ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே! - 9: பட்டாளத்திலிருந்து அக்னிபாதை வரை

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே! - 9: பட்டாளத்திலிருந்து அக்னிபாதை வரை
Updated on
2 min read

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி தமிழ்நாட்டில் கால் ஊன்றியபோது, தங்கள் பண்டகசாலைகளையும் தொழிற்சாலைகளையும் காவல் காக்க ஆங்கிலேயர்களைக் கொண்ட சிறு படையை உருவாக்கிக்கொண்டனர். இந்திய ராணுவம் உருவானதன் முதற் கட்டம் என்று மானஸ் தத்தா இதைக் குறிப்பிடுவார்.

இரண்டாவது கட்டமாக வங்காளம், மெட்ராஸ், பம்பாய் ராஜதானிகளில் படைப்பிரிவுகளை அவர்கள் உருவாக்கினர். மூன்றாவது கட்டமாக, இந்தியா முழுமைக்குமான ராணுவத்தை 1748இல் மேஜர் ஸ்டிங்கர் லாரன்ஸ் என்பவர் உருவாக்கினார். கிழக்கிந்தியக் கம்பெனி உருவாக்கிய ராணுவத்தில் படைவீரர்களாகப் பணியாற்றிய இந்தியர்கள், சிப்பாய் என்றழைக்கப்பட்டனர்.

சிப்பாய்களின் பின்புலம்: ராணுவச் சீருடை அணிந்து பரவலாகப் புழக்கத்தில் இல்லாத துப்பாக்கியை ஏந்தி நிற்பது என்பது சராசரி மனிதர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதாக இருந்ததால், சமூகத்தில் சிப்பாய்களுக்குத் தனித்த மரியாதை கிட்டியது. ‘சீருடை அணிந்த குடியானவர்கள்’ (Peasants in Uniform) என்றே கார்ல் மார்க்ஸ் இவர்களைக் குறிப்பிட்டார்.

வழக்கமான இயங்கு தளத்தை விட்டு விலகி, இவர்களது இடப்பெயர்ச்சி நிகழ்ந்தமையாலும் எழுத்தறிவு பெற்றமையாலும் இவர்களது உலகியல் அறிவும் சுயமரியாதை உணர்வும் வளர்ச்சிபெற்றன. அதிலும் இரண்டு உலகப் போர்களின்போதும் கடல் கடந்து உலக நாடுகளுக்குச் சென்றமை இவர்களுக்குப் புதிய அனுபவமாக அமைந்தது.

கிராமப்புறங்களில் சாகுபடி நிலத்துடன் பிணைக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர், போர் ஆற்றல் பெற்றவர்களாகவும் விளங்கியுள்ளனர். கிழக்கிந்தியக் கம்பெனியுடன் போரிட்ட புலித்தேவரின் படையில் பள்ளர் என்றழைக்கப்பட்ட தேவேந்திர குல வேளாளர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் படைவீரர்களாக இருந்துள்ளனர். இது போன்றே கட்டபொம்மனது படையிலும் சுந்தரலிங்கம் காலாடி என்ற பள்ளர் சமூக வீரர்களும் வாலப் பகடை, பொட்டிப் பகடை என்ற அருந்ததிய சமூகத்து வீரர்களும் இடம்பெற்றிருந்ததைக் கதைப் பாடல்கள் வழி அறிய முடிகிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவை ஆங்கிலேயர்கள் தாம் உருவாக்கிய ராணுவத்தில் சேர்த்துக்கொண்டதானது, அம்மக்களுக்கு ஊதியத்தை மட்டும் வழங்கவில்லை; சமூக விழிப்புணர்வைப் பெறவும் துணை நின்றுள்ளது. 1890 வரையிலும் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்பட்டிருந்த மக்கள் பிரிவினரை ராணுவத்தில் சேர்க்கத் தடை இருந்துள்ளது. பின்னர், மராட்டிய மாநிலத்தில் மஹர்களும், தமிழ்நாட்டில் பறையர்களும் மிகுதியான எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டனர். இது கிராமப்புற வேலையின்மையிலிருந்து இவர்களை விடுவித்தது மட்டுமின்றி, சமூகத்தில் உயர்மதிப்பையும் வழங்கியது.

