவிட்டது பெரும் அரசியல் துரோகமாகப் பார்க்கப்படுகிறது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அதிபர் முஷரஃப் தவறியதால்தான் 2007இல் பேநசீர் படுகொலைசெய்யப்பட்டார் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர், அந்தப் படுகொலை தொடர்பான நேரடிக் குற்றச்சாட்டும் அவர் மீது பதிவுசெய்யப்பட்டது.
அரசியல் செல்வாக்கை இழந்து 2008இல் பிரிட்டனுக்குச் சென்று தங்கிய முஷரஃப், 2013இல் திரும்பிவந்து தேர்தலில் போட்டியிட முயன்றபோது, நீதிமன்றம் அவரைத் தகுதியிழப்பு செய்தது. பல்வேறு வழக்குகளின் கீழ் அவர் கைதுசெய்யப்படும் சூழலும் உருவானது. எனினும் முன்னாள் ராணுவத் தலைவரான முஷரஃபைக் கைதுசெய்ய ராணுவம் ஒத்துழைக்க மறுத்தது. 2016இல் மீண்டும் நாட்டைவிட்டு வெளியேறினார்.
நெருக்கடி நிலையை அமல்படுத்தியது, அரசமைப்பை முடக்கியது ஆகிய நடவடிக்கைகளுக்காக 2019இல் தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் முஷரஃபுக்கு பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அப்போது, ‘இந்தத் தீர்ப்பு பெரும் வலியையும் வேதனையையும் தருகிறது’ எனப் பாகிஸ்தான் ராணுவம் கூறியது.
அந்த அளவுக்கு ராணுவத்துக்கும் முஷரஃபுக்கும் இடையில் நெருக்கமான உறவு இருந்தது. அவரது இறுதிச்சடங்கில் அதிபர், பிரதமர், ராணுவத் தளபதி ஆகியோர் கலந்துகொள்ளாத நிலையில், ஓய்வுபெற்ற மற்றும் பணியில் இருக்கும் ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டது இந்தப் பிணைப்பைக் காட்டுகிறது.
அமெரிக்காவிடமிருந்து பெற்ற நிதியில் பெரும்பங்கை ராணுவத்துக்காகவே முஷரஃப் செலவிட்டார். அதிபரான பின்னரும் ராணுவத் தளபதி பதவியில் பல ஆண்டுகள் நீடித்தார். சிவிலியன் அதிபராகச் சில காலம் இருந்தபோதும் வாழ்நாள் முழுவதும் தன்னை ராணுவ அதிகாரியாகவே உணர்ந்தார். 2003இல் பிரணாய் ராய்க்கு அளித்த பேட்டியில், “நீங்கள் ஒரு ராணுவ அதிகாரியா அல்லது அரசியல் தலைவரா?” எனும் கேள்விக்கு, “நான் ஒரு ராணுவ அதிகாரி” எனத் தயங்காமல் சொன்னவர் அவர்.
கார்கில் கசப்பு காரணமாக, முஷரஃபுக்குப் பதிலாக குவாஜா ஜியாவுதீனை ராணுவத் தளபதியாக்க நவாஸ் ஷெரீஃப் முயன்றதும், இலங்கையிலிருந்து விமானம் மூலம் திரும்பிவந்த முஷரஃபை விமானநிலையத்தில் முடக்க முயன்றதும் தோல்வியில் முடிந்தன.
ராணுவத்தின் முக்கியத் தலைகளின் உதவியுடன் ரத்தமின்றி முஷரஃப் நடத்திய ராணுவப் புரட்சி பாகிஸ்தான் வரலாற்றில் மிக முக்கியத் திருப்பம். தலைமை நிர்வாகியாக (Chief Executive) தன்னை அறிவித்துக்கொண்ட முஷரஃப் பல்வேறு குற்றச்சாட்டுகளை நவாஸ் ஷெரீஃப் மீது சுமத்தி அவரையும் நாடுகடத்தினார்.
தோல்விகரமான சாகசக்காரர்: கார்கில் போர், 2001இல் இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல், 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு எனப் பல பாதகங்கள் முஷரஃப் மீதான கரும்புள்ளிகள். 2008 மும்பை தாக்குதலின் சதித்திட்டம்கூட அவரது ஆட்சியின்போது தீட்டப்பட்டதுதான். எனினும் இந்தியாவுடனான உறவின் சிடுக்குகளைக் களைய முஷரஃப் முயன்றது, பாகிஸ்தான் மக்களிடம்கூட நம்பிக்கையை ஏற்படுத்தத்தான் செய்தது.
வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகிய பிரதமர்களுடன் அவர் நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தையும், ‘முஷரஃப் ஃபார்முலா’ என அழைக்கப்பட்ட அவரது திட்டங்களும் ஓரளவு பலன் தரத்தான் செய்தன. ஆனால், அவருக்குப் பின்னர் அமைந்த அரசுகள் அதை முன்னெடுத்துச் செல்லவில்லை.
இன்றைக்குப் பாகிஸ்தான் எதிர்கொண்டிருக்கும் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு நடுவே, ‘முஷரஃப் போன்ற உறுதியான தலைவர்கள் இப்போது இருந்திருக்க வேண்டும்’ எனச் சொல்லும் பாகிஸ்தானியர்கள் உண்டு. ஆனால், தோல்விகரமான சாகசங்கள் நிரம்பிய முஷரஃபின் வாழ்க்கை எதிர்மறையான பிம்பத்துடனேயே முற்றுப்பெற்றிருக்கிறது.
- வெ.சந்திரேமாகன்; தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in