

அரசு ஊழியர்களுக்கு மாதாந்திர ஊதியத்தை வழங்க முடியாமல் திண்டாடுகிறது இலங்கை அரசு. பெருந்தொற்றுக் காலத் தடைகளாலும் பொருளாதார நெருக்கடியாலும் தடைபட்ட பொதுத் தேர்வுகளில் ஒன்றான உயர்தரத் தேர்வு இப்போது நடைபெறவுள்ளது.
இப்படியான சூழலில் மின்சாரத்தைத் தடைசெய்ய மாட்டோம் என அரசு அறிவித்தபோதும், நாள் ஒன்றில் இரண்டு முறை மின்தடை ஏற்படுகிறது. பொருளாதார மீட்சி எட்டாத தூரத்தில் இருக்கும் இந்தத் தறுவாயில், சர்வதேச நாடுகளின் உதவிகளை நம்பியிருக்கும் இலங்கைக்குக் கனடா ஒரு பேரிடியைப் பரிசாக வழங்கியிருக்கிறது. நாளை (பிப்ரவரி 4) சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இலங்கைக்கு இதன் மூலம் ஒரு செய்தி உணர்த்தப்படுகிறது.
நின்று கொல்லும் தெய்வம்: இலங்கையின் இன்றைய நிலைக்கு ஈழத் தமிழர் விவகாரம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. ஈழத் தமிழர்களின் விவகாரத்தை இலங்கை கையாளக்கூடிய வகையில்தான் இனி இலங்கையின் அடுத்த கட்டம் அடங்கியிருக்கிறது என்று சொல்வதில் பிசகில்லை.
இலங்கையைப் பொறுத்தவரையில் சிங்களர்கள்தான் பெரும்பான்மையினர்: 74% பேர் சிங்களர்கள்; 12.6% பேர் ஈழத் தமிழர்கள். பெரும்பான்மை இனம் நினைப்பதே நடக்கும் என்ற 'பெரும்பான்மையின மனநிலை' வெகுகாலம் நீடித்தது. அந்த நினைப்புக்கு இப்போது பெரும் சிக்கல் எழுந்திருக்கிறது.
ஆம்! ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர் இலங்கையை நின்று கொல்லும் தெய்வமாகத் துரத்துகிறது. போரில் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் ஐநா அவை, தனது அறிக்கைகளில் தெளிவாகப் பதிவுசெய்துள்ளது. போர் முடிவுக்குவந்து கடந்த 13 ஆண்டு காலப் பகுதியில் மனிதகுலத்துக்கு விரோதமான, மிக மோசமான மனித உரிமை மீறல்களை இலங்கை புரிந்திருப்பதாக ஐநா மனித உரிமைப் பேரவை கூறியிருக்கிறது. அத்துடன் உள்நாட்டு விசாரணை ஒன்றை நடத்தித் தீர்வு வழங்க வேண்டும் என்றும் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது.
2009 இல் போர் முடிவுக்குவந்த சமயத்தில், சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் இல்லாமல் ஆக்கப்பட்டிருந்த நிலையில், 2010இல் ஐநா அவை கூடியபோதும் இலங்கை விவகாரம் சரியாக அணுகப்படவில்லை. 2015இல் இலங்கைக்கு எதிராக 30/1 என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்த ஐநா, அதற்குக் கால அவகாசத்தை அளித்தது. அத்துடன் கடந்த காலத்தில் மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்ட 30/1, 34/1, 40/1 தீர்மானங்களைக்கூட நிறைவேற்றாமல் ஒருதலைப்பட்சமாக இலங்கை விலகியும் நழுவியும் வந்திருக்கிறது.
இன்றைய நிலை: கடந்த ஆண்டு நடந்த ஐநா மனித உரிமைப் பேரவையின் 51 ஆவது அமர்வில், 46/1 என்ற தீர்மானத்தை வெளியிட்ட ஐநாவின் ஆணையாளர் மிச்சல் பச்லெட், இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மீண்டும் நடைபெறாத வகையில், பொறுப்புக்கூறல் மற்றும் ஆழமான மறுசீரமைப்புகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கி, பொறுப்புக்கூறலை நிறைவேற்றும் வகையில் சட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கூடவே, இலங்கை அரசு பொறுப்புக்கூறலில் தனது கடமையைச் சரியாகச் செய்யும் என்ற நம்பிக்கையைத் தாம் இழந்துவிட்டதாகவும் ராணுவம் கையகப்படுத்திய நிலங்களை மீள அளிக்க வேண்டும், ராணுவ நடமாட்டத்தைத் தமிழர் பகுதிகளில் குறைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். என்றாலும்கூட இலங்கையின் நிலவரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இலங்கை அரசுக்கு எதிராக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்துக்கு அழைப்புவிடுத்துள்ள நிலையில், அவர்களை அச்சுறுத்தும் விதத்தில் இலங்கை ராணுவம் செயல்படுவதே இன்றைய நிலைமை.
