

பிப்ரவரி 5 அன்று சமூக நல்லிணக்க மாநாடு கோவை பேரூர் தமிழ்க் கல்லூரியில் நடைபெற்றது. காலை 10.30 மணிக்குப் பேருந்தில் சென்றேன். 2 ஆம்எண், சொகுசுப் பேருந்து. ரூ.21 பயணச்சீட்டு. வெயில் படாத வலப்பக்கச் சன்னலோர இருக்கையில் அமர்ந்தேன். இரு வரிசைகளுக்கு முன்னால் இரண்டு சிறுவர்கள் அமர்ந்திருந்தனர்.
இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். இடப்பக்க இருக்கையிலிருந்த அவர்களது தந்தை ‘ச்சூ’வென்று அவர்களை மிரட்ட, இருவரும் திரும்பிப் பார்த்துவிட்டு அமைதியாகினர். அவர்களுக்கு முன்னிருக்கையில் அமர்ந்திருந்த இளம்பெண் - அவர்களது அன்னை - அவரைப் பார்த்து என்னவென்று வினவினாள். நால்வரும் கண்ணசைவுகளை மட்டும் பரிமாறிக்கொண்டனர். தந்தையின் உடலசைவுகளே சரியில்லை. குடித்திருக்கக்கூடும் என ஊகித்தேன்.
சற்று நேரத்தில் எனக்கு முன்னிருக்கையில் இடம் கிடைத்ததும், தந்தை அங்கு நகர்ந்துகொண்டு ஒரு மகனை அழைத்து அருகில் அமரச்செய்தார். மது வாடை என் மூக்கைத் துளைத்தது. பின்னாலிருந்த என்னாலேயே தாங்க முடியவில்லை. காலையிலேயா? குமட்டிக்கொண்டு வந்தது. எண்ணம் முழுவதையும் அக்கெடு நாற்றமே நிறைத்தது. சன்னல் வழியாக எச்சில் துப்பினார். பாதி எச்சில் சன்னலின் கீழிடுக்கிலேயே நுரையுடன் படிந்தது.
சினம் என் உச்சிக்கு ஏறியது. ஆனால், அவருக்கு அந்நிலையில் அறிவுறுத்துவதோ கடிந்துகொள்வதோ வீண் என்று புரிந்தது. செல்லாவிடத்துச் சினம் தீயாய்ச் சுட்டது. சற்று நேரத்தில் எழுந்து கடைசி இருக்கைக்குச் சென்றுவிட்டேன். எனக்கு அந்த வாய்ப்பு இருந்தது. அருகிலுள்ள மகனுக்கு? அவனது தம்பிக்கு? முன்னாலுள்ள இளம் தாய்க்கு?
குடிகாரத் தகப்பன்களைப் பார்த்து வளர்கிற தலைமுறை எப்படியானதாக இருக்கும்? அரசுகளே மிகையாகக் குடிக்க ஊக்கப்படுத்தி, ஊற்றிக் கொடுத்துக் குடிகெடுத்துவிட்டுப் பள்ளிகளில் என்ன கற்றுக்கொடுக்கப்போகின்றன?
- த.கண்ணன்