

ஒவ்வொரு குழந்தையும் வீட்டுக்கு வெளியே உள்ள உலகைப் பார்க்கத் தொடங்குவது பள்ளிகள் மூலமாகத்தான். ஆகவேதான் பள்ளிகளில் நல்ல காற்றோட்டமான அறைகள் அவசியம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது. கூடவே, பள்ளி வளாகம் துய்மையாக இருப்பதும் பசுமையாக இருப்பதும் அவசியமல்லவா?
பள்ளி வளாகத்தில் பாடங்கள்: இனிமையான கற்கும் சூழலுக்காக, ‘பள்ளியில் பசுமைத் தோட்டம்’ எனும் திட்டத்தைச் செயல்படுத்தலாம். மாணவர்கள் தங்கும் விடுதிகளிலும் இதை நடைமுறைப்படுத்த இயலும். நிழல் தரும் மரங்கள், பூச்செடிகள், மூலிகைச் செடிகள் எனப் பள்ளி வளாகத்திற்குள் தூய்மை, அழகு - சுற்றுச்சூழல் காத்திட இது உதவும். குழாய்களிலிருந்து வீணாகும் தன்ணீரையும், பாத்திரம் கழுவும், கை கழுவும் தண்ணீரையும் செடிகளுக்குப் பயன்படுத்தலாம். குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் வழிமுறைகளையும் உருவாக்கலாம்.
பள்ளி வளாகத்திற்குள் தோட்டத்திற்கான வரைவையும், அதற்கான பட்ஜெட்டையும் முதலிலேயே திட்டமிட்டுத் தயார்ப்படுத்திக்கொள்ளலாம். மாணவர்களை இந்தத் திட்டமிடலில் நேரடியாகப் பங்கேற்க வைக்கலாம். பள்ளி மேலாண்மைக் குழு இதில் பெரும் பங்காற்ற முடியும்.
குழு உறுப்பினர்களின் அனுபவங்கள் தோட்டம் அமைக்க உறுதுணையாக இருக்கும். நிழல்தரும் வேப்ப, புங்கை மரங்கள், தோட்ட வகைக் காய்கறிகள், கொடி வகைகள், பழ வகைகள், பூச்செடிகளைப் பள்ளி வளாகத்தில் நடலாம். மூலிகைப் பண்ணை அமைக்கவும் உதவலாம்.
‘கழிவிலிருந்து செல்வம்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ‘கழிவு மக்கவைப்பான்’ (waste decomposer) மூலம் உரமாக்கி, அதைத் தோட்டங்களில் பயன்படுத்தலாம். மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகளுக்கு இடையிலான வேறுபாட்டைக் கற்பிக்கலாம். தண்ணீர்க் குழாய்கள் அருகில் உறிஞ்சுகுழிகள் அமைக்கலாம். தேங்கும் தண்ணீரைப் பயன்படுத்தும் வகையில் வாழை மரங்கள் நடலாம்.
கிடைக்கும் பலன்கள்: விதை முளைப்பது, இலைவிட்டு வளர்வது, பூ பூப்பது, காய்ப்பது என அனைத்துமே மாணவர்கள் ஆர்வமாக உற்றுநோக்கிக் கற்றுணர வாய்ப்பளிப்பவை. ஒளிச்சேர்க்கை போன்ற பாடங்களுக்குப் பள்ளி வளாகத்திலேயே செய்முறை விளக்கம் கிடைக்கும். உரங்கள் / பூச்சிக்கொல்லிகள், ரசாயன வகை தோட்டமிடும் முறைக்கும் இயற்கைத் தோட்டமிடும் முறைக்கும் இடையிலான வேறுபாட்டை மாணவர்களுக்கு நேரடியாக உணர்த்த முடியும்.
இயற்கைவழி உரங்களைப் பயன்படுத்தினால், நிலத்தைத் தோண்டி தாவரங்களை வளர்க்கும் நுண்ணுயிர்களைக் காட்டலாம். வாய்ப்புள்ள மாணவர்கள் தங்கள் வீடுகளிலும் தோட்டம் அமைக்க பள்ளி அனுபவங்கள் உந்துவிசையாக உதவும். பள்ளி வளாகத்திற்குள் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு ஏற்பாடுகள், பல அடிப்படை அம்சங்களைப் புரிந்துகொள்ள உதவும்.
- கு.செந்தமிழ் செல்வன், தொடர்புக்கு: senthamil1955@gmail.com