

எல்லா வகை இலக்கியங்களும் தமிழில் உண்டு; பக்தி இலக்கியங்கள் உள்பட. பொ.ஆ. 7ஆம் நூற்றாண்டு தொடங்கி 12ஆம் நூற்றாண்டுவரை எடுத்து நடத்தப்பட்ட பக்தி இயக்கம் எனப்பட்ட சைவ, வைணவச் சமய எழுச்சிக்கான (அல்லது திணிப்புக்கான) பிரச்சார இயக்கத்தின் பகுதியாக, சைவ இலக்கியங்களும் வைணவ இலக்கியங்களும் தமிழில் எழுதப்பட்டு மக்களிடம் இசைக்கப்பட்டன. அதற்கு முன்பாக மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த சமண, பௌத்த சமயங்களை எதிர்த்துப் புறப்பட்டதே பக்தி இயக்கம். அது அரச ஆதரவுடன் நடைபெற்ற இயக்கம்.
“சிறுசிறு குலங்களாகவும் குடிகளாகவும் குலங்களின் இணைப்புக்களாகவும் சிதறிக்கிடந்த தமிழ் மக்கள், ஓயாத போரில் ஈடுபட்டதால் போர், படையெடுப்பு, ஊரழிவு ஆகியவற்றின் அடிப்படையில், சங்க காலத் தமிழகத்தில் மெல்லமெல்ல அரசுகள் தோன்றின.
புராதன வாழ்க்கையிலேயே முதலில் தோன்றிய குலங்கள், அவற்றின் விரிவாக அமைந்த குடிகள், அத்தகைய குடிகள் சில சேர்ந்த இணைப்புக் குலங்கள் ஆகியன முட்டி மோதிப் பொருந்திய நிலையில் அளவு மாறுபாடு, குண மாறுபாடாக உருமாறியதே சங்க கால அரசியல் நிறுவனமாகும். ஆனால், தவிர்க்க முடியாத அந்த மாற்றம், துன்பத்தின் மத்தியிலேயே நடந்தேற வேண்டியிருந்தது. துன்பம் நிறைந்த அக்காலப் பகுதியிலேதான் சமணமும் பௌத்தமும் தமிழகத்துக்கு வந்து சேர்ந்தன” என்பார் பேராசிரியர் க.கைலாசபதி.
கிட்டத்தட்ட இதே போன்றதொரு துன்ப இயல் வாழ்க்கை நிலைபெற்ற கங்கைச் சமவெளியில், பொ.ஆ.மு. (கி.மு.) 6ஆம் நூற்றாண்டில் பிறந்த சமணமும் பௌத்தமும், போர்களுக்கும் வன்முறைகளுக்கும் எதிராகப் பேசி மக்கள் மனங்களில் இடம்பெற்றன. திருக்குறள் உள்ளிட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஐம்பெருங் காப்பியங்களும் தமிழுக்குக் கிடைத்த இக்காலத்தையே ‘களப்பிரர் காலம்’ (இருண்ட காலம்) என வைதிகம் பிரச்சாரம் செய்தது.
நிலவுடைமை வர்க்கத்தை விஞ்சும் அளவுக்கு வணிக வர்க்கம் உயர்ந்துவந்த அக்காலத்தில், வளர்ந்துவந்த வணிக வர்க்கத்தின் குரலாகப் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற முழக்கம் பிறந்தது. இந்தச் சமத்துவக் குரலைக் குரல்வளையிலேயே நெரித்திடும் நோக்கு, நிலவுடைமை ஆதிக்க மீட்பு இயக்கமாகப் பரிணமித்த பக்தி இயக்கத்துக்கு இருந்தது. சமணம், பௌத்தம் மட்டுமின்றி எந்தச் சமயமும் சாராத நாட்டுப்புறத் தெய்வ வழிபாடும் தமிழ் மண்ணில் நீக்கமற நிறைந்திருந்தது. சைவ/வைணவ இலக்கியங்கள் இந்தப் பன்முக வழிபாட்டு முறைகளுக்கு எதிராக வன்மம் கக்கியது வரலாறு.
