

இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாசி சடையன், வடிவேல் கோபால் ஆகிய இருவருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப ஆண்டுகளாகவே பத்மஸ்ரீ விருதுகளில் இதுபோன்று மாறுபட்ட, அதிகம் கவனம்பெறாத துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. இது வரவேற்கத்தகுந்த ஒரு மாற்றம்.
ஆனால், இப்போதும்கூட விருது கௌரவங்கள் மட்டுமே இதுபோன்றஅங்கீகரிக்கப்படாத சமூகப் பிரிவினருக்கு வழங்கப்படுகின்றன. இவற்றை அடையாள அங்கீகாரமாகவே கருதமுடிகிறது. உண்மையிலேயே அனைத்துத் துறையினரையும் அங்கீகரிக்க வேண்டும், சமமாக நடத்த வேண்டும் என்று நினைப்பதும் செயல்படுவதும் வரவேற்கத்தக்கது. ஆனால், அது எப்படி, எப்போது சாத்தியமாகும்?
புரிதலும் மாற்றமும்: இந்தியாவில் காலம்காலமாகத் தொடர்ந்துவரும் சாதி, மத, இனப் பிரிவினைகள் அடிப்படையிலான ஒடுக்குமுறைகள் பிற நாடுகளில் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளன. இந்த அம்சங்கள் இந்தியாவில் தொடரக் கூடாது, அடுத்துவரும் தலைமுறைகளில் மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், இந்தத் தலைமுறையிலேயே அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படுவதும் வரவேற்கத்தக்கது.
அதே நேரம், அது சார்ந்த நடவடிக்கைகள் ஏற்கெனவே ஒரு சமூகம்-பிரிவினர் பெற்றிருக்கும் அறிவை-திறன்களைப் பட்டை தீட்டுவதாகவும், மேம்படுத்துவதாகவும் அமைய வேண்டும். இன்றைக்கும் காடுகளில் வாழும் உயிரினங்களைப் பற்றியும், காட்டைப் புரிந்துகொள்ளவும் வனத் துறையினருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் பழங்குடிகள் பெருமளவு உதவிவருகிறார்கள்.
காடு, உயிரினங்கள் பற்றிய வழிவழியாகப் பழங்குடிகளின் மூளையில் சேகரமாகியுள்ள பட்டறிவு-மரபு அறிவு மதிக்கப்பட வேண்டும். பாடப்புத்தக அல்லது நவீன அறிவியல் புரிதல்கள் மட்டுமல்லாமல், மரபு அறிவுக்கும் அங்கீகாரம் வழங்கப்படுவது அவசியம் என்கிற புரிதல் சமீபகாலமாக அதிகரித்துவருகிறது.
அறிவும் வேலைவாய்ப்பும்: சமவெளி இருளர் பழங்குடிகள் பாம்பு பிடித்து அவற்றின் தோல்களுக்காக வியாபாரிகளிடம் விற்றுக்கொண்டிருந்த காலத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த ஊர்வன அறிஞர் ரோமுலஸ் விட்டேகர் சென்னையில் கால் பதித்திருந்தார். இந்தப் பழங்குடி மக்களின் மரபு அறிவால் கவரப்பட்ட அவர், அதைக் கொண்டே வேலைவாய்ப்பை உருவாக்க முடியுமா எனச் சிந்தித்தார்.
அதன்படி பாம்பு நச்சு முறிவு மருந்து தயாரிப்பதற்கான பாம்பு நச்சை இயற்கையாக வாழும் பாம்புகளிடம் எடுக்கும் நடைமுறைக்கு இவர்களைப் பழக்கினார். இந்தச் செயல்பாடு ‘இருளர் பாம்பு பிடிப்போர் தொழிற் கூட்டுறவுச் சங்க’மாகப் பின்னர் உருவானது. சென்னை முதலைப் பண்ணை வளாகத்தில் அதன் அலுவலகம் உருவாக்கப்பட்டது.
இந்தச் சங்கத்தைச் சேர்ந்த இருளர்கள் நச்சுப் பாம்புகளைப் பிடித்து அவற்றிடமிருந்து சிறிதளவு நஞ்சைக் கக்க வைப்பார்கள். பிறகு, அந்தப் பாம்புகள் காட்டுப் பகுதிகளில் விடப்படும். அவர்களுடைய திறன்களை இன்றைய நவீனத் தேவைகளுக்கு ஏற்ப அறிவியல்பூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ளும் முயற்சி இது. இதனால் இருளர்களுக்கு வருவாய் கிடைக்கிறது. பாம்புகளுக்கும் எந்தப் பாதகமும் இல்லை.
இந்தச் சங்கத்தின் உறுப்பினர்களான மாசி சடையன், வடிவேல் கோபால்தான் தற்போது பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளனர். நமது மரபு அறிவுத் திறன்கள் உரிய வகையில் அங்கீகரிக்கப்பட வேண்டும். அத்துடன் சமூகத்தில் சமமான வாய்ப்புகள், புதிய வேலைகளை ஏற்றுச் செய்வதற்கான சாத்தியம், கல்வி வாய்ப்பு போன்றவையும் அவர்களுக்கு உருவாக்கப்பட வேண்டும்.
அறிவியல் பார்வை: இருளர்களின் பாம்பு பிடிக்கும் நுட்பங்களைக் கண்டு வியந்து, அந்த மரபு அறிவை அறிவியல்பூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புகளை உருவாக்கிய அதே ரோமுலஸ் விட்டேகர், பாம்புக் கடிக்கு இருளர்கள் பயன்படுத்தும் பாரம்பரிய மருந்துகளை ஏற்கவில்லை. அந்த மருந்துகள் பயன் தராது.
மருத்துவமனையில் தரப்படும் நஞ்சு முறிவு மருந்தையே பயன்படுத்த வேண்டும் என்று திட்டவட்டமாக வலியுறுத்துகிறார். மரபு அறிவில் கிடைத்தவை எல்லாமே சிறந்தவை என்கிற அசட்டு நம்பிக்கை உரிய பலன்களைத் தராது. எந்த விஷயத்தையும் அறிவியல்பூர்வமாகக் கையாளும் இந்த அணுகுமுறை அனைவரும் பின்பற்ற வேண்டியது.
சமவெளியில் வாழும் இருளர் பழங்குடிகள் பற்றி தமிழ்ச் சமூகம் நெடுங்காலமாக அசட்டையாகவே இருந்துவருகிறது. அந்த மக்கள் மீது ஓரளவு பரவலான வெளிச்சத்தைப் பாய்ச்சியதில் ‘ஜெய்பீம்’ திரைப்படத்துக்குப் பெரும் பங்கு உண்டு. இன்றைக்கும் அந்த மக்களின் நிலைமை மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது. அவர்கள் எப்படிப்பட்ட நிலையில் வாழ்கிறார்கள், எப்படி அலைக்கழிக்கப்படுகிறார்கள்-ஒடுக்கப்படுகிறார்கள்-சித்ரவதைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதை அப்படம் காட்டியிருந்தது.
அந்த மக்களின் முன்னேற்றத்துக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர் பிரபா கல்விமணி. இப்போது அவர்களுக்குத் தேவை கல்வி, மருத்துவம், நிரந்தர இருப்பிடம், வேலை போன்றவைதான். பத்ம போன்ற தேசிய கௌரவங்களுடன், இவற்றுக்கும் சேர்த்து வழியேற்படுத்துவதுதானே அரசுகளின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்?
- ஆதி வள்ளியப்பன்; தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in