தி.ஜானகிராமனின் ஞானப் பிரசாதம்

தி.ஜானகிராமனின் ஞானப் பிரசாதம்
Updated on
3 min read

ஜானகிராமனை முழுமையாக, தொடர்ச்சியாக முனைவர் பட்ட ஆய்வேட்டுக்காகத் தயாராவதுபோல மறுவாசிப்பு செய்தது இந்த 2022இன் கடைசி நான்கு மாத காலகட்டத்தில்தான். ஆனால், பரீட்சைகள் எதுவும் எழுத வேண்டிய அவசியமோ இளம் முனைவர் மற்றும் முனைவருக்கான ஆய்வேடுகளோ சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமில்லாததால் சந்தோஷமாக வாசித்தேன். என் இருபதுகளின் தொடக்கத்தில் புரியாதவை, ஆழ்ந்திருந்த அர்த்தங்கள், காட்டப்பட்ட அக புற உலகங்கள், நுட்பங்கள் எல்லாம் இந்த அறுபதை நெருங்கும் வேளையில் தெரிந்தன என்றுதான் சொல்ல வேண்டும்.

ஞானம் என்றால் என்ன?

நீலோற்பலமும், சம்பங்கியும், ஜாதிப்பூவும் இருக்கையில் ஜானகிராமன் ‘செம்பருத்தி’யில் காட்டும் வரப்போர குறும்பூக்களும் இருக்கத்தானே செய்கின்றன. பலரும் ஒருமித்த குரலில் ‘அன்பு... அன்பு...’ அதுதான் ஜானகிராமன் எழுத்து என்கிறார்களே. அது வெறும் அன்பு மட்டும்தானா? இன்னும் என்னென்னவோ சேர்ந்ததில்லையா? குறிப்பாய் ஞானம். அவரே மோகமுள்ளில் பாட்டு வாத்தியார் ரங்கண்ணா, பாபுவுக்குச் சொல்வது போல நம் எல்லோருக்கும் சொல்கிறார்: ‘ஞானம்னா என்ன, தெரியுமோ?’.

‘அறிவு, தெரிஞ்சுக்கறது ‘தெரிஞ்சுக்கறது மாத்திரம் இல்லே. தெரிஞ்சுண்டது எல்லாம் பாட முடியணும். சில்பத்திலே ஞானம்னா, மனசிலே நினைக்கிறதைக் கல்லிலே காண்பிக்கணும். சண்டையிலே வீராப்பைக் கையிலேயும் வில்லிலேயும் காமிக்கணும். அந்த மாதிரிதான் எல்லா சாஸ்திரமும், புத்தகத்தை வாசிச்சுத் தெரிஞ்சுக்கறதும், காதாலே கேட்டுக்கறதும் மாத்திரம் ஞானமாயிடாது. அனுபவம்தான் ஞானம். செய்யறதுதான் ஞானம். அவர் இந்த ராகத்தை அப்படி ஜமாய்ச்சுப்பிட்டார், அப்படி இழைச்சுவிட்டார்னா போதாது. நேத்திக்கு ஒருத்தன் தெருவோட சொல்லிண்டு போறான், ஆகா கல்யாணியைக் கொன்னு, குழியை வெட்டி மூடிப்பிட்டான்னு. இன்னும் விவரம் தெரிஞ்சு கேட்டாலும் சரி, செய்து காண்பிக்கறதுதான்டா ஞானம். அனுபவம்தான் ஞானம். அது இல்லாதவரையில் அரைக்கிணறு தாண்டின சங்கதி. அதுக்கு என்ன பண்ணணும்? அ? என்ன பண்ணணும்?’