அனுமதி மறுப்பு: பொருளாதார நெருக்கடியால் நொந்துகிடக்கும் இலங்கைக்கு, இனவழிப்புப் போரால் இன்று பாரிய நெருக்கடி நேரிட்டிருக்கிறது. இலங்கைக்கு கனடா ஒரு பேரிடியை அதிரடியாகக் கொடுத்திருக்கிறது. போரில் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அதிபர்களான மகிந்த ராஜபக்ச, கோத்தபய ராஜபக்ச, ராணுவ அதிகாரிகளான சார்ஜன்ட் சுனில் ரத்நாயக, லெப்கமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு நாட்டுக்குள் நுழையத் தடை விதித்திருக்கிறது கனடா. ஒரு நாட்டின் முன்னாள் அதிபர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட இந்தத் தடை, கிட்டத்தட்ட ஒரு நாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையாகவே அர்த்தம் கொள்ளப்படுகிறது.
“இலங்கையில் 1983 முதல் 2009 வரை இடம்பெற்ற ஆயுத மோதலின்போது மனித உரிமைகளைத் திட்டமிட்டு மீறியமைக்காக நான்கு இலங்கை அதிகாரிகளுக்கு எதிராக ‘சிறப்புப் பொருளாதார நடவடிக்கைகள்’ சட்டத்தின் கீழ் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதித்துள்ளோம்” என கனடா வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜொய் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொறுப்புக்கூறல் குறித்து கனடாவும் சர்வதேசச் சமூகமும் விடுத்த கோரிக்கையை இலங்கை நிறைவேற்றவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. இலங்கை அரசு போர்க்குற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் கனடா சொல்லியிருப்பது இலங்கை மீது விழுந்த எதிர்பாராத அடி. ஆனால், விடுதலைப் புலிகளின் கைப்பொம்மை நாடெனக் கனடாவை ராஜபக்ச ஆதரவாளர்கள் தூற்றுகின்றனர்.
ஈழத் தமிழர்க்கு ஆதரவு: போரால் புலம்பெயர்ந்த தமிழர்களில் அதிகமானவர்கள் கனடாவில்தான் வசிக்கின்றனர். அங்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் பலர் உள்ளனர். தமிழர்களுக்கு எதிரான போரை கனடா தொடர்ந்து எதிர்த்துவந்தது. போருக்குப் பிறகும் கனடா தமிழர்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தே வந்தது.
அண்மையில்கூட இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தைக் கனடா அரசு அங்கீகரித்தமைகூட, அந்நாட்டால் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொண்ட செயலாகும். அத்துடன், ‘இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதைக் கனடா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதற்கான உறுதியான செய்திதான் இந்தத் தடை’ என்று கண்டிப்புடன் கூறியிருக்கிறது; பிற நாடுகளும் இதைப் பின்பற்றக்கூடும்.
தீர்க்கப்பட வேண்டியவை: இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீர வேண்டுமாயின், அதற்கு அடிப்படையாக இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இன முரண்பாடுகளற்ற நிலையே நாட்டின் அபிவிருத்திக்கும் அமைதிக்கும் அடிப்படையானது. நாட்டின் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமாயின், போரில் நடந்த இனவழிப்பு மீறல்கள் குறித்தும் உண்மையும் நீதியும் பொறுப்புக்கூறலும் முன்வைக்கப்பட வேண்டும். போரில் இழைக்கப்பட்ட மோசமான அநீதிகளை மறைத்து இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது சாத்தியமற்றது.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக மனிதகுல விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை அளிக்கப்பட வேண்டும். உண்மையும் வெளிப்படையுமான சூழலில் உருவாக்கப்படும் நீதியும் அமைதித் தீர்வும்தான் இலங்கையின் நிலையான மேம்பாட்டுக்கு உதவும்.
அத்துடன் ‘இலங்கை சுதந்திர தினத்தில் தமிழருக்குத் தீர்வு தருவேன்’ என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே வழங்கியுள்ள வாக்குறுதியின் உண்மை நிலை நாளை நடக்கவுள்ள இலங்கை சுதந்திர தின நிகழ்வில்தான் தெரியப்போகிறது. அத்துடன் கனடாவின் நிலைப்பாட்டை ஏனைய நாடுகளும் பின்தொடர்வதும், விடுவதும் இலங்கை அரசின் கைகளில்தான் இருக்கிறது.
- தீபச்செல்வன் இலங்கைக் கவிஞர், பத்திரிகையாளர்; தொடர்புக்கு: deebachelvan@gmail.com