1927 மார்ச் 17 இல் மஹத் என்ற ஊரில் நடந்த மாநாட்டில் உரையாற்றிய அம்பேத்கர், மஹர்களை ராணுவத்தில் சேர்த்துக்கொண்டதை, வீரத்திலும் அறிவிலும் தீண்டப்படாத மக்கள் பிரிவினர் சிறந்தவர்கள் என்பதை வெளிப்படுத்த வாய்ப்பாக அமைந்தது என்று குறிப்பிட்டார். அத்துடன் வேலையாட்களாகப் பணிபுரிந்த ஒரு சமூகம் ராணுவப் பணியின் மூலம் பிற சமூகங்களின் மீது அதிகாரம் செலுத்தும் சமூகமாக மாறியதைக் கூறி, இது இந்து சமூக அமைப்பில் புரட்சிகரமானதாக அமைந்தது என்றும் அவதானித்தார்.

பட்டாளத்தான்: படைவீரர்களைக் கொண்ட படைப்பிரிவானது அதில் இடம்பெற்றுள்ள படைவீரர்களின் எண்ணிக்கை அடிப்படையில், ரெஜிமென்ட், கம்பெனி, பிரிகேட், பட்டாலியன் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டது. இவற்றுள் பட்டாலியன் (Battalion) என்ற ஆங்கிலச் சொல்லின் திரிபாக ‘பட்டாளம்’ என்ற தமிழ்ச் சொல் உருவாகியுள்ளது (முனைவர் கோ.பாலசுப்பிரமணியன்).

பட்டாளத்தில் பணிபுரிபவர் பட்டாளத்தார் அல்லது பட்டாளத்தான் ஆனார். இவர்களில் சிலர் தம் சொந்த ஊரின் வெளி உலகத் தொடர்பாளர் போன்று செயல்பட்டனர். சிலர் மறுக்கப்பட்ட சமூக உரிமைகளைப் பெறத் துணை நின்றனர். பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கிளமன்சோ என்பவர் பொதுவுடைமை இயக்கப் போராளியாகப் புதுச்சேரியில் செயல்பட்டார். டி.செல்வராஜ் தமது ‘மலரும் சருகும்’ நாவலில் படைத்துள்ள கதாபாத்திரமான பட்டாளத்து ரங்கன் அவர் வாழும் கிராமத்தில் உழவர் இயக்கத்தை முறைப்படுத்தும் பணியினை ஆற்றுகிறார். அக்காலத்திய சமூக நடப்பியலின் வெளிப்பாடாகவே இப்பாத்திரப் படைப்பு உருவாகியுள்ளது.

1921 மலபார் விவசாயிகள் எழுச்சியில் முதல் உலகப் போரில் பங்குபெற்ற மலபார் விவசாயிகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருந்துள்ளது. பணியிலிருந்து ஓய்வுபெறும் பட்டாளத்தாருக்குப் பணிக்கொடை வழங்கப்பட்டதுடன் ஓய்வூதியமும் கிடைத்தது. சந்தை விலையைவிடக் குறைந்த விலையில் பொருள்களை விற்கும் ரணுவத்தினருக்கான அங்காடிகளைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமையும் அரசுத் துறைகளிலும் பொதுத் துறையிலும் வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டன. இவை எல்லாம் அவர்களது பணிக்கான மரியாதையாகவும் அமைந்தன.

அக்னிபாதை: தற்போது அக்னிபாதை என்ற பெயரில் ஆறு மாதப் பயிற்சிக் காலத்தையும் உட்படுத்தி நான்கு ஆண்டுகள் ராணுவ வீரராகப் பணியாற்றும் திட்டம் அறிமுகமாகி உள்ளது. நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், இவர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். ஓய்வூதியம் பிற ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படாது (பணி விடுவிப்பின்போது ஒரு தொகை வழங்கப்படும்). 25% வீரர்கள் மட்டும் நிரந்தர ராணுவத்திற்குப் படை வீரர்களாகத் தேர்வுசெய்யப்படுவர்.

- ஆ.சிவசுப்பிரமணியன் பேராசிரியர், பண்பாட்டு ஆய்வாளர்; தொடர்புக்கு: sivasubramanian@sivasubramanian.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in