இப்படி, அவருக்குத் தெரிந்ததை - அப்படிக்கூடச் சொல்லக் கூடாது - தான் முற்றும் சேகரித்து உற்று உணர்ந்ததைக் கரிசனத்தோடு மடப்பள்ளிக்குக் கொண்டு சென்று நறுக்கிக் கழுவி, சிலதைக் களைந்து, குறுணைக் கற்களெடுத்து வீசி, தூசு தும்பு நீக்கி, பின் பதமாக வேகவைத்து, பதார்த்தமாக்குகிறார். ருசி ஏற்றலின் கைபாகமென்பது பரம ரகசியம். அப்படிச் சமைத்ததை அப்படியே மூடாக்கு போட்டு மூடி தோளில் ஏந்தி சந்நிதி சென்று, சிரத்தையாக நைவேத்யம் பண்ணி நீர் விளாவி, ஆரத்தி முடிந்ததும், “வாங்கோ... வாங்கோ... இப்படி வந்து ஒவ்வொருத்தரா வாங்கிக்கங்கோ... எல்லாருக்கும் இருக்கு. அவசரப்படாம நிதானமா வந்து வாங்கிக்கங்கோ” என்று அக்கார அடிசலும், புளியோதரையும், மிளகு வடையும், லட்டும் முறுக்கும், தட்டையும் சோமாசியும் சுக்குத் தண்ணியுமாக ஏதேதோ பிரசாதங்கள் தருகிறார். எவ்வளவு நாட்கள் பயணம் பண்ணி இங்கு வந்து சேர்ந்திருப்போம், எவ்வளவு மணி நேரம் பிரகாரங்களைச் சுற்றியிருப்போம், எவ்வளவு படிக்கட்டுகள் ஏறியிருப்போம்? அவ்வளவுக்கும் பிறகு வாசல் பார்த்த மண்டபத்தில் காற்றாட அமர்ந்து, தொன்னையிலிருந்து ஒரு விள்ளல் பிரசாதத்தை எடுத்து வாயில் போடும்போது, அந்தச் சூடும் சுவையும், பச்சைக் கற்பூர வாசனையும், ஏலமும் முந்திரியுமாய் நாக்கில் பட்டு ஜலம் ஊறி, கண் செருகும், பாருங்கள்... அதுதான் ஜானகிராமன் தரும் ஞானப்பிரசாதம்.

ஜானகிராமனின் நைவேத்யம்

அந்தப் பிரசாதம் ஒரு நல் லாகிரி. அதை நாம் மறுபடி மறுபடி நாடுகிறோம். கிறங்கடிக்கிறதுதான். என்ன ஆச்சரியம்? தெளியவும் வைக்கிறதே. அதனால்தானே நூறாண்டாய் அதைவைத்து வைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். இன்னும் பல ஆண்டுகள் கெடாமல் இருக்கவும் அவர் ஒரு ஆர்கானிக் மேஜிக் செய்து வைத்துள்ளார்.

ஒரே ராகத்தைத்தான் அவர் பாடிக்கொண்டே இருந்தார் என்று சிலர் சொல்கிறார்கள்; இல்லை. ஒரு வகையில் அவர்கள் பார்வையில் ஒரு ராகத்தை அவர் எடுத்துக்கொண்டிருக்கலாம். அது சம்பூர்ண ராகம். ஆரோகணத்தில் ஏழும் அவரோகணத்தில் ஏழுமாய் நிறைந்த மேளகர்த்தா ராகம். அதில் அவர் உண்டாக்கி வகை வகையாய் இசைத்த பாஷாங்கம், உபாங்கம், ஷாடவம், ஒளடவமென ஜன்ய ராகங்கள் எத்தனை, அது ஏன் அவர்கள் செவிகளுக்குக் கேட்கவில்லை..?

மொழிதான் ஜானகிராமனின் ஆயுதம். அதை அவர் தினப்படி தீட்டித்தீட்டி கூராகவும் மெருகேற்றியும் வைத்திருந்தார். வெட்டினால் அது துண்டு துண்டுதான். அது பலரையும் அசரடித்து ஈர்த்து திகைக்கும்படி செய்தது. அவர் களமாடும்போதெல்லாம் கண்கொட்டாமல் பார்க்க வைத்தது. அத்தகைய வாள்வீச்சு, அவர் காலத்தில் யார் யாருக்கெல்லாம் அவ்வளவு வெற்றிகரமாக இரு தளங்களிலும் வசப்பட்டது என்று யோசித்தால் விரல்களின் எண்ணிக்கையில் அடங்குபவர்கள் வெகு சிலரே.

