அறிவியலில் அரசியல் தலையீடு கூடாது! - நோபல் விருதாளர் வெங்கி ராமகிருஷ்ணன் நேர்காணல்

அறிவியலில் அரசியல் தலையீடு கூடாது! - நோபல் விருதாளர் வெங்கி ராமகிருஷ்ணன் நேர்காணல்
Updated on
3 min read

தமிழ்நாட்டின் சிதம்பரத்தைப் பூர்விகமாகக் கொண்ட வெங்கட்ராமன் ‘வெங்கி’ ராமகிருஷ்ணனுக்கு, ‘ரைபோசோமின் கட்டமைப்பு - செயல்பாடு பற்றிய ஆய்வுகளுக்காக’ 2009ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டது. நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து (antibiotics) தயாரிப்பில் இவரது ஆய்வு மிகப் பெரிய பங்களிப்பாக விளங்குகிறது. தமிழ்நாட்டிலிருந்து மூன்று வயதில் பரோடாவுக்குச் சென்றுவிட்ட வெங்கி, 19 வயதில் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். அங்கு இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு, உயிரியலில் அவருக்கு ஆர்வம் உருவானது. உயிரியல் பட்டப் படிப்பிலிருந்து தொடங்கிய வெங்கியின் வேட்கை, அவரை நோபல் பரிசுக்கு அழைத்துபோனது. ‘ரைபோசோம்’ சார்ந்து தன்னுடைய சாகசங்களை விவரித்து, அவர் எழுதிய ‘Gene Machine: The Race to Decipher the Secrets of the Ribosome’ என்கிற நூல் 2018இல் வெளியாகி உலகக் கவனம் பெற்றது. இந்நூல், ‘ஜீன் மெஷின்: ரைபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும்’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது (மொழிபெயர்ப்பு: சற்குணம் ஸ்டீவன்; காலச்சுவடு வெளியீடு). தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டுக்காகச் சென்னை வந்திருந்த அவரைச் சந்தித்து ‘இந்து தமிழ் திசை’க்காக உரையாடினோம். இது அவரது முதல் தமிழ் நேர்காணல்.

நோபல் பரிசுக்குப் பிறகு உங்கள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு முக்கிய நிகழ்வாக எதைக் குறிப்பிடுவீர்கள்; ஒருவேளை பரிசு கிடைத்திருக்கவில்லை என்றால் இது நடந்திருக்காது என நீங்கள் கருதுவது எதை?

உலகின் மிகப் பழமையான பாரம்பரிய அறிவியல் நிறுவனம், லண்டலில் உள்ள ராயல் கழகம் (Royal Society). நியூட்டன், ரூதர்ஃபோர்டு உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர்கள் அதன் தலைவராக இருந்திருக்கிறார்கள். நோபல் பரிசின் விளைவாக, ராயல் கழகத்தின் தலைவராக (2015-2020) நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்; இந்தியாவில் பிறந்த ஒருவர் ராயல் கழகத்துக்குத் தலைவரானது அதுதான் முதல்முறை. இது அறிவியலை பரந்துபட்ட அளவில் பார்ப்பதற்கு எனக்கு உதவியது: அறிவியலுக்கு எப்படி நிதி ஒதுக்கப்படுகிறது, அரசாங்கம் எப்படி அறிவியலுடன் தொடர்பாடுகிறது, பிரெக்ஸிட் பின்னணியில் அறிவியலின் சர்வதேச உறவுகள், அறிவியலை மக்களிடம் எடுத்துச்செல்வது என என்னுடைய அன்றாடப் பணிகளின்போது நான் யோசிக்காத பல்வேறு அம்சங்களை இந்தப் பொறுப்பு எனக்கு அறிமுகப்படுத்தியது. நான் நோபல் பரிசு பெற்றிருக்கவில்லை என்றால் இது நடந்திருக்காது.

மற்றபடி, என் வாழ்வில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டிருக்காது. இன்றும் அதே ஆய்வகத்தில்தான் நான் பணியாற்றுகிறேன், பரிசு பெறுவதற்கு முன்பு வாங்கிய அதே மிதிவண்டியைத்தான் ஓட்டிச் செல்கிறேன், அதே வீட்டில்தான் வசிக்கிறேன், என் வாழ்வில் எதுவும் மாறவில்லை.

‘ஜீன் மெஷின்’ ஆங்கிலத்தில் வெளியாகி உலகப் புகழ்பெற்ற நூல்; தமிழ் வாசகர்கள் ‘ஜீன் மெஷின்’ நூலை எப்படி அணுக வேண்டும் என நினைக்கிறீர்கள்?

தமிழ்நாட்டில் உள்ள இளையோருக்கு, குறிப்பாக ஆங்கிலவழியில் கல்வி பயிலாத, இன்னும் பிற வாய்ப்புகள் அமையாத சூழல்களில் வளர்ந்துவரும் இளையோருக்கு, தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஒருவரால் அறிவியலில் இத்தகைய இடத்தை அடையமுடியும் என்கிற உணர்வை, ‘ஜீன் மெஷின்’ அளிக்கும் என நம்புகிறேன். கடந்த நூறு ஆண்டுகளில், உலகளவில் புகழ்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர் என சீனிவாச ராமானுஜனைச் சொல்லமுடியும்; உண்மையான அறிவியலாளராக, கணிதமேதையாக ராயல் கழகத்துக்குத் தேர்வான முதல் இந்தியர் அவர்தான். சி.வி.ராமன், சுப்ரமணியன் சந்திரசேகர் உள்ளிட்ட பலருக்கும் அது ஊக்கமாக அமைந்தது. இப்படியாக உலகளவிலான மிகச் சிறந்த அறிவியலாளர்களைத் தமிழ்நாடு தந்துள்ளது, நான் அவர்கள் இடத்தில் என்னை வைத்துப் பார்க்கவில்லை; நான் சாதாரணன். அறிவியலை நோக்கிய ஓர் உந்துதலை, சுவாரசியமாக ஒன்றைச் செய்ய வேண்டும் என்கிற வேட்கையை தமிழ்நாட்டு இளையோர் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அது நோபல் பரிசில்தான் சென்று முடியவேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது, நோபல் பரிசு என்பது அதிர்ஷ்டம்தான். ஆனால், முயல வேண்டும்.

டி.என்.ஏ. வடிவம் கண்டறியப்பட்ட 70ஆம் ஆண்டு இது; அப்போதிருந்து இத்துறையில் மிகப் பெரிய முன்னேற்றங்கள் உருவாகிவந்துள்ளன. கிறிஸ்பர்-க்கு (CRISPR) 2019இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவை எல்லாம் மனிதகுலத்தை எங்கு அழைத்துச் செல்லும் என நினைக்கிறீர்கள்; வாழ்வின் புதிரை அறிவியல் விடுவிக்குமா?

உயிர் வாழ்வு எப்படித் தோன்றியது என்பது மிகப் பெரிய புதிர். ஆனால், மனித வாழ்வும் ஏராளமான புதிர்களைக் கொண்டுள்ளது: எப்படி ஒற்றை செல் கருமுட்டை வளர்ந்து ஓர் முழு உயிரினமாக ஆகிறது, நாம் எப்படி இறந்துபோகிறோம் என்பன போன்றவை நீண்ட காலமாக நிலவிவரும் புதிர்கள். மூளை எப்படி வேலை செய்கிறது என்பது இன்னொரு புதிர். நனவு (consciousness) - அதன் அடிப்படை என்ன, அது எப்படி மேலெழுந்தது, உயிரியல் பொருளில் நனவு என்றால் என்ன என்பன போன்ற கேள்விகளும் முக்கியமானவை.

நமக்கு எப்படி வயதாகிறது, ஏன் இறந்து போகிறோம் என்பதும் ஒரு புதிர்தான். ஏன் வெவ்வேறு உயிரினங்கள் வெவ்வேறு வயதில் இறந்துபோகின்றன. நாய் சுமார் 15 ஆண்டுகள் வாழ்கிறது, மனிதர்களான நாம் அதைவிட சுமார் ஏழு மடங்கு காலம் வாழ்கிறோம். வண்ணத்துப்பூச்சியின் ஆயுள் மிகக் குறுகியது; ஆனால் ஆமை, திமிங்கலம் போன்றவையோ நூற்றாண்டுகள் வாழ்கின்றன. இந்தக் கேள்விகளுக்கு விடைதேடும் வகையில், புதிய நூல் ஒன்றை இப்போது நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

நுண்ணோக்கி வழியிலான உங்கள் வாழ்நாள் ஆராய்ச்சி, யதார்த்த வாழ்வை நோக்கிய உங்கள் பார்வையை எப்படி வடிவமைத்தது?

இரண்டும் ஒன்றல்ல, வெவ்வேறு நிலைகள். நான் ஒரு நடைக்குச் செல்லும்போது அல்லது பூங்காவில் இருக்கும்போது நுண்ணோக்கியின் கண்ணோட்டத்தில் அல்லாமல், எல்லாரையும்போல் சாதாரணமாகத்தான் பார்க்கிறேன். அழகு எல்லா நிலைகளிலும் இருக்கிறது என்பதையே நுண்ணோக்கி நிலையிலிருந்து பார்த்த அனுபவங்கள் உணர்த்துகின்றன. நீங்கள் ஒரு மலரைப் பார்க்கிறீர்கள், அது அழகாக இருக்கிறது. நுண்ணோக்கி உதவியுடன் அதைப் பெரிதாக்கிப் பார்க்கும்போது, அது தனித்த இன்னொரு அழகுடன் தெரிகிறது. அதன் உள்ளமைப்போ முந்தைய நிலையிலிருந்து மாறுபட்ட தனித்த அழகைக் கொண்டுள்ளது, மூலக்கூறு நிலைவரை ஒவ்வொரு நிலையிலும் அழகு தனித்த ஒன்றாகவே இருக்கிறது. நீங்கள் மலையேற்றத்துக்குச் செல்கிறீர்கள். மலை உச்சியிலிருந்து ஏரி, குளங்கள், செடிகொடிகள், மரங்கள், பறவைகள் என இயற்கையின் பல விதமான அங்கங்களைக் கண்டுகளிக்கிறீர்கள். யதார்த்த உலகில் அவை என்ன அழகுடன் திகழ்கின்றனவோ, அதேபோல் தனித்த அழகுடன் அதன் நுண்ணிய நிலைவரை தொடர்கின்றன!

இந்தியாவில் அறிவியல் ஆய்வுகளின் நிலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

இந்தியாவில் சிறுசிறு தொகுப்புகளாக, சில இடங்களில் மட்டும் அறிவியல் சிறந்து விளங்குவதாக உணர்கிறேன். சிறந்த அறிவியலாளர்கள் இந்தியாவில் வெகு சிலர் இருக்கிறார்கள், அவர்களை அத்துறையின் உலகத் தலைவர்கள் என்பேன். அத்துறையில் புதிய திறப்புகளை, கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் அவர்கள், துறையின் முன்னோடிகளாவர். அவர்களைப் போன்ற நிறைய பேர் இந்தியாவுக்குத் தேவை.

இந்தியாவில் அறிவியலுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு ஒரு முக்கியமான பிரச்சினை. வளர்ந்த நாடுகளைவிடப் பல மடங்கு குறைவான நிதியே அறிவியலுக்கு ஒதுக்கப்படுகிறது; சீனாவைவிட நிதி ஒதுக்கீடு மிகக் குறைவாக இருக்கிறது. மற்றொரு பிரச்சினை அரசாங்கத்தின் அணுகுமுறை. ஒதுக்கப்படும் நிதியை அறிவியலாளர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என அரசு தொடர்ந்து கண்காணிப்பது. மோசடி செய்வதற்கெல்லாம் அறிவியலாளர்களுக்கு நேரமில்லை என்பதை அரசு உணர வேண்டும். அறிவியல் அமைப்புகளின் இயக்குநர்கள் நியமனத்தில் அரசியல் கூடாது, அதை அறிவியல் சமூகத்திடமே விட்டுவிட வேண்டும்.

அறிவியல், ஆய்வு ஆகியவற்றைத் தாண்டிய உங்கள் பிற ஈடுபாடுகள்…

என்னுடைய துறையைத் தாண்டி மற்ற துறைகளில் எனக்குப் பெரிய நிபுணத்துவம் கிடையாது; எனவே, அறிவியலின் மற்ற பிரிவுகள் சார்ந்த வெகுஜன எழுத்துக்களை வாசிப்பது எனக்குப் பிடிக்கும். வரலாறு உள்ளிட்ட எல்லா வகையான அல்புனைவுகளும் வாசிப்பேன்; நாவல்கள் வாசிக்கப் பிடிக்கும், திரைப்படங்கள் பார்ப்பேன், இசையும் கேட்பதுண்டு. மலையேற்றம் எனக்குப் பிடித்தச் செயல்பாடு. தற்போதைய இந்தியப் பயணத்தில், கேரளத்தின் பாலக்காட்டில் மலையேற்றத்துக்குப் பிந்தைய இரவுத் தங்கல் ஓர் அற்புதமான அனுபவமாக அமைந்தது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in