

‘கோடரி வெட்டு விழப்போகிறது... ஏற்கெனவே தாமதமாகிவிட்டது’ - சுற்றுச்சூழல் பற்றி நினைக்கிறபோதெல்லாம் மலையாளக் கவிஞரும் சூழலியல் களப்போராளியுமான சுகுதகுமாரியின் இந்த வார்த்தைகள் நினைவுக்கு வரும். கேரளத்தின் அட்டப்பாடி பகுதியில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதிக்குப் போகிறபோதெல்லாம் அந்த நினைவு வருவதைத் தவிர்க்கவே முடியாது.
சமீபத்தில் அமைதிப் பள்ளத்தாக்குக்குச் சென்றபோது புவி வெப்பமாதலின் (Global warming) பாதிப்பை அங்கும் உணர முடிந்தது. ரூ.350 முதல் ரூ.500வரை இருந்த அதன் நுழைவுக் கட்டணம், இப்போது ரூ.750க்கு உயர்ந்துவிட்டது.
இந்தக் கட்டண உயர்வு தலையைச் சூடாக்குகிறது என்றார் என் மனைவி. இதைக் கேட்டதும், அந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர், அந்த அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதியிலும் வெப்பநிலை அதிகரித்திருப்பதாகச் சொன்னார். ஏராளமான நுண்ணுயிர்கள் வாழக்கூடிய அந்தப் பகுதியில் அவற்றில் சில மறைந்துவருவதையும் அறிய முடிந்தது. அபூர்வமான பல மரங்கள் வறட்டுத்தன்மைக்கு வந்துவிட்டன.
1970இல் சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ள அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் நீர் மின் சக்திக்காகக் கட்டப்படவிருந்த அணை, சுகுதகுமாரி தலைமையிலான போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. அணை கட்டப்பட்டிருந்தால் இந்த 50 ஆண்டுகளில் அந்தக் காட்டுப் பகுதி பெரும்பாலும் நீரில் மூழ்கியிருக்கும். வெப்பநிலையும் கடுமையாக அதிகரித்திருக்கும். அதிலிருந்து காப்பாற்றப்பட்டாலும் புவி வெப்பமாதல் அமைதிப் பள்ளத்தாக்கின் அமைதியைக் குலைத்துவிட்டது.
இதற்கிடையே, தமிழக - கேரள எல்லைக் கிராமங்களில் எல்லையை அளவீடு செய்யும் திட்டத்தைக் கடந்த இரண்டு மாதங்களாகக் கேரள அரசு செயல்படுத்தி வருகிறது. எல்லைக் கோடுகளை நிர்ணயிக்கும் மாநில எல்லைக் கற்கள், சமீப மாதங்களில் கோவை மாவட்டத்துக்குள்ளும் திருட்டுத்தனமாக நகர்ந்துவருகின்றன என்று சொல்கிறார்கள்.
ஏற்கெனவே, 1956ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புப் பணிகள் நடத்தப்பட்டபோது தமிழகத்தின் பல பகுதிகள் கேரளத்துடன் இணைக்கப்பட்டன. தமிழக - கேரள எல்லைப் பகுதியில் 230 கி.மீ. தொலைவு மட்டுமே கூட்டு அளவிடும் முறையில் பார்க்கப்பட்டுள்ளது. மீதி உள்ள சுமார் 700 கி.மீ. எல்லைப் பகுதி இன்றுவரை அளவிடப்படவில்லை. இந்தச் சிக்கலுக்கு நடுவில்தான் இயற்கை மீதான கோடரி வெட்டு அழுத்தமாக விழுந்துகொண்டிருக்கிறது.
அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் வண்ணத்துப்பூச்சிகள் அழிந்துவருவது குறித்து, உள்ளூர் பழங்குடி ஒருவர் வேதனையுடன் குறிப்பிட்டார். உலகம் வெப்பமாகிக்கொண்டிருக்கும் சூழலைக் காட்டும் விதமாய் அமைதிப் பள்ளத்தாக்கில் பல மாற்றங்களைக் காண முடிந்தது. வறண்டுபோன மரங்களின் பாகங்களைப் பழங்குடிகள் சுமந்துபோகிற காட்சிகள் உறுத்திக்கொண்டே இருந்தன.
அட்டப்பாடிப் பழங்குடிப் பாடகர் நஞ்சம்மாவின் ‘காடு எரியுதே... மனம் பதறுதே’ என்ற பாடல் வரிகளைக் கேட்கும்போது இன்னும் வலிக்கிறது மனம்!
- சுப்ரபாரதி மணியன் எழுத்தாளர்; தொடர்புக்கு: subrabharathi@gmail.com