தஞ்சை மாவட்டத்தில் அவர் வாழ்ந்த கும்மோணத்தில் பிறந்தவன்தான் நானும். அவர் புழங்கிய தஞ்சாவூர், அய்யம்பேட்டை, பாபநாசம், குத்தாலம், மாயவரம் என்று சுற்றித் திரிந்தவன்தான். அதனால் மட்டும், அவர் எழுத்தில் பேசப்படும் அந்த தஞ்சை வட்டார மொழியால் மட்டும், அவர் படைப்புகள் என்னை ஈர்க்கின்றனவா என்றால், இல்லை. நாகர்கோவிலில், நெல்லூரில் இருக்கிறவனையும், பண்ருட்டியில், தென்காசியில் இருப்பவனையும், சென்னையிலும் கோவையிலும் இருக்கிறவனையும், ஏன் முற்றிலும் அந்த மொழியே பரிச்சயப்படாத ஒருத்தனையும் அவர் படைப்பு வசீகரித்துச் சுழற்றி இழுக்கும் மர்மம் என்ன? மொழியும் உள்ளடக்கமும் காதலாய் முயங்கி முயங்கி புனைகையில் ஆத்மா சட்டென உயிர்பெற்று விழித்து மிழற்றுகிறது. உள்ளடக்கத்துக்கும் மொழிக்குமான உன்னதக் காதலில் பிறந்த அதுதான் வர்ஜ்யாவர்ஜ்யமின்றி சக எழுத்தாளர்கள் உள்பட சகலரையும் பாதிக்கிறது.

கரிச்சான்குஞ்சின் பார்வை

அவர் மேல் மிகுந்த ப்ரியம்கொண்ட, ஒன்றாய் சில ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றிய அத்யந்த குடும்ப நண்பர், எழுத்தாளர் கரிச்சான் குஞ்சுவோடு ஜானகிராமன் எழுத்துகள் பற்றி ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கையில் சொன்னார். “ப்போடா அவன் கிடக்கான், தளுக்குப் படுவா, அதல்லாம் நம்மால ஆகாது. அவன் பாதை வேற, எம் பாதை வேற. அவனுக்கு வாழ்க்கைல எதுக்காச்சும் கஷ்டமுண்டோ. இஞ்ச எனக்கு நீராகாரத்துக்கே வக்குல்ல. அதது அப்படி அப்படித்தான் வரும். எனக்கு எதையும் முகத்துல அடிச்சாப்ல சொல்லணும். அவனுக்கு முகத்துல பாவங்கள் மிளிர, செளந்தர்யமா, விளம்ப சொல்லணும். எம்விவி இங்கயும் இல்ல அங்கயுமில்ல. அவர் நடுவாந்தரம். என்னமோ, இப்ப இந்த ‘காதுகள்’ளதான் அப்படி ஒரு பாச்சலா பாஞ்சுபுட்டார்.”

மூவருமே நெருங்கிய நண்பர்கள்தாம். எழுத்தில் மரபை மீறியவர்கள்தாம். தளைகளை உடைத்து யதார்த்தத்தின் வழி சென்றவர்கள்தாம். ஆனாலும் அவரவர் பாதைகள் வேறு வேறு. இவர்களில் - செய்தது பிசகென்று மனசில் வலிகளை ஏற்றிக்கொண்டு வாழும் மனிதர்களை நெஞ்சணைத்து முதுகு தடவி, அவர்களின் குற்ற உணர்வை நீக்கி, சொஸ்தமாக்கியவர் ஜானகிராமன். தவறு, சரி என்று எதன் மீதும் தீர்ப்பிடாமல், ‘அது அப்படியிருக்கு. அதுக்கு என்ன செய்றது. அதை விடு, அடுத்தத ஆக்கபூர்வமா என்னன்னு பாரு’ என்று தன் படைப்பின் வழி மன சாந்தத்தைத் தந்தவர். எத்தனை பெரிய கலை ஆறுதல் இது. மருத்துவர்கள் பக்க விளைவுகள் தரும் மாத்திரைகளை எழுதிக்கொடுத்து செய்வதை, தன் எழுத்துகளால் நிகழ்த்தியிருக்கிறார் தி.ஜானகிராமன்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in