

எவ்வித அறிவியல் ஆதாரங்களும் இல்லாமல், ஒருவருடைய நம்பிக்கையின் அடிப்படையிலான கருத்துகளுக்கு அறிவியல் சார்ந்த பிம்பத்தை உருவாக்குவதே போலி அறிவியல். பொதுவாகவே, பல எதிர்மறை விளைவுகளுக்கு வழிவகுக்கும் போலி அறிவியல், மருத்துவத் துறையில் எண்ணிலடங்கா இன்னல்களை ஏற்படுத்திவருகிறது.
முன்பெல்லாம் புத்தகங்கள், குறுந்தட்டுகள், வாய்மொழி வதந்திகள் போன்றவற்றின் மூலம் போலி அறிவியல் பரப்பப்பட்டுவந்தது. இன்றைக்கு, சமூக வலைதளங்களில் பன்மடங்கு வேகத்தில் பரப்பப்படுகிறது. எதையும் ஆராயாமல் கண்மூடித்தனமாக நம்பி இவற்றை முயற்சித்துப் பார்க்கவும், அடுத்தவருக்கு அனுப்பவும் ஒரு பெரும் கூட்டம் தயாராக இருக்கிறது. இதனால் பல விபரீதங்களும் நேரிடுகின்றன. சில மாதங்களுக்கு முன் செங்காந்தள் கிழங்கை உட்கொண்டு இறந்த இளைஞரின் செயல் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
இன்ஸ்டகிராம் பக்கங்கள் தொடங்கி குழந்தைப்பேறு, தாய்மார்களின் நலன், குழந்தை வளர்ப்பு ஆகியவை தொடர்பான ஆலோசனைகளைப் பல பெண்கள் - மருத்துவப் படிப்பே பயிலாதவர்கள் - பதிவிட்டுவருகின்றனர். மாற்று மருத்துவம் என்கிற பெயரிலும் அங்கீகாரம் இல்லாத தனிநபர்கள் கருத்துகளைப் பகிர்கின்றனர். அனுபவங்களைப் பகிர்வதிலும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் எந்தச் சிக்கலும் இல்லை.
ஆனால், அறிவியல்ரீதியாக நிரூபணமாகாத விஷயங்களை எந்தத் தயக்கமும் இல்லாமல் இவர்கள் பரிந்துரைக்கின்றனர். யூடியூப் காணொளிகளைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவங்களும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் தமிழ்நாட்டை அதிரவைத்தவை. ஆனாலும் இந்தப் போக்கு தொடரவே செய்கிறது.
தகுதியான பட்டங்களும் முறையான அனுபவமும் இன்றி மருத்துவ ஆலோசனையையும் ஒரு சாரார் வழங்குகின்றனர். உதாரணத்துக்கு, இளங்கலை உளவியல் (B.Sc. Psychology) படித்தவருக்கு மருத்துவரீதியான உளவியல் ஆலோசனை சார்ந்த எந்தப் புரிதலும், அனுபவ அறிவும் இருக்காது.
மனநோய் சம்பந்தப்பட்ட அடிப்படை தெரிந்திருந்தாலும், அதற்குச் சிகிச்சையளிக்க முடியாது. இவர்களிடம் ஆலோசனை பெறுவதால் உளச்சிக்கல் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். சிலர் இணையவழி உளவியல் ஆலோசனை மட்டுமே தந்து கணிசமான தொகையையும் வசூலித்துவிடுகின்றனர்.
போதாக்குறைக்கு, மருத்துவர் எனும் பெயரில் இருக்கும் போலிகளுக்குப் பல யூடியூப் சேனல்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. அவர்களின் பேட்டியை வெளியிடுகின்றன. உண்மையை மக்களிடம் கொண்டுசேர்க்கும் ஊடக தர்மத்துக்கு நேரெதிராக, போலி அறிவியலை இதுபோன்ற சேனல்கள் பரப்பிவருகின்றன.
இதனால், போலி அறிவியலாளர்களையும் போலி மருத்துவர்களையும் அவர்கள் மூலம் பரவும் பொய்யான, பல நேரம் ஆபத்தை விளைவிக்கும் ‘மருத்துவப் பரிந்துரை’களையும் எதிர்த்துப் போராட வேண்டிய நெருக்கடிக்கு மருத்துவர்கள் ஆளாகியுள்ளனர். இந்தப் பொறுப்பு மருத்துவர்களுக்கு மட்டுமானது அல்ல.
போலி அறிவியல் கருத்துகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வைப் பெறுவதுடன், அதை மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லவும் மக்கள் தயாராக வேண்டும். ஏனெனில், இறுதியில் இழப்பை எதிர்கொள்பவர்கள் அவர்கள்தானே
- விஜய பிரியங்கா, தொடர்புக்கு: priyankakathir6666@gmail.com