நிதிநிலை அறிக்கை: ஒரு வரலாற்றுப் பயணம்
1860 ஏப்ரல் 7 அன்று இந்தியாவில் முதன்முதலாக நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஜேம்ஸ் வில்ஸன், பிரிட்டிஷ் அரசிடம் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கை, 1947 நவம்பர் 26 அன்று தாக்கல்செய்யப்பட்டது. முதல் மத்திய நிதியமைச்சரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான ஆர்.கே.சண்முகம் அதைத் தாக்கல்செய்தார்.
நீண்ட நிதிநிலை உரை: 2020 பிப்ரவரி 1 அன்று, 2020-21ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரை, 2 மணி நேரம் 42 நிமிடங்களுக்கு நீடித்தது.
அதிக சொற்கள்: 1991இல் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங்ஆற்றிய நிதிநிலை அறிக்கை உரையே அதிக சொற்களைக் கொண்டது. 18,650 வார்த்தைகளைக் கொண்ட நீண்ட அறிக்கை அது.
குறைவான சொற்கள்: 1977இல் நிதியமைச்சர் ஹிருபாய் முல்ஜிபாய் படேல் ஆற்றிய நிதிநிலை உரை, மொத்தமாக 800 சொற்களை மட்டுமே கொண்டிருந்தது.
நாள், நேரம்: 1999ஆம் ஆண்டு வரையில் பிரிட்டிஷ் நடைமுறைப்படி, பிப்ரவரி மாதத்தின் இறுதி வேலை நாளில் மாலை 5 மணிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது.
1999இல் அந்த நடைமுறை மாற்றப்பட்டது. அப்போது நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, காலை 11 மணிக்கு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்தார். 2017இல் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பிப்ரவரி மாதத்தின் முதல் நாளில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்யும் நடைமுறையைத் தொடங்கிவைத்தார்.
அதிக முறை தாக்கல் செய்த நிதியமைச்சர்கள்: முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் நிதியமைச்சராக இருந்த 1962-1969 காலகட்டத்தில், 10 முறை நிதிநிலை அறிக்கைகளைத் தாக்கல்செய்துள்ளார்; அடுத்தபடியாக, ப.சிதம்பரம் 9 முறையும் பிரணாப் முகர்ஜி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் தலா 8 முறையும் மன்மோகன் சிங் 6 முறையும் தாக்கல் செய்துள்ளனர்.
மொழி: 1955 வரையில் மத்திய நிதிநிலை அறிக்கை ஆங்கிலத்தில் மட்டுமே தாக்கல்செய்யப்பட்டது. ஆனால், 1955இல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இந்தி, ஆங்கிலம் என இரு மொழிகளிலும் அதை அச்சிட்டது.
கறுப்பு நிதிநிலை அறிக்கை: 1973இல் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில், நிதியமைச்சர் யஷ்வந்த்ராவ் சவான் தாக்கல்செய்தது ‘கறுப்பு நிதிநிலை அறிக்கை’ என்று அழைக்கப்பட்டது. அப்போது இந்தியா மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது. இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை ரூ.550 கோடியாக இருந்தது.
கனவு நிதிநிலை அறிக்கை: 1997இல் ப.சிதம்பரம் தாக்கல்செய்தது ‘கனவு நிதிநிலை அறிக்கை’ எனப்பட்டது. 40% ஆக இருந்த தனிநபர்களுக்கான அதிகபட்ச வருமான வரி விகிதம் 30% ஆகக் குறைக்கப்பட்டது. உள்நாட்டு நிறுவனங்களுக்கான வருமான வரி 35% ஆகக் குறைக்கப்பட்டது. சுங்க வரி 40% ஆகக் குறைக்கப்பட்டது.
முதல் பெண்: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியே மத்திய நிதிநிலை அறிக்கையைத் (1970-71) தாக்கல்செய்த முதல் பெண்.
திரும்பப் பெறப்பட்ட நிதிநிலை அறிக்கை: 2002இல், யஷ்வந்த் சின்ஹா தாக்கல்செய்த நிதிநிலை அறிக்கையின் பல அறிவிப்புகள் திரும்பப் பெறப்பட்டன.
திருப்புமுனை நிதிநிலை அறிக்கை: 1991 இல், மன்மோகன் சிங் தாக்கல்செய்தது இந்திய வரலாற்றில் திருப்புமுனை நிதிநிலை அறிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அது இந்தியாவின் பொருளாதாரப் போக்கை மாற்றியமைத்தது; தாராளமயமாக்கல் கொள்கைகளை நாட்டில் நடைமுறைப்படுத்தியது.
காகிதமில்லா நிதிநிலை அறிக்கை: 2021-22ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை முதன்முறையாக டிஜிட்டல் முறையில் தாக்கல்செய்யப்பட்டது.
