

சேலம் மாவட்டம் திருமலைகிரியில் உள்ள பெரிய அம்மன் கோயிலில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர் பிரவீன், சாமி கும்பிடப் போனதற்காக திமுக நிர்வாகி ஒருவர் தகாத சொற்களால் அவரைத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதையடுத்து, இரும்பாலை காவல் துறை, பாதிக்கப்பட்ட பிரவீனை அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு அதிகாரி தனக்கு விதிக்கப்பட்ட பொறுப்புகளை வேண்டுமென்றே தட்டிக் கழிப்பது குற்றம். அதற்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனை என்றும், ஆற்ற வேண்டிய கடமையை மறுக்கும் அதிகாரிக்கும் ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கலாம் என்றும் இச்சட்டத்தின் பிரிவு 4 கூறுகிறது. வன்கொடுமை வழக்குகளில் சமரசம் செய்வதற்குப் போலீஸ் அதிகாரிகள் முயல்வது குற்றம் என இந்தப் பிரிவுக்கு ஒரு விளக்கம் சேர்ப்பதற்கு அரசாங்கத்துக்குப் பரிந்துரைக்க வேண்டிய தேவை இருக்கிறது.
சமூக மாற்றத்துக்கு முன்னுரிமை: தலித், பெண்கள், பழங்குடியினர் ஆகியோரின் உரிமைகளை உறுதிசெய்யும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. உண்மையில், சொத்துகள் உள்ள சாதிகள் தமது மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் அரசியல் செல்வாக்குப் பெறவும் சாதி அடையாளத்தைப் பயன்படுத்திக்கொண்டு பட்டியலின மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றன.
இதுபோன்ற காரணங்களால்தான் அம்பேத்கர், பெரியார், ஜோதிபா பூலே ஆகிய மூவரும் அரசியல் மாற்றங்களைவிட சமூக மாற்றத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். சாதியத் தீண்டாமையை ஒழிக்க வேண்டுமானால், அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பதைவிடவும் சமூக அமைப்பில், பழக்க வழக்கங்களில், சிந்தனைமுறைகளில் மாற்றத்துக்காகப் பணியாற்றுவது அதிகம் தேவைப்படுகிறது என்பதைத் திருமலைகிரி சம்பவமும் இரும்பாலை காவல் நிலையப் பேச்சுவார்த்தையும் உணர்த்துகின்றன.
அரசாங்க அணுகுமுறையிலும் அதைப் பின்பற்றி நடக்கும் காவல் துறையின் அணுகுமுறையிலும் மாற்றம் நிகழாமல் புதிய பரிந்துரைகளால் பெரிய பலன் இருக்காது என்பதையே இதுபோன்ற நிகழ்வுகள் புரியவைக்கின்றன.
கசப்பான உண்மை: வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தருகிறவர்கள் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஒத்துழைக்கவில்லை என்று கருதப்பட்டால், அவர் மீது கூட்டாக அபராதம் விதிக்கலாம் என்று பிரிவு 16 கூறுகிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17இன்படி, காவல் துறைக்கு விரிவான அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளைக் காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) அளவில் உள்ள போலீஸ் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்; போதுமான தகவல்கள் இருந்தால் அந்தப் பகுதிகளைப் பட்டியலின மக்கள் மீது வன்கொடுமை நிகழும் பகுதிகளாக அறிவிக்கலாம் எனவும் அந்தப் பிரிவு கூறுகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வன்கொடுமை நிகழும் தன்மை கொண்ட பகுதியாக அறிவிக்க முடியும் என்பது கசப்பான உண்மை.
திருமலைகிரி பிரச்சினையில் திமுக நிர்வாகி வன்கொடுமை, கொலை மிரட்டல் வழக்கில் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆனால், பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் பிரவீன் கோயிலுக்குள் சென்றதால் கோயில் தீட்டாகிவிட்டது என்று கோயிலுக்குள் வர மறுக்கும் ஊர் மக்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது? இதேபோல், வேங்கைவயலில் பட்டியலின மக்கள் கோயிலுக்குச் சென்றுவந்த பிறகு, கோயிலைக் கழுவிவிட்டவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?
முன்னேறிய இடைநிலைச் சாதிகளில் உள்ள நிலம் வைத்திருக்கும் வசதி படைத்தவர்கள், அதே சாதியில் உள்ள நிலமற்ற ஏழைக் கூலித் தொழிலாளர்களைச் சாதிய வன்முறையைத் தூண்டுவதற்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். புதிய தொழில், வேலைவாய்ப்புத் திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும். அதன் மூலம் வன்முறையை நடைமுறைப்படுத்துவதற்கு ஆள் கிடைப்பது சிரமமாக மாறும்.
ஒரு நபருக்கு எதிராகத் தீண்டாமை வழக்கின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த நபர் எந்த வகையான தேர்தல்களிலும் போட்டியிடத் தகுதியற்றவர் என்ற கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும். அதே போல் சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் அல்லது நிலம், நிதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பாக ஆண்டுக்கு இரண்டு முறை கூட்டம் நடத்துகிறார் முதலமைச்சர். அதேபோல் தன்னுடைய கட்சி நிர்வாகிகளுக்கும் இது பற்றி அவர் எடுத்துரைக்க வேண்டும். சாதியத் தீண்டாமை அழித்தொழிக்கப்படாவிட்டால் இந்தியாவில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சாத்தியமில்லை என்பதை எதிர்கால இளைஞர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.
- கார்த்திக் வர்ஜினி; தொடர்புக்கு: karthikvargini666@gmail.com