

2023 ஆம் ஆண்டினை அறிவிக்க வேண்டும் என்னும் தீர்மானத்தை, 2021 மார்ச் 4 அன்று ஐநா அவையில் இந்தியா முன்மொழிந்தது. இந்தியாவுடன் நேபாளம், வங்கதேசம், ரஷ்யா, கென்யா, நைஜீரியா, செனகல் ஆகிய நாடுகள் இணைந்து அறிமுகப்படுத்திய இந்தத் தீர்மானத்தை, 70 நாடுகள் வழிமொழிய, 193 உறுப்பு நாடுகளும் ஆதரித்தன. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதைத் தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு, சர்வதேசச் சிறுதானிய ஆண்டாகக் கடைப்பிடிக்கப்படும் என ஐநா அறிவித்தது.
தினை, வரகு, கேழ்வரகு, பனிவரகு, கம்பு, சாமை, இருங்கு சோளம், குதிரைவாலி போன்றவை சிறுதானியங்களாகும். இவை மிகக் குறுகிய காலத்தில், சாதாரண மண்ணில், வறட்சிக் காலத்திலும் வளரக்கூடியவை. இவற்றில் புரதம், நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் அதிகளவில் உள்ளன.
இந்தியாவில் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்கள், 14 மாநிலங்களின் 212 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சிறுதானியங்களை உற்பத்திசெய்யும் விவசாயிகளுக்கு நிதியுதவிகளும் வழங்கப்படுகின்றன. சிறுதானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 2013-2014 முதல் 2021-2022 வரையிலான ஆண்டுகளில் 80-125% வரை உயர்ந்துள்ளது.
ஆனால், கடந்த எட்டு ஆண்டுகளில் அவற்றின் உற்பத்தியில் 7% வரை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும், நடப்பு ஆண்டில் 42 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்குச் சிறுதானியங்களை உற்பத்திசெய்ய வேளாண் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது சாகுபடிப் பரப்பு இரண்டு லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளதால், உற்பத்தி இலக்கை அடைவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கருதப்படுகிறது.
உணவுச் சந்தையில் சிறுதானிய உற்பத்தியை அதிகரிப்பதுடன், அதனைப் பதப்படுத்தும், சுழற்சி முறைப் பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் வாய்ப்புகளையும் சிறுதானியங்களின் ஆண்டு அதிகரித்துள்ளது. ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றிருப்பதும் சிறுதானியங்களின் உலகளாவிய பரவலாக்கத்துக்குப் பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுதானியங்களின் உற்பத்தியில் உலகளவில் முதலிடத்திலும் ஏற்றுமதியில் இரண்டாமிடத்திலுமாக இந்தியா முன்னோடியாக விளங்குகிறது. 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறுதானியங்களை ‘ஸ்ரீ அன்னம்’ எனக் குறிப்பிட்டு, அவற்றின் பரவலாக்கத்துக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அறிவித்தார்.
ஹைதராபாத்தில் இருக்கும் இந்தியச் சிறுதானியங்கள் ஆராய்ச்சி மையம், ‘உயர்திறன் மைய’மாகத் தரம் உயர்த்தப்பட்டு, சர்வதேச அளவில் சிறந்து விளங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். சிறுதானியங்களுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றும் முனைப்பில் மத்திய அரசு இத்திட்டங்களை அறிவித்துள்ளது. சிறுதானியங்களின் ஆண்டை, மக்கள் இயக்கமாகவும் மாற்ற அது விரும்புகிறது.
இந்தியாவில் அரிசியும் கோதுமையும் முதன்மை உணவாக உள்ள நிலையில், சிறுதானியங்களின் ஆண்டில் அரசு முன்னெடுத்திருக்கும் திட்டங்கள் அறிவிப்புகளாக மட்டும் நின்றுவிடாமல், இந்தியர்களின் உணவுப் பழக்கத்தில் நிரந்தரமான - ‘ஆரோக்கியமான’ மாற்றத்தைக் கொண்டுவரும் என நம்பலாம்!