

அறுவடைக் காலம் வந்ததும் மங்கலப்பாணர்களுக்கு அதிக அலைச்சலும் வந்துவிடும். சுபநிகழ்வுகளுக்கு நல்ல நேரம் குறித்துக் கொடுப்பது, ஏடுபோட்டு ஜோதிடம் சொல்வது, ஜாதகம் எழுதுவதுதான் அவர்களது வழக்கமான வேலையாக இருக்கும். அவர்கள் ஜோதிடம் சொல்வதில் ஒருவிதப் பாட்டுத்தன்மை இருக்கும்.
உற்றுக் கவனியாதவருக்கு அது பிடிபடாது. இந்த வேலைகளுக்கு இடையேதான் ஆண்டுக்கு ஒருமுறை வந்துபோகும் மங்கலம் பாடும் வேலை. மங்கலம் பாடுவதால் அவர்களுக்கு ‘மங்கலப்பாணர்’ என்று பெயர்; சில பகுதிகளில் ‘பாட்டுக்காரர்’ என்று சொல்கிறார்கள்.
மூன்று, நான்கு ஊர்களுக்குச் சேர்த்து ஒரு மங்கலப்பாணர்தான் இருப்பார். அவர்கள் பெரும்பாலும் பெருமாள் பக்தர்களாக இருந்தாலும் அவர்தம் வீடுகளில் புத்தர், திருவள்ளுவர் படங்கள் தவறாமல் இடம்பெற்றிருக்கும். அறுவடை இருக்கும் காலத்தில் அவர்களை வீட்டில் பார்க்க முடியாது.
நெல் அடிக்கும் களத்துமேட்டில்தான் இருப்பார்கள். வேலையாட்கள் நெல் அடித்துத் தூற்றி முடித்ததும் அள்ளித் திரட்டி அம்பாரம்கூடச் சேர்க்க மாட்டார்கள். மங்கலப்பாணர் வேறு களத்திற்குப் போயிருந்தால், அவர் வரும்வரைக்கும் நெல் அப்படியே களத்தில் பரவிக் கிடக்கும். வேலையாட்கள் மற்ற வேலைகளைச் செய்துகொண்டிருப்பார்கள்.
மங்கலப்பாணர் வந்ததும் நெல் மீது முழங்கால் போட்டு அமர்வார். கண்களை மூடியபடி ‘மங்கலம் பாடுறேஞ் சாமி / மழ பொழிய வேணும் / மங்கலம் பாடுறேஞ் சாமி / ஜீவன் பெருக வேணும் / மங்கலம் பாடுறேஞ் சாமி / மக்க(ள்) மகிழ வேணும்’ என்னும் வரிகளை மூன்று முறை திரும்பத்திரும்பப் பாடுவார்.
பாட்டு முடிந்ததும் முழங்காலில் அமர்ந்தபடியே குப்புறப்படுத்து கைகொள்ளும் மட்டும் நெல்லைச் சுருட்டிக் குவித்து, தாம் கொண்டுவந்த கோணிப்பையில் அள்ளிக்கொள்வார்; அதன் பெயர் ‘சாமி நெல்’. அறுவடைக் காலம் முழுக்க இது நடக்கும். தை முதல் நாளில் கைநிறைய நெல்லை ஏந்திக்கொண்டு ஒவ்வொரு வீடாகச் செல்வார். தேவையிருந்தால் பெரிய ஊர்களில் மங்கலப்பாணரின் குடும்ப நபர்களும் வீடுகளுக்கு நெல் ஏந்திச் செல்வர்.
மக்கள் நெல்லைத் தொட்டு வணங்கி விட்டு, காணிக்கையாகப் பணம் அல்லது அரிசி, பருப்பு, உப்பு, மஞ்சள் தருவார்கள். அதற்கு ‘வருசப் படி’ என்று பெயர். ஒவ்வொரு வீடாகக் காணிக்கை வாங்கி முடித்து வீடு திரும்ப உச்சிப் பொழுதாகிவிடும். 1950கள் வரை மங்கலப்பாணர்களுக்குத் தை முதல் நாள் இப்படியாகத்தான் அமைந்திருந்தது. அறுவடை முடிந்த பின் மங்கலப்பாணர்களின் வீடுகளில் நெல் கோணிப்பைகளில் முடிச்சு முடிச்சாகக் கிடக்கும்.
பல களங்களுக்குப் போய் அள்ளிய நெல் ஆகையால் பல வகையான நெல் இருக்கும். சாப்பாட்டுக்கு எல்லா நெல் வகையிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுப்பார்களே அன்றி, ஒரு குறிப்பிட்ட வகை நெல்லை முழுவதுமாகப் பயன்கொள்ள மாட்டார்கள். அவர்களின் வீடு ‘விதைநெல் வங்கி’ போலக் காட்சியளிக்கும். அடுத்த விதைப்புக் காலத்தில் விரும்பிக் கேட்டு வருகிறவர்களுக்கு விதைநெல் கொடுப்பதும் உண்டு.
மங்கலப்பாணர்களுக்கு உள்ள முக்கியமான சிறப்பு அவர்கள் வைத்தியர்களாகவும் இருந்ததுதான். குறிப்பாக, பாம்புக் கடி வைத்தியத்தில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். மருத்துவத் தொழில் செய்தவரும் சங்ககாலப் புலவருமான உறையூர் மருத்துவர் தாமோதரனார், ‘மங்கலப்பாணர்’ குடியைச் சார்ந்தவர் என்கிற கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது.
வேளாண் பண்பாட்டோடும் குடிகளோடும் பின்னிப்பிணைந்திருந்த மங்கலப்பாணர்கள், 1980களுக்குப் பிறகு சொற்ப எண்ணிக்கையினராகக் குறைந்துபோயினர். பிற்காலத்தில் அவர்களில் பலருக்கு அரசின் முதியோர் உதவித்தொகையால்தான் பிழைப்பு ஓடியது.
இன்றைக்கு மங்கலப்பாணர்களின் பிள்ளைகளிடம் அவர்தம் மூதாதையர்களின் எச்சங்கள் ஏறக்குறைய இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. தமிழகம் முழுவதும் தனித்த மரபோடு வாழ்ந்துவந்த முதுகுடிகளான மங்கலப்பாணர்கள், இப்பொழுதெல்லாம் தை முதல் நாளில் நினைவுகளாக மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள்.
- ஞா.குருசாமி தமிழ்ப் பேராசிரியர்; தொடர்புக்கு: jeyaseelanphd@yahoo.in