அஞ்சலி: கே.விஸ்வநாத் | நெடிய கலைப் பயணத்தின் இளைப்பாறல்

அஞ்சலி: கே.விஸ்வநாத் | நெடிய கலைப் பயணத்தின் இளைப்பாறல்
Updated on
3 min read

மாற்றங்களின் வேறுபட்ட பாதைகளில் பயணித்துச் செல்லும் இந்திய சினிமாவின் தடங்களில் முக்கியமான திசைகளைக் காட்டியவை கே.விஸ்வநாத்தின் படங்கள். இவர் தீவிர சினிமா ஆள் இல்லை; வியாபார வெற்றிக்கான வரையறை கொண்ட இயக்குநரும் அல்ல. சிற்சில சறுக்கல்களைக் கழித்துவிட்டுப் பார்த்தால், பழைமை கலந்த தென்னிந்தியக் கிராமங்களின் வாழ்க்கையைக் காட்சிப் படிமங்களாக்கித் தந்தவர். தரமான படங்களைத் தந்தவர் என்ற நல்ல பெயரோடு 92 வயதில் ஒரு கலைஞனின் மறைவு என்பது நீண்ட நெடிய கலைப் பயணத்தின் இளைப்பாறல் என்றுதான் கொள்ள வேண்டும்.

தமிழைப் பொறுத்தவரை ‘சலங்கை ஒலி’, ‘சிப்பிக்குள் முத்து’, ‘பாசவலை’ போன்ற கமல் ஹாசன் படங்கள் வழிதான் கே.விஸ்வநாத் நமக்கு நன்கு அறியப்படத் தொடங்கினார். ஆனால், ‘சங்கராபரணம்’ படம் வழி அதற்கு முன்பே இந்திய அளவில் அவர் பிரபலமாகியிருந்தார். ‘இசைக்கு ஒரு கோவில்’ (‘சுருதி லயலு’) உள்ளிட்ட அவரது வேறுவேறு படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் கமல் நடிப்பில் வந்த படங்களைத் தவிர, மற்ற மொழிமாற்றப் படங்கள் போதிய கவனம் பெறவில்லை.

2017இல் டெல்லியில் நடைபெற்ற விழாவில் திரைப்படத்துக்கான நாட்டின் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது, வாழ்நாள் சாதனைக்காக விஸ்வநாத்துக்கு அளிக்கப்பட்டது. திரைப்படத் துறையில் அப்படியென்ன வாழ்நாள் சாதனையை கே.விஸ்வநாத் புரிந்துள்ளார் என்பதை இன்றைய தலைமுறை புரிந்துகொள்வது கடினம்தான். இருந்தாலும் கமல் வழியே சொன்னால் எளிதாக அவர்களுக்குப் புரியக்கூடும். கமலிடமிருந்தே விஸ்வநாத் பற்றிய விவரங்களைத் தொடங்கலாம். 80களில் கமல் ஹாசன், இனி பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்கமாட்டேன் என்கிற ஒரு கருத்தைப் பொதுவெளியில் வெளியிட்டார். ஆனால், அதற்குப் பிறகு கே.விஸ்வநாத்தின் ‘பாசவலை’யில் நடித்தார். இதிலிருந்து அவர் தனது தீர்மானத்தில் விஸ்வநாத்துக்கு மட்டும் விலக்கு அளித்திருந்தார் எனப் புரிந்துகொள்ளலாம். அந்த அளவுக்கு அவர்மீது கமலுக்கு மரியாதை இருந்தது. இந்த மரியாதையை ‘பாசவலை’ படத்தின் காட்சிகளில் உணர முடியும்.

ஏனெனில் கே. பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா இவர்களையெல்லாம்விட விஸ்வநாத்தான் தனது ‘சாகர சங்கமம்’ (தமிழில்: ‘சலங்கை ஒலி’) வழி கமல் என்னும் பெரும் கலைஞனை வெளிக்கொணர்ந்தவர். அதையும் கடந்து ‘ஸ்வாதி முத்யம்’ (தமிழில்: ‘சிப்பிக்குள் முத்து’) திரைப்படத்தில் அபலைப் பெண்ணின் துயரம் பொறுக்காத அப்பாவி இளைஞனாகப் பரிமளித்த பாத்திரம் அது. ஆஸ்கருக்கும் பரிந்துரைக்கப்பட்டது. தமிழில் சிவாஜிகணேசன் நடித்த ‘தெய்வமகன்’ படத்திற்குப் பிறகு சில பத்தாண்டுகள் கழித்து அப்போதுதான் ஒரு தமிழ்க் கலைஞனின் படம் மீண்டும் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

