

மகசேசே விருதுபெற்ற சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், ஜனவரி 21 அன்று தனது யூடியூப் சேனலில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
குடியரசு தினமான ஜனவரி 26 முதல், கார்துங்லா மலைப் பகுதியில் ஐந்து நாள்களுக்கு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். ஆனால், 26ஆம் தேதி காலை அவரது ஹியால் (Himalayan Institute of Alternatives) நிறுவனத்திலேயே அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது; காவல் துறை இதை மறுத்தது.
பிரச்சினையின் பின்னணி: காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டக்கூறு ரத்துசெய்யப்பட்டு, அம்மாநிலம் ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது, பாஜகவின் சாதனைகளில் ஒன்றாகவே முன்வைக்கப்படுகிறது.
ஆனால், அந்நடவடிக்கையின் மூலம் காஷ்மீரில் எந்தப் பயனும் விளையவில்லை என எதிர்க்கட்சிகள் பேசிவரும் நிலையில்,லடாக்கிலும் பெரும் அதிருப்தி அலை எழுந்திருக்கிறது. காஷ்மீரின் ஒரு பகுதியாகலடாக் இருந்த காலகட்டத்தில் மத்திய அரசு வழங்கும் நிதியில் பெரும் தொகைகாஷ்மீருக்கே சென்றுவிடும். லடாக் போதிய கவனம் பெற்றதில்லை.
அதனால்தான், லடாக் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதை அங்குள்ள மக்கள் கொண்டாட்டத்துடன் வரவேற்றனர். உண்மையில், ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை கொண்டயூனியன் பிரதேசமாக மாறியது. லடாக் நேரடியாக மத்திய அரசின் நிர்வாகத்தில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாக ஆனது. அதன் எதிர்மறை விளைவுகள் இப்போது லடாக் மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கின்றன.
6ஆவது அட்டவணை: ஒருபுறம் லடாக்கின் பனியாறுகள் அருகிவருகின்றன. இதனால் நீராதாரம் குறைந்து, விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றிலும் முன்னேற்றம் இல்லை எனும் ஆதங்கம் நிலவுகிறது. லடாக்குக்கு நிதி ஒதுக்கப்பட்டாலும் அது பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
கூடவே, அரசமைப்பின் 6ஆவது அட்டவணையின் கீழ் லடாக் கொண்டுவரப்படும் என பாஜக கொடுத்திருந்த வாக்குறுதி இப்போதுவரை நிறைவேற்றப்படவில்லை. நிலம், சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாகச் சட்டம் இயற்றிக்கொள்ளும் தன்னாட்சி உரிமையை, பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வழங்குகிறது 6ஆவது அட்டவணை. மக்கள்தொகையில் 79.61% பழங்குடிகளைக் கொண்டிருக்கும் லடாக்கில் அந்தக் கோரிக்கை வலுவாக எழுந்திருப்பதில் ஆச்சரியமில்லை.
அணிதிரளும் மக்கள்: இந்திய - பாகிஸ்தான் எல்லையில் உள்ள பனியாறுகளைப் பாதுகாப்பது இரு நாடுகளின் பொதுவான விருப்பமாக மாற வேண்டும் எனும் கொள்கை கொண்டவர் சோனம் வாங்சுக். அவரது சமூக அக்கறை, ஆமிர் கான் நடித்த ‘3 இடியட்ஸ்’ படத்தின் நாயகன் கதாபாத்திரத்துக்கான தாக்கமாக அமைந்திருந்தது. லடாக் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டபோதே அதை அதிருப்தியுடன் கவனித்த அவர், லடாக் மக்கள் தங்கள் நிலங்களையும் பண்பாட்டையும் வெளியாள்களிடம் இழக்க நேரிடும் என்று அச்சம் தெரிவித்தார்.
அப்போதே லடாக் பாஜக எம்.பி.யான ஜம்யாங் சேரிங் நாம்கியால் அதைக் கண்டித்தார்.இப்போது இன்னும் அதிகமாக பாஜகவினரின் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறார் சோனம் வாங்சுக். மத, இன வேறுபாடுகளைக் கடந்து, லடாக் மக்கள் அவர் பின்னால் அணிதிரளத் தொடங்கியிருக்கின்றனர். அரசு எடுக்கவிருக்கும் நடவடிக்கையைப் பொறுத்தே லடாக் போராட்டத்தின் திசை அமையும்!
- சந்தனார்