

பிப்ரவரி 1, 2023 அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்த நிதிநிலை அறிக்கையில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சிப் பகுதிகளில் கழிவுநீர்த் தொட்டிகள், சாக்கடைக் குழிகளில் அடைப்புகளை நீக்கும் பணி 100% இயந்திரமயமாக்கப்படும் என்றும் இந்தத் தொட்டிகள், குழிகள் அனைத்தும் மனிதர்கள் இறங்குபவை (Man-hole) என்பதிலிருந்து இயந்திரங்கள் இறக்கப்படுபவையாக (Machine-hole) மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ‘கையால் மலம் அள்ளும்’ வழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த அறிவிப்பு வரவேற்பைப் பெற்றுள்ளது.
மனிதக் கழிவை அகற்றும் மனிதர்கள்: இந்தியாவில் சாக்கடைக் குழிகள், கழிவுநீர்த் தொட்டிகளுடன் இணைக்கப்பட்ட கழிப்பறைகள் அறிமுகமாகி இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும், கையால் மனித மலத்தை அகற்றி அப்புறப்படுத்த வேண்டிய தேவை முற்றிலும் நீங்கிவிடவில்லை. எடுத்துக்காட்டாக, ரயில்களில்இருந்து தண்டவாளங்களில் விழும் மனிதக் கழிவை அகற்றும் பணியில் மனிதர்கள்தான் ஈடுபடுத்தப்படுகிறார்கள் (இந்தப் பணி தேவைப்படாத வகையில் ரயில்களில் உயிரிகழிப்பறைகள் (Bio Toilets) அமல்படுத்தப்பட்டுவருகின்றன.
ஆனால், இது முழுமையாக நிறைவேறவில்லை). அறிவியல் முன்னேற்றம் நிறைந்த இந்தக் காலகட்டத்திலும் சாக்கடைக் குழிகள், கழிவுநீர்த் தொட்டிகளில் இறங்கி அடைப்புகளை நீக்குதல், தூய்மைப்படுத்துதல் ஆகிய பணிகளில் பெரும்பாலும் மனிதர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இந்த இரண்டு வகையான பணிகளிலும் ஈடுபடும் மனிதர்கள் தமது கையால் மலத்தைக் கையாள வேண்டிய நிலை இருப்பதால், இந்தப் பணி ‘கையால் மலம் அள்ளுதல்’ (Manual Scavenging) என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
உயிரைப் பறிக்கும் பணி: கையால் மலத்தை அப்புறப்படுத்துவோர் எண்ணற்ற நோய்களுக்கு ஆளாகி விரைவில் மரணமடைகின்றனர். நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்களைச் சுவாசிப்பதால் மூச்சுத் திணறி இறந்துவிடும் ஆபத்துடனேயே துப்புரவுப் பணியாளர்கள் சாக்கடைக் குழிகள், கழிவுநீர்த் தொட்டிகளில் இறங்குகின்றனர்.
2017 முதல் 2022க்குள் மட்டும் இந்தியாவில் 330 துப்புரவுப் பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இறந்ததாக மத்திய சமூக நீதி - அதிகாரமளித்தல் இணை அமைச்சர் ராம்தாஸ் ஆத்வலே மக்களவையில் டிசம்பர் 2022இல் தெரிவித்தார். 1993-2021 காலகட்டத்தில் 971 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இறந்திருப்பதாக மத்திய அரசிடம் உள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
தடை நடவடிக்கைகள், சட்டங்கள்: இந்தியாவில் 1950களில் கோபிசெட்டிப்பாளையம் நகராட்சியில் அதன் தலைவர் ஜி.எஸ்.லட்சுமண ஐயர், கையால் மலம் அள்ளும் வழக்கத்துக்குத் தடை விதித்தார். இந்த வழக்கம் அதிகாரபூர்வமாகத் தடை செய்யப்பட்ட முதல் நிகழ்வு இதுதான். 2013 பிப்ரவரியில் இந்த வழக்கத்தைத் தடைசெய்வதாக டெல்லி அரசு அறிவித்தது.
ஆறு மாநில அரசுகள் நிறைவேற்றிய தீர்மானங்களின் அடிப்படையில் மத்திய அரசு 1993இல் கையால் மலம் அள்ளும் பணியாளர்களை ஈடுபடுத்துதல் - உலர் கழிப்பறைகள் கட்டுமானம் (தடை) சட்டத்தை நிறைவேற்றியது. கையால் மலத்தை அள்ளுதல், நீரைப் பயன்படுத்த வழியில்லாத உலர் கழிப்பறைகளைக் கட்டுதல், சுத்தம் செய்தல் ஆகிய பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு ஓர் ஆண்டுவரை சிறைத் தண்டனையும் மற்றும் /அல்லது ரூ.2,000 வரை அபராதமும் விதிக்க இந்தச் சட்டம் வழிவகுத்தது. ஆனால், இந்தச் சட்டம் நடைமுறையில் இருந்த 20 ஆண்டுகளில் ஒருவர்கூடத் தண்டிக்கப்பட்டதில்லை.
கையால் மலம் அள்ளும் பணியைத் தடைசெய்தல் - பணியாளர்களுக்கான மறுவாழ்வுச் சட்டத்தை 2013இல் மத்திய அரசு நிறைவேற்றியது. இது சாக்கடைக் குழிகள், கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யவும் அவற்றில் அடைப்புகளை நீக்கவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் மனிதர்களை இறக்குவதையும் தடைசெய்தது. சாக்கடைக் குழிகளைச் சுத்தம் செய்யும் பணியை முற்றிலும் இயந்திரமயமாக்குவதற்கு வழிசெய்யும் வகையில் இந்தச் சட்டத்தில் ஒரு திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதா 2020இல் முன்மொழியப்பட்டது.
ஆனால், இந்த மசோதாவுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. எனினும் இயந்திரமயமாக்கலுக்கான பணிகளைத் தொடர்ந்து அரசு மேற்கொண்டுவருகிறது. இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவுச் சூழல் அமைப்புக்கான தேசியச் செயல் திட்டத்துக்கு (‘நமஸ்தே’) 2023-24 பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடரும் அவலம்: சட்டத்தால் தடை செய்யப்பட்டு விட்டாலும் பல்வேறு காரணங்களால் கையால் மலம் அள்ளும் வழக்கம் இன்றைக்கும் தொடர்கிறது. இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவோருக்குப் பிற வாழ்வாதார வாய்ப்புகள் இல்லாதது, இயந்திரமயமாதலில் நிலவும் சிக்கல்கள், சட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பொறுப்பில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் அக்கறையின்மை, தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் குறைவான கூலியில் சாக்கடை அடைப்பு நீக்கத்துக்கு ஆள்கள் கிடைப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இதற்குப் பங்களிக்கின்றன. ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி சாதிய மனநிலையும் இதற்கு முக்கியக் காரணம்.
இந்தியாவில் ‘கையால் மலம் அள்ளும்’ பணியில் சாதியக் கட்டமைப்பில் அடிநிலையில் இருக்கும் பட்டியலின மக்களே தொன்றுதொட்டு ஈடுபடுத்தப்பட்டுவருகின்றனர். மத்திய அரசு சார்பில் இந்தப் பணியாளர்களிடையே நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளில் பங்கேற்றோரில் 97.25% பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். 13 லட்சம் பட்டியலின மக்கள் இந்தப் பணியை வாழ்வாதாரமாகக் கொண்டிருப்பதாக ‘சர்வதேசத் தலித் ஒற்றுமை வலைப்பின்னல்’ என்னும் அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கிறது.
தொகுப்பு: கோபால்