

சர்வதேச அரங்கில் இந்தியா அதன் பண்பாட்டு அம்சங் களுக்காகப் பெயர்பெற்றது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோயில் கட்டுமானங்கள், கோட்டைகள், அரண்மனைகள் எல்லாம் கட்டிடக் கலை உலகில் பெரும் அதிசயங்கள். இந்தப் பண்பாட்டின் தொடர்ச்சியை இந்தியக் கட்டிடக் கலையில் புகுத்தியவர்களில் பிரெஞ்சுக் கட்டிடக் கலைஞர் லே காபூசியே முதன்மையானவர். இந்தச் சிந்தனைப் பள்ளி மரபுதான் அடுத்தகட்ட இந்தியக் கட்டிடக் கலை தலைமுறையை உருவாக்கியது. அந்தத் தலைமுறையின் தலைப்பிள்ளை பி.வி.தோஷி.
பிரிவினைக்குப் பிறகு பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூர் பாகிஸ்தான் பக்கம் சென்றுவிட்டதால், பஞ்சாபின் புதிய தலைநகராக சண்டிகர் உருவாக்கப்பட்டது. இந்த நகரத்தை வடிவமைத்தவர் லே காபூசியே. இவருடன் இணைந்து பி.வி.தோஷியும் இந்த நகரை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தார். இன்றும் சர்வதேச அரங்கில் உருவாக்கப்பட்ட நகரங்களுக்கான முன்மாதிரியாக சண்டிகார் நகர வடிவமைப்புத் திகழ்கிறது.
பி.வி.தோஷி, 1927ஆம் ஆண்டு மும்பைக்கு அருகில் உள்ள புனேயில் பிறந்தவர். பம்பாயில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர். உயர்ந்த கட்டிடங்களைவிட உயிர்ப்புள்ள வசிப்பிடங்களை உருவாக்குவதில் ஈடுபாட்டுடன் இருந்தார். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் குறைந்த வருமானத்தினருக்காக உருவாக்கப்பட்ட ‘ஆரண்யா’ திட்டம் அதற்கொரு முன்மாதிரி. ஆரண்யா ஹவுஸிங் என அழைக்கப்படும் இந்த வீட்டுக் குடியிருப்புத் திட்டம் ஒரு முன்மாதிரித் திட்டம். துர்காபூர் குடியிருப்புத் திட்டமும் இந்த வகையில் கவனம் கொள்ளத்தக்கது.
இம்மாதிரி வீட்டுத் திட்டங்களுக்கு அப்பாற்பட்டு டெல்லி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் கட்டிடம், பெங்களூரூ நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் கட்டிடம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனக் கட்டிடங்களையும் கட்டியுள்ளார். ‘அகமதாபாத் குகை’ என அழைக்கப்படும் பிரபல ஓவியர் எம்.எஃப்.ஹுசைன் ஓவியக் கூடத்தைக் குகைபோல் வடிவமைத்துள்ளார். ஓவியம் தோன்றிய குகையைக் குறியீடாகவும் குகைக்கான குவிமாடத்தை முகலாயர் கட்டிடக் கலையைப் போன்றதாகவும் வடிவமைத்தார். ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிரிட்டிஷ் ஆர்க்கிடெக்சரால் கௌரவிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் வழங்கப்படும் கட்டிடத் துறைக்கான உயரிய விருதான பிரிட்ஸ்கர் விருதைப் பெற்றுள்ளார்.
பதேபூர் சிக்ரி, மதுரை, ஸ்ரீரங்கம், ஜெய்ப்பூர் போன்ற இந்தியாவின் பழமையான நகரங்களின் செவ்வியல் கட்டிடங்களின் நுட்பங்களைக் கண்டு அதன் வழி தன் பாணியை தோஷி உருவாக்கிக்கொண்டதாகச் சொல்லியிருக்கிறார். இந்தச் செவ்வியல் தன்மையும் ஐரோப்பிய அனுபவமும் இணைந்ததுதான் அவரது கட்டிடக் கலை எனலாம்.