அடித்தால்தான் படிப்பு வருமா?

அடித்தால்தான் படிப்பு வருமா?
Updated on
2 min read

‘அடியாத மாடு படியாது’ எனும் சொலவடையைக் கேட்டு வளர்ந்த சமூகம் இது. எனினும், சமூகப் பிரக்ஞையும் சக உயிர்கள் மீதான அக்கறையும் இன்றைக்கு வெகுவாக அதிகரித்திருக்கிறது. இப்படியான சூழலிலும் குழந்தைகளை ஆசிரியர்கள் அடிக்கலாம் எனும் பழைமைவாதக் கருத்து விதைக்கப்படுகிறது.

மதுரையில், தங்கள் குழந்தை தவறிழைத்தால், படிக்கவில்லை என்றால் அக்குழந்தையை அடித்துச் சித்ரவதை செய்வதற்கான உரிமையையும் ஒரு பிரம்பையும் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒரு தம்பதி வழங்கியது கவனம் ஈர்த்தது. குழந்தைகளை அடித்துதான் படிக்க வைக்க முடியும் எனும் பொதுப்புத்தியின் வெளிப்பாடுதான் இது. இந்தப் பிரச்சினையை எப்படி அணுகுவது?

குழந்தைகளுக்கான உரிமைகள்: இந்திய அரசமைப்பின் பகுதி மூன்று, அடிப்படை உரிமைகளை இந்தியக் குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. ‘குடிமக்கள்’ என்ற சொல்லுக்குள் குழந்தைகளும் அடங்குவர். குழந்தை உரிமைகளுக்கான உடன்படிக்கையை 1989இல் ஐநா வெளியிட்டது. இந்தியா இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டு ஏற்புறுதி செய்திருக்கிறது. இதன்படி, குழந்தைகளுக்கு வாழ்வதற்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பாதுகாப்புக்கான உரிமை, பங்கேற்புக்கான உரிமை என நான்கு தொகுப்புரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

குழந்தைகளின் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இன்படி, ஒரு குழந்தையை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்துவது, தண்டனை அளிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். இக்குற்றத்தை இழைப்பவர் யாராகினும் அவர் மீது இளம் சிறார் நீதிச் (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் - 2015இன்படி நடவடிக்கை எடுக்கலாம்.

அடிப்பது பலன் தராது: ஒரு குழந்தையை அடிப்பதால், தண்டனை அளிப்பதால் அவர்கள் எளிதாகக் கல்வி கற்கும் நிலை உருவாகும் என்று உலகில் எந்த ஆய்வும் நிரூபிக்கவில்லை. மாறாக, இன்றைய குழந்தைகளிடம் இச்சமூகம் ஏற்படுத்தியிருக்கிற எதிர்-குணாம்சங்களைக் களைவது நம்முடைய கூட்டுப் பொறுப்பு. குழந்தை நேய அணுகுமுறை எல்லா இடங்களிலும் துளிர்க்க வேண்டும் என்பதுதான் நாகரிக சமூகத்தின் விருப்பம்.

ஒரு சில ஆசிரியர்களின் பின்னால் பள்ளிக் குழந்தைகள் துள்ளிக் குதித்துக்கொண்டே அவர்கள் சொல்வதையெல்லாம் முகமலர்ச்சியோடு செய்வதும், கற்பதும் எப்படி? அவர்கள் என்ன மாயத்தைச் செய்கிறார்கள்? வேறு ஒன்றுமில்லை; அவர்கள் குழந்தை நேய அணுகுமுறையை விதைகிறார்கள்.

அவர்களின் கைகளில் பிரம்புகள் இல்லை; நாக்கில் நஞ்சு இல்லை; சிந்தனையில் கொடூரமில்லை. அவர்கள் குழந்தைகளை மாண்போடு நடத்துகிறார்கள். இந்தச் சூத்திரத்தைப் பின்பற்ற வேண்டிய சில ஆசிரியர்கள் குச்சியை எடுப்பதேன்? இதைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது சரிதானா?

தவறான அணுகுமுறை: தமிழ்நாட்டில் குழந்தை உரிமைச் செயல்பாட்டாளர்கள் முன்னகர்த்தியிருக்கிற ‘குழந்தை நேயத் தேர்’ சிலரின் தவறான அணுகுமுறையால் பின்னடைவைச் சந்திக்கிறது. இந்தச் சமூகம் விதைத்திருக்கிற போலி பிம்பங்கள்எளிய பெற்றோர்கள் மீது பெரும் தாக்குதலை ஏற்படுத்தியிருக்கின்றன. ‘எது கல்வி?’ என்கிற புரிதலின்மையும், இன்றைய கல்வியில் இருக்கிற போட்டி மனப்பான்மையும், அதிக மதிப்பெண்ணை நோக்கிய துரத்தலும் அழுத்தமும் இதற்கான முக்கியக் காரணங்கள்.

கரோனா காலம் குழந்தைகள் மீது ஏற்படுத்திய கொடூரத் தாக்கத்தின் விளைவுகளால் அவர்களது குணாம்சத்தில் ஏற்பட்டிருக்கிற உளவியல் எதிர்மாற்றங்கள் இச்சமூகத்தை அச்சுறுத்தியிருக்கலாம். குழந்தைகள் ஒருபோதும் கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை. அவர்கள் நம்மூலம் கேட்ட வார்த்தைகளைத்தான் பேசுகிறார்கள். தவறிழைக்கும் குழந்தைகள் யாரும் இல்லை என்று சொல்லவில்லை.

இச்சமூகத்தின் எதிர்வினையால் பாதிப்புக்குள்ளாகி, சட்டத்துக்கு முரண்படும் குழந்தைகளை அணுகுவதற்கு, இளம் சிறார் நீதிச் (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 இருக்கிறது. அவர்கள் உளவியல்ரீதியாக, சட்டரீதியாக அணுகப்பட வேண்டியவர்கள் என்பதை இப்பொதுச்சமூகம் புரிந்துகொள்வது எப்போது? மெல்லக் கற்கும் குழந்தைகளை அறிவியல்பூர்வமாக, உளவியல்பூர்வமாக அணுகுவது எப்போது? மனப்பாடக் கல்வியைத் தூர எறிவது எப்போது? எண்ணற்ற கற்றல் முறைகளைக் கையாள்வது எப்போது?

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in