

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய அண்ணாவின் கொள்கை முழக்கம் இது. ஆனால், பொதுவெளியில் ‘கண்ணிய’த்தோடு நடந்துகொள்ள வேண்டிய அமைச்சர்களில், அண்மைக் காலமாகக் ‘கட்டுப்பாடு’ இன்றி நடந்துகொள்ளும் சிலரின் போக்கு, அக்கட்சியின் அடிப்படைக் ‘கடமை’களிலிருந்தே அவர்கள் பிறழ்ந்துவிட்டதைக் காட்டுகிறது.
திருவள்ளூரில் பால்வளத் துறை அமைச்சர் நாசர், தனக்கு நாற்காலி எடுத்து வரத் தாமதமானதால், தொண்டர்கள் மீது கல்லெறிந்த நிகழ்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் திமுக கவுன்சிலரைத் தாக்கியது, அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சேலத்தில் கட்சித் தொண்டர்களைச் சந்தித்த நிகழ்வில், கட்சித் தொண்டர் ஒருவரைத் தலையில் அடித்துத் தள்ளியது என இரு வேறு சம்பவங்களில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறார்.
சமூக வலைதளங்களில் இவையெல்லாம் பேசுபொருளாகியிருக்கின்றன. அமைச்சர்களின் இந்தப் பொறுப்பற்ற செயல்களை எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டித்திருக்கின்றனர்.
திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளின் ஆட்சியிலுமே பேச்சுகளாலும் செயல்பாடுகளாலும் அமைச்சர்கள் சிலர் எதிர்மறையான செய்திகளில் அடிபட்டிருக்கிறார்கள். கட்சி நிர்வாகிகளோ, அமைச்சர்களோ தங்களிடம் பணியாற்றும் உதவியாளர்கள், தொண்டர்கள் மீது வசைமாறிப் பொழிவதும், கோபத்தில் கை நீட்டுவதும் அரசியலில் வழக்கமான ஒன்றுதான். இதுபோன்ற வசையையும், தாக்குதலையும் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் அவமதிப்பாகக் கருதுவதில்லை. சில மணித்துளிகளில் அவர்கள் இயல்பாகிவிடுவார்கள். திரைமறைவில் நடக்கும்போது தெரியவருவதும் இல்லை.
ஆனால், அரசை வழிநடத்தும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் இதுபோன்ற பொதுவெளிச் செயல்பாடுகள், மக்கள் மத்தியில் கவனம் பெற்று, எதிர்மறையான மனப்பான்மையை அரசுக்கு ஏற்படுத்திவிடும். அது அரசில் இடம்பெற்றுள்ள ஏனைய அமைச்சர்கள் நடந்துகொள்ளும் முறைகளையும் சேர்த்தே கேள்விக்குள்ளாக்கும். திமுக தலைவராக 50 ஆண்டுகள் செயல்பட்ட மு.கருணாநிதி, கட்சியில் கண்டிப்புக்குப் பெயர் போனவராக அறியப்பட்டார். ஆனால், பொதுவெளியில் பெரும்பாலும் எந்த முகச் சுளிப்பும் ஏற்படாத வண்ணம் செயல்பட்டவர் அவர். அவர் வழி வந்தவர்கள் என்போர் அதை மறக்கலாமா?
இந்த சம்பவங்களுக்குப் பிறகு, ‘ஜெயலலிதா முதல்வராக இருந்து ஓர் அமைச்சர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருந்தால், அவரது பதவி பறிபோயிருக்கும்’ என்ற கருத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படுத்தியிருந்தார். அப்படியான நடவடிக்கைகள் அதீதமானவை என விமர்சிப்பவர்கள் உண்டு. என்றாலும் அன்றைய அதிமுக ஆட்சியில் முதல்வரிடம் அமைச்சர்களுக்கு அச்சம் இருந்தது; இன்றைய திமுகவில் அது இல்லை என்ற விமர்சனம் தவிர்க்க முடியாதது.
ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்காகப் பேசப்படுவதே அந்த ஆட்சிக்கும் கட்சிக்கும் நல் மதிப்பைப் பெற்றுத் தரும். அது தவறும்பட்சத்தில் ஆட்சியும் கட்சியும் எதிர்மறையாகவே அணுகப்படும். அது அரசியல்ரீதியாகக் கட்சிக்குப் பின்னடைவையும் ஏற்படுத்திவிடலாம். அமைச்சர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் தொடர்வது, சமூகநீதி, சுயமரியாதையை உரக்கப் பேசும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் முதலாளித்துவ, பண்ணையார்தனத்தின் முகமாக இருக்கிறார்கள் என்ற விமர்சனம் உருவாக வழிவகுத்துவிடும்.
‘‘நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புது பிரச்சினையையும் உருவாக்கி இருக்கக் கூடாதே என்ற நினைப்புடன்தான் கண் விழிக்கிறேன். இது சில நேரம் என்னைத் தூங்கவிடாமல் ஆக்கிவிடுகிறது.
உங்கள் செயல்பாடுகள் கட்சிக்கும் உங்களுக்கும் பெருமை தேடித் தருவதுபோல் அமைய வேண்டுமே தவிர, சிறுமைப்படுத்துவதாக அமையக் கூடாது’’ என்று கடந்த அக்டோபரில் கட்சிக் கூட்டத்தில் பேசியபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் மன வேதனையைக் கொட்டித் தீர்த்தார். கட்சியினராகவே இருந்தாலும், பொதுவெளியில் தன் ஆதங்கத்தை அவர் வெளிப்படையாகத் தெரிவித்தது, இதுபோன்ற நெருடல்கள் இனி நிகழாது எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.
அக்கறை மிகுந்த இந்த அறிவுரைக்குப் பிறகு, எந்த அமைச்சராக இருந்தாலும் பொதுவெளியில் எல்லை மீறுவதற்கு முன் முதல்வரின் உரை கண் முன் வந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை என்பதுதான் இரண்டு அமைச்சர்களின் விஷயத்தில் பகிரங்கமாகியிருக்கும் உண்மை.
ஒரு காலத்தில் பணக்காரர்களும் பண்ணையார்களுமே கட்சி நிர்வாகிகளாக இருக்க முடியும் என்ற நிலை இருந்தபோது, எளியவர்களையும் கட்சி நிர்வாகிகளாக்கி அழகு பார்த்த இயக்கம் திமுக. அப்படி வளர்ந்துவந்த கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் இனியாவது ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’டன் செயல்படுவது அவர்களுக்கு மட்டுமல்ல, ஆட்சிக்கும் கட்சிக்கும் நல்லது.
- டி.கார்த்திக்; தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in