

ஒளிப்பதிவு நிபுணராக வேலை தேடி வங்காளத்திலிருந்து சென்னைக்கு வந்த ஒருவர், தன் தனிப்பட்ட வாழ்க்கைத் தேவைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, அப்போது தென்னகத் திரையுலகில் நிலவி வந்த பாகுபாடுகளை அகற்றுவதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவரை ‘திரைக்கலைஞர்களின் ஒளிவிளக்கு’ என்று அழைப்பதுதானே பொருத்தமாக இருக்கும். அவர்தான் நிமாய் கோஷ்.
தென்னிந்தியத் திரையுலகில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் பணிபுரிந்த அதே நேரத்தில், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்கி, 1957 முதல் 1972 வரை அதன் தலைவராகச் செயல்பட்டவர். தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இதர தொழிலாளிகளுக்கும் உரிய அங்கீகாரத்தை, ஊதியத்தை உறுதிசெய்தவர். சிறந்த இசையமைப்பாளரான எம்.பி.சீனிவாசனுடன் இணைந்து அவர் வழங்கிய அயராத உழைப்பே இன்று தென்னிந்தியத் திரைத் துறை ஊழியர்களின் வாழ்க்கை பெரிதும் மேம்படுவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது.
இது அவரது எண்ணற்ற சமூகப் பங்களிப்புகளில் ஒரு பரிமாணம் மட்டுமே. இந்தியாவில் திரைப்பட ரசனையை வளர்த்தெடுக்க உருவான கல்கத்தா ஃபிலிம் சொசைட்டியை சத்யஜித் ராய், சிதானந்த தாஸ்குப்தா, ஹரிசதன் தாஸ்குப்தா ஆகியோர் தொடங்கியபோது, அதன் நிறுவனர்களில் திரைப்படத் துறையைச் சேர்ந்தவராக இருந்தவர் நிமாய் கோஷ் மட்டுமே. அந்த நேரத்தில், 19 வயதில் ஓர் ஆவணப் படத்தைத் தனியாக ஒளிப்பதிவு செய்த (லேடி பாடென் பாவல் பற்றியது) முதல் இந்தியர்; முப்பரிமாண ஒளிப்படத்தை முதலில் பதிவு செய்தவர் என்ற பெருமை பெற்றவராகவும் அவர் இருந்தார்.
இந்தியாவின் யதார்த்த நிலையை வெளிப்படுத்திய முதல் படமாகவும், அவரது முதல் முயற்சியாகவும் விளங்கிய ‘சின்னமூல்’ திரைப்படம், கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வந்திறங்கிய அகதிகளின் துயரத்தை மிகுந்த கருணையோடு வெளிப்படுத்தியது. அவரது இயக்கத்தில் வெளிவந்த ‘பாதை தெரியுது பார்’ திரைப்படம், 1960ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்ப் படம் என்ற தேசிய விருதைப் பெற்றது.
1952ஆம் ஆண்டில் சென்னை நகருக்கு வந்து நிலைபெற்ற அவர், தனது தொழில்ரீதியான முயற்சிகளோடு கூடவே, திரைப்பட ரசனையை வளர்க்க மதராஸ் ஃபிலிம் சொசைட்டியை வளர்த்தெடுத்தார். தமிழ்நாடு அரசின் திரைப்படக் கல்லூரி உருவாக்கத்திலும் பங்கெடுத்து, அதன் கௌரவ விரிவுரையாளராகவும் இருந்து, புதிய தலைமுறையினருக்கு ஊக்கமளித்தார். பூனே திரைப்படக் கல்லூரியிலும் இதே போன்ற பங்களிப்பை அவர் தொடர்ந்து செய்துவந்தார். திரைப்பட சங்கங்களின் அகில இந்திய அமைப்பின் உதவித் தலைவராகவும் அவர் நீண்ட நாள் பணியாற்றினார். அவரது அயராத முயற்சியின் விளைவாக, தென்னிந்தியாவில் திரைப்படக் கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்தது மட்டுமின்றி, அடூர் கோபாலகிருஷ்ணன், கிரிஷ் காசரவல்லி, ஜான் ஆப்ரஹாம் போன்று புதிய தலைமுறை இயக்குநர்கள் பலரும் திரைப்பட இயக்கத்தின் மூலம் தென்னிந்தியாவில் உருவாகி, இந்தியத் திரைப்பட உலகில் புதிய அலையை வீசச் செய்ததில் இவருடைய பங்கும் முக்கியமானது.
தொடர்ச்சியான தொழிற்சங்கப் பணிகளின் விளைவாக, போதிய பட வாய்ப்புகளைப் பெற இயலாதபோதிலும், தான் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை மனம் தளராது இறுதிவரை நிறைவேற்றிய நிமாய் கோஷ், 1988ஆம் ஆண்டு ஜனவரி 29 அன்று புடோவ்கின் திரைப்படக் கழகத்தை சென்னையில் தொடங்கி வைத்து உரையாற்றிய தருணத்தில் உயிர் நீத்தார். இவ்வாறு மரணத்தின் வாசல் வரை திரைப்படத்தோடு அவர் இணைந்து பயணித்தது மிகவும் தனித்துவமான ஒன்றாகும்.
அவரது அரும்பெரும் பணிகளை நினைவுகூர்ந்து ஆவணப்படுத்தியுள்ள சுனிபா பாசுவின் ஆங்கில நூல் திரைப்பட இயக்குநர் அம்ஷன் குமாரின் தெள்ளிய மொழிபெயர்ப்பில் தமிழில் போதிவனம் பதிப்பகம் (தொடர்புக்கு: 98414 50437) பதிப்பித்துள்ளது.
(ஜனவரி 29 - நிமாய் கோஷ் நினைவு நாள்)