Published : 31 Jan 2023 06:51 AM
Last Updated : 31 Jan 2023 06:51 AM

கற்றலில் பின்னடைவு: களையப்பட வேண்டிய தடைகள்

சுகிர்தராணி

கல்விக்கும் மாணவர்களுக்கும் பெரும் முக்கியத்துவம் அளித்துப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்திவருகிறது. இந்நிலையில், சமீபத்தில் வெளியாகியிருக்கும் 2022க்கான ‘ஆண்டுக் கல்வி நிலை அறிக்கை’ (அசர்-ASER) பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தேசிய அளவிலும் மாநில அளவிலும் கல்வியில் மாணவர்கள் பெற்றிருக்கும் வளர்ச்சி, போதாமைகள் மீது இந்த அறிக்கை புள்ளிவிவரத்துடன் வெளிச்சமிடுகிறது.

அறிக்கையின் செய்தி: 2018க்குப் பிறகு, 2022இல்தான் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இடைப்பட்ட காலகட்டத்தில், தமிழ்நாட்டின் 31 மாவட்டங்களிலுள்ள 920 கிராமங்களில் 3-16 வயதுடைய 30,737 மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இரண்டாம் வகுப்பு தமிழ்ப் பாடநூலை வாசிக்கும் திறன்பெற்ற ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் விகிதம் 40.8%லிருந்து 25.2%ஆகக் குறைந்துள்ளது.

கணிதத்தில் அடிப்படைத் திறன்களான கழித்தல் திறனை மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 11.2%, வகுத்தல் திறனை ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 14.9% மட்டுமே பெற்றிருக்கின்றனர். ஆங்கிலச் சொற்றொடர்களைப் படிக்கத் தெரிந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் விகிதம் 37.2இலிருந்து 24.5% ஆகச் சரிந்துள்ளது. கரோனா காலகட்டத்துக்குப் பிறகு மாணவர்களின் கற்றல் தொடர்பான செயல்பாடுகள், வாசித்தல் திறன், கணித அடிப்படைத் திறன் போன்றவை குறிப்பிடத்தக்க வகையில் இல்லை என்பதே ‘அசர்’ அறிக்கையின் சுருக்கமான செய்தி.

கரோனா காலத்தில் பள்ளிகள் செயல்படவில்லை. எனவே, அரசின் வழிகாட்டுதல்படி நடத்தப்பட்ட இணையவழி வகுப்புகள் எதிர்பார்த்த விளைவுகளைத் தரவில்லை என்பதே நிதர்சனம். எனவே, இந்தக் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகள் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் கல்வி நிலையைத் துல்லியமாகப் பிரதிபலிப்பதாகக் கருத முடியாதுதான்.

போதாமைகளின் பின்னணி: அதே நேரம், கரோனா காலகட்டத்துக்கு முன்பிருந்தும்கூட அடிப்படை வாசிப்பு, அடிப்படை கணிதச் செயல்பாடுகளில் மாணவர்களிடம் ஒரு போதாமை இருப்பதையும் மறுக்க முடியாது. மாணவர் ஒருவர் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு ஆகியவற்றில் போதிய திறன் இல்லாதவராக இருப்பதற்கு, முதல் தலைமுறையாகக் கற்க வருதல், குடும்பப் பொருளாதாரச் சூழல், பெற்றோர்களின் அக்கறையின்மை, ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள், ஆசிரியர்களின் பணிச்சுமை எனப் பல்வேறு சமூகக் காரணங்கள் இருக்கின்றன.

தேவைப்படும் திருத்தங்கள்: ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எழுத்துகளை அறிமுகப்படுத்துவதிலும் அதை அவர்கள் கண்டறிவதிலும் சிரமம் ஏற்படுகிறது. தமிழ் நெடுங்கணக்கில் உள்ள 247 எழுத்துகளையும் அடையாளம் காண்பது, குறில் - நெடில் வேறுபாடு, அதை உச்சரிக்கும் முறை ஆகியவற்றிலும் போதாமை இருக்கிறது.

எனவே, தமிழ் நெடுங்கணக்கில் உள்ள அதிகம் பயன்படுத்தப்படாத எழுத்துகளை நீக்கிவிடலாம். உதாரணமாக ஙகர வரிசையில் ங, ங் இவற்றைத் தவிர மீதி எழுத்துகளையும் ஞகர வரிசையில் ஞ, ஞா, ஞை தவிர்த்து மீதி எழுத்துகளையும் விட்டுவிடலாம். குறில், நெடில் ஒலிப்புப் பயிற்சியை மாணவருக்கு இணையவழியாக அளிக்கலாம். கணினித் திரையில் ஒரு மாணவர் ஓர் எழுத்தைத் தொடும்போது அந்த எழுத்தின் உச்சரிப்பும் ஒலிபெருக்கியில் ஒலிக்க வேண்டும். இது மாணவர் மனதில் நன்கு பதிய வாய்ப்பாக இருக்கும்.

செயல்வழிக் கற்றல் போன்ற திட்டங்கள் வந்த பிறகு முதலில் சொற்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் அதில் உள்ள எழுத்துகள் கற்பிக்கப்பட்டன. சொல்லிலிருந்து எழுத்துகளுக்குச் செல்லுதல் என்பது தலைகீழாக போவதைப் போல. மாணவர்கள் எப்படி எழுத்துகளை நினைவில் வைத்துக்கொள்ள முடியும்? எனவே, எழுத்துகளுக்குப் பிறகு சொற்களைக் கற்பிக்கும் முறைக்கு மீண்டும் செல்ல வேண்டும்.

