

நெல்லை மாவட்டத்தில் கடந்த 40 ஆண்டுகளாக கணியான் கூத்து ஆடி வந்தவர் நெல்லை தங்கராசு. பெண் வேடம் கட்டி ஆடுவது இந்தக் கூத்தில் பிரபலமான ஒன்று. தங்கராசு பெண் வேடம் கட்டி ஆடிவந்தவர். பெண்களைப் போன்று ஜாடைகளுடன் இந்தக் கலைஞர்கள் ஆடுவது பார்வையாளர்களை வினோதமாக ஈர்க்கும். இவர்கள் ஒப்பனை கலைத்த பிறகும் அந்த ஜாடையிலேயே இருப்பார்கள். இது சமூகத்துடனான அவர் உறவில் ஏளனத்தையும் உண்டாக்கும். இந்தப் புள்ளியைத்தான் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் காண்பித்தார். அந்தப் படத்தில் பெண் வேடம் கட்டும் நடனக் கலைஞராக முக்கியமான கதாபாத்திரத்தில் தங்கராசு நடித்திருந்தார். தன் அபார நடிப்பால் காண்பவரைக் கண் கலங்கச் செய்தார் தங்கராசு. கூத்து இல்லாத காலகட்டத்தில் வெள்ளரிக்காய்த் தோட்டக் காவலாளி, பாளையங்கோட்டை சந்தையில் வேலை என வாழ்க்கையைக் கடத்தியவர் அவர். இந்தப் படம் வெளிவந்த பிறகு அவருக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க விருது கிடைத்து சிறு வெளிச்சமும் இவரது வாழ்க்கையின் மீது படர்ந்தது. தமுஎகச மாவட்ட செயலாளர் நாறும்பூநாதன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் கூட்டு முயற்சியில் அவருக்கு ஒரு வீடு கட்டித் தரப்பட்டது. இவ்வளவு நாள் கூத்தில் கிடைக்காத கெளரவம், ஒரே ஒரு சினிமாவில் கிடைத்துவிட்டதாக தங்கராசு ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார். ‘என் கடைசி படைப்பு வரையிலும் உங்கள் பாதச்சுவடிருக்கும்’ என மாரி செல்வராஜ் தன் அஞ்சலிக் குறிப்பில் சொல்லியிருப்பதுபோல் அந்த நடனக் கலைஞன் கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் ஒரு நீங்காச் சுவடாக இருக்கும்.
-விபின்