‘மத்த யானையின் ஈருரி மூடிய/ அத்தனேயணி ஆலவா யாய் பணி/ பொய்த்த வன்தவ வேடத்த ராஞ்சமண/ சித்தரை யழிக் கத்திரு வுள்ளமே’ என்று சம்பந்தர் வன்மத்துடன் பாடியிருப்பது ஒரு சோற்றுப் பதம். பல சமண, பௌத்தக் கோயில்களை இடித்துச் சைவ-வைணவக் கோயில்களாக மாற்றிய கரசேவையையும் பக்தி இயக்க காலம் செய்து முடித்ததும் வரலாறு.
‘சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம்’ என்று திருநாவுக்கரசரும், ‘பிண்டத்திரளையும்/ பேய்க்கிட்ட நீர்ச்சோறும்/ உண்டற்கு வேண்டி நீ/ ஓடித்திரியாதே’ என்று பெரியாழ்வாரும் வசைபாடுவதை இன்னொரு சோற்றுப் பதமாகக் கொள்ளலாம். ஆகவே, பன்முகம் கொண்ட தமிழர் வழிபாட்டு மரபை ஒழித்து, ‘ஒரே குலம்... ஒரே கடவுள்’ என்று அன்றைக்குக் கொடிநாட்டிய வாய்களின் வாரிசுகள்தாம் இன்று மொத்தத் தமிழ் மொழியே ஆன்மிக மொழிதான் என்று வெள்ளையடிக்கின்றன.
‘கார் நறுங்கடம்பின் கண்ணி சூடி/ வேலன் வேண்ட வெரிமனை வந்தோய்/ கடவுள் ஆயினும் ஆக/ மடவை மன்ற வாழிய முருகே!’ - (நற்றிணை: 340) என்றொரு பாடலும் சங்க இலக்கியத்தில் உண்டு என்று, தன் ‘கடவுள் ஆயினும் ஆக’ என்கிற நூலில் ஆர்.பாலகிருஷ்ணன் எடுத்துவைக்கிறார். மலைக் கடவுள் முருகனைப் பார்த்து, மலைப் பெண்ணொருத்தி பாடுவதாக வரும் இப்பாடல், ‘நீ பெரிய கடவுளானால் அது உன் மட்டுக்கும்தான். இந்தப்பிரச்சினையில் தலையிட உனக்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்று அம்மலைப் பெண் முருகனிடம் கேட்பதாக வருகிறது.
கடவுளையே கேள்விக்கு உள்ளாக்கிய மொழியாகத் தமிழ் இங்கே ரூபம் கொள்கிறது. பாரதியின் பாடல்களில் அது விடுதலை மொழியாகி நின்றது; பெரியாரின் சொற்களில் அது பகுத்தறிவின் மொழியாகித் தகித்தது; தோழர் ஜீவானந்தத்தின் வார்த்தைகளில் கம்பனைப் போல, ‘தோழமை என்றவர் சொல்லிய சொல் ஓர் சொல்லன்றோ’ என்று தோழமை மொழியாகிச் சுடர்ந்தது. சைவ, வைணவ, கிறிஸ்துவ, இஸ்லாமிய இலக்கியங்களில் அது பக்தி மொழியாகவும் நின்றிருக்கிறது. அந்த அளவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அன்று பன்முக வழிபாடுகளைச் சகட்டுமேனிக்கு அழித்துச் சென்ற புல்டோசராக ஒரு பக்தி இயக்கம் புறப்பட்டதைப் போல, மொத்தத் தமிழையே ஆன்மிக மொழி என்று ஓங்கி அடித்து ஒரு முழக்கம் வடக்கிலிருந்து வருகிறது. எச்சரிக்கை என் தமிழச் சாதியே!
- ச.தமிழ்ச்செல்வன் எழுத்தாளர், பண்பாட்டுச் செயல்பாட்டாளர் தொடர்புக்கு: tamizh53@gmail.com