கணித அடிப்படைச் செயல்களில் திறனைப் பெறுவதற்கு வாய்பாடு மிகவும் அவசியம். எளிய முறையில் அதைக் கற்பிக்கும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மாற்றங்களின் அவசியம்: ஒவ்வொரு பள்ளியிலும் கூடுதலாகக் கணினி ஆய்வக வசதியை அரசு ஏற்படுத்த வேண்டும். மொழிக்கான ஆய்வுக்கூடங்களும், பிற பாடங்களுக்கான ஆய்வுக்கூடங்களும் ஏற்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு மாணவரும் ஆய்வகங்களுக்குச் சென்று சுயமாகக் கற்றுக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். மொழியாசிரியர்கள், குறிப்பாகத் தமிழாசிரியர்களின் பங்களிப்பு முக்கியமானது.

ஓர் எழுத்தை எப்படி உச்சரிக்க வேண்டும், குறில் - நெடில் வேறுபாடுகள், மற்ற துணை உறுப்புகளின் பயன்பாடுகள், எழுத்துகளின் பிறப்பு, ஒலிப்பு முறை போன்றவற்றில் நிபுணத்துவமும் கூடுதல் திறனும் பெற்றவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். எனவே, தொடக்க வகுப்புகளிலிருந்தே தமிழாசிரியர்களை அதிக எண்ணிக்கையில் நியமிக்க வேண்டும்.

அடுத்ததாக, வாசிப்பு இயக்கத்தை ஒரு கிராமம் முழுவதுக்குமான ஒன்றாக மாற்ற வேண்டும். ஒரு குடும்பம் வாசிக்கும் திறனை, வாசிப்பின் ருசியை அறிந்துவிட்டால் குடும்பத்தில் உள்ள மாணவர்களும் வாசிப்புப் பழக்கத்துக்கு மாறிவிடுவர். கீழ் வகுப்புகளிலிருந்தே மாணவர்களுக்கு உளவியலை ஒரு பாடமாக வைப்பது அவசியம். தன்னைப் பற்றி, தன்நண்பர்களைப் பற்றி, சமூகத்தைப் பற்றி அறிந்துகொள்ள மாணவர்களுக்கு உளவியல் கல்வி இன்றியமையாதது. கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தவும் உளவியலைப் படிப்பது உதவியாக இருக்கும்.

ஆசிரியர் பயிற்சிப் பாடத்திட்டத்தை ஒவ்வோர் ஆண்டும் மாற்றியமைக்க வேண்டும் அல்லது கூடுதலாகச் சேர்க்க வேண்டும். மாறிவரும் சமூகச் சூழலுக்கு ஏற்பவும் அரசின் கல்வித் திட்டங்களுக்கு ஏற்பவும் அவை புதிதாக உருவாக்கப்பட வேண்டும்.

ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம்: தமிழ்நாடு அரசின் கல்வித் திட்டங்களைச் செயல்படுத்திக் கண்காணிக்கும் இடத்தில் அரசு அதிகாரிகள் இருந்தாலும், அடிமட்டத்தில் பள்ளியோடும் மாணவர்களோடும் நெருங்கிய உறவு உடையவர்கள் ஆசிரியர்களே. ஒரு திட்டத்தின் சாதக-பாதகங்களை அறிந்திருப்பவர்களும் ஆசிரியர்கள்தான். எனவே, அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். தம்முடைய கருத்துகளை, மாற்றுத் திட்டங்களை அரசிடம் சொல்வதற்கு அவர்களுக்கு எவ்விதப் புறத்தடைகளும் இருக்கக் கூடாது.

ஆசிரியர்களுக்குக் கற்பித்தல் தவிர, பிற பணிகள் வழங்குவதைத் தவிர்க்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும். பள்ளிகளில் அரசு நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தனி ஊழியரை நியமிக்க வேண்டும். கல்வி நிலையில் வளர்ச்சி பெறுவதற்கும் அடிப்படைத் திறன்களைப் பெறுவதற்கும் மாணவர்களுக்குத் தடையாக இருக்கும் அனைத்தும் களையப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை ‘இல்லம் தேடிக் கல்வி’, ‘எண்ணும் எழுத்தும்’, ‘நான் முதல்வன்’, ‘புதுமைப் பெண்’, ‘கலைத் திருவிழா’, ‘புத்தகக் காட்சி’, ‘நம் பள்ளி ஃபவுண்டேஷன்’ எனப் பல்வேறுதிட்டங்களைக் கடந்த ஆண்டு முதல் முன்னெடுத்துவருவது வரவேற்புக்குரியது. இவற்றோடு மேற்குறிப்பிடப்பட்ட ஆலோசனைகளையும் கவனத்தில் எடுத்துச் செயல்படுத்தும்போது, தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் தரத்தில் சிறந்துவிளங்குவது உறுதிசெய்யப்படும்.

- சுகிர்தராணி கவிஞர், அரசுப் பள்ளி ஆசிரியர்; தொடர்புக்கு: sukiertharani@yahoo.co.in

To Read in English: Roadblocks to be cleared to remove setbacks in learning

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x