பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறை: அரசுகள் என்ன செய்ய வேண்டும்?

பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறை: அரசுகள் என்ன செய்ய வேண்டும்?
Updated on
1 min read

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல்படி, 2022இல் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் 30,957 புகார்கள் பதிவுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. 2014க்குப் பிறகு 2022இல்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகபட்சமாகப் பதிவாகியுள்ளன. மிகவும் கவலையளிக்கும்விஷயம் இது.

இந்தியா முழுவதுமிருந்து பதிவாகியுள்ள இந்தக் குற்றங்களில் பெரும்பாலானவை பெண்கள் கண்ணியத்துடன் வாழ்வதைத் தடுப்பவையாக இருக்கின்றன. அவற்றில் குடும்ப வன்முறையும் மனரீதியான துன்புறுத்தலும் முக்கிய இடம் வகிக்கின்றன. மாநிலங்களின் கல்வி, சமூகக் கட்டமைப்பு, ஆளும் அரசின் செயல்திறன் போன்றவற்றுக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கும் நேரடித் தொடர்பு இருப்பதையும் இந்தப் புகார்கள் உணர்த்துகின்றன.

உத்தரப் பிரதேசத்திலிருந்து மட்டும் 54% புகார்கள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து டெல்லி, மகாராஷ்டிரம், பிஹார், ஹரியாணா ஆகியவை அதிகக் குற்றங்கள் நிகழும் மாநிலங்களாக உள்ளன. இந்தக் குற்றங்களில் வரதட்சணைப் புகார்களும் இடம்பெற்றிருப்பது நம் நாடு அடைந்திருப்பதாகச் சொல்லப்படும் முன்னேற்றத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

பெண்கள் மீதான வன்முறையைக் கட்டுக்குள் வைப்பதற்கான திட்டங்களும் சட்டங்களும் மேம்படுத்தப்பட்டும்கூட ஆண்டுதோறும் அதிகரித்துவரும்குற்றங்கள் நம் செயல்திட்டங்களின் தோல்வியையே காட்டுகின்றன. அதே நேரம் பதிவான புகார்கள் மட்டுமே பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த குற்றங்கள் என்றாகிவிடாது. குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் அஞ்சி, எல்லாவிதமான வன்முறையையும் பொறுத்துப்போகும் பெண்கள் நம்மிடையே அதிகம். அவர்களையும் கருத்தில்கொண்டே அரசு செயல்பட வேண்டும்.

பெண்களுக்கான பொருளாதார விடுதலை இதுபோன்ற வன்முறைகளிலிருந்து ஓரளவுக்குத் தீர்வளிக்கக்கூடும் என்பதால் மத்திய, மாநில அரசுகள் அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திட்டங்கள் அனைத்தும் சரியான விதத்தில் செயல்படுத்தப்படுகின்றனவா என்கிற கண்காணிப்பும் அவசியம். வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் பெண்களுக்கான குறுகியகால தங்கும் இல்லங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் அவை குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்க வேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தொழிற்பயிற்சி மையங்களை மாவட்டங்கள்தோறும் அமைக்க வேண்டும். வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தேசிய மகளிர் ஆணையம் அண்மையில் நடத்திய கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் முக்கியமானவை. பெண்கள் மீதான அமில வீச்சுத் தாக்குதல் குறித்துக் கவனப்படுத்திய ஆணையம், நாடு முழுவதும் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த தரவுகள் அடங்கிய ஒட்டுமொத்தப் பட்டியலைத் தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கதாநாயகத் தன்மையோடு எடுத்துக்காட்டும் திரைப்படங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

பெண்கள் மீது கட்டமைக்கப்படும் கற்பிதங்களே பெரும்பாலான வன்முறைகளுக்குக் காரணம் என்பதால் அவற்றைக் களைவதற்கான வழிகளை அரசுகள் செயல்படுத்த வேண்டும். அதற்கான முன்னோட்டமாக பள்ளி, கல்லூரிகளில் பாலினச் சமத்துவம