நாம் வழக்கமாகப் பார்த்த கமல் இவ்வளவு செய்யமுடியுமா என்று வியக்கவைத்தவர் விஸ்வநாத். வாழ்க்கையிலிருந்து விலகினாலும் நாட்டிய சாஸ்திரத்திலிருந்து சற்றும் விலகாத லட்சியக் கதாபாத்திரத்தை ‘சலங்கை ஒலி’யில் கமல் ஏற்றபோது, சாஸ்திரிய விமர்சகர்களிடமிருந்து சில விமர்சனங்களும் வரத்தான் செய்தன. அக்குள் முடியை எடுக்காமலேயே கமல் பரதநாட்டியம் ஆடினார் என்ற காமாசோமா விமர்சனங்களே அவை. கமலுடைய கதாபாத்திரம், தோல்வியடைந்த கலைஞன் என்றாலும், தனது கொள்கைக்காக எதையும் விட்டுக்கொடுக்காத லட்சிய நாட்டியக் கலைஞனாக வாழும் பாத்திரம். கதக், பரதம் போன்ற நடனங்கள் வேறுபடும் நுட்பமான தளங்களை வெளிப்படுத்தியிருந்த ‘சலங்கை ஒலி’ காட்சியில் தென்னிந்தியச் செவ்வியல் நடனத்தின் அழகை இவ்வளவு நேர்த்தியாக எந்தத் திரைப்படமும் பேசியதில்லை என்ற அளவுக்கு அமைந்திருந்தது.

தமிழில் அக்காலத்தில் பெண்களுக்கான குரல் தரும் படங்களாக கே.எஸ்.கோபால கிருஷ்ணன், கே.பாலசந்தர், படங்களுக்குப் பிறகு விசு படங்களே அதிகமாக வெளிவந்தன. ஆனால், அதற்கு முன்னதாக ‘விதி’ இந்தப் படங்களையும் தாண்டி அப்படத்தின் வசனங்களுக்காக பெரும் வெற்றியைப் பெற்றது. இத்தகைய படங்கள் எல்லாம் வசனங்களாலும் எடுத்துக்கொண்ட பிரச்சினைகளாலும் நட்சத்திர நடிப்பினாலும் கவனம்பெற்றன. ஆனால், ‘ஸ்வாதி முத்யம்’ பெண்களின் இதயத்தோடு உரையாடியது. விதவை மறுமணத்தைப் பேசிய, தெலுங்கில் வெளிவந்த ‘ஸ்வாதி முத்யம்’ தமிழில் ‘சிப்பிக்குள் முத்து’ என்ற பெயரில் வெளியானது. ஒரு முழுமையான சினிமா என்கிற உலகளாவிய தகுதியோடு தமிழ் ரசிகர்களை ஆகர்ஷித்தது இப்படம். ஒரு ரசிகையின் தூய அன்புக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பாட முடியாத சூழலுக்கு ஆளான ஒரு இசைக் கலைஞனின் வாழ்வைப் பேசும் ‘சங்கராபரணம்’ திரைப்படம் ஒன்று போதும். கலைக்கு சாதி, மதம், மொழி, இனம், வர்க்கம் என்ற பேதம் இல்லை என்பதைக் கூறும் இப்படம் இந்தியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக இன்றளவும் பட்டியலில் இடம் பெற்றுவருகிறது.

இந்திய இசையை... இந்திய வாழ்வியல் தரிசனத்தைப் படங்களாகத் தருவதை கே.விஸ்வநாத் தனது வாழ்நாள் பணியாக அவர் மேற்கொண்டதை அவ்வளவு எளிதில் யாரும் புறக்கணித்துவிட முடியாது. 53 படங்களை அவர் இயக்கியுள்ளார்.

தனக்கென்று ஒரு திரைப்பாணியை வடிவமைத்துக் கொண்டு அதை முழுமையாக நம்பினார். சனாதன கிராம சமூகத்தைத்தான் அவர் படைத்தார். ஆனால், அதில் உள்ள சிடுக்குகளைத் தன் படங்கள் வழி விமர்சனம் செய்தார். ‘சிரிசிரிமூவா’, ‘சப்தபதி’, ‘சுயம்குருஷி’, ‘ஸ்வர்ணாபிஷேகம்’, ‘சுப்ரபாதம்’, ‘சுபலேகா’, ‘சுருதி லயலு’, ‘ஸ்வாதிகிரணம்’ போன்ற பல படங்களிலும் நாடோடி சமூகத்தையும் நிலவுடைமைச் சமூகத்தையும் அவற்றின் உள்ளார்ந்த அன்புப் பரிமாற்றங்களையும் அவர் பேசத் தவறவில்லை.

தென்னிந்திய வாழ்வியலுக்கான தெளிவும் உறுதியும்மிக்க படைப்பாளிகளின் வரிசையில் கே.விஸ்வநாத்துக்குத்தான் முதல் இடம் என்பதை நாம் மறுத்துவிட முடியாது. ஏனெனில், ஒரு திரைப்படம் முதலில் வட்டாரரீதியான பிரதேசரீதியான கலையம்சத்தை அடிநாதமாகக் கொண்டிருக்கவேண்டும். அதிலிருந்து நீங்கள் பேசும் விஷயம்தான் அது மறுமலர்ச்சிக்கு உகந்ததா இல்லையா என்பதை ஆராய முடியும். அதுவே உலகத் திரைப்படங்களின் போக்காக இருப்பதையும் நாம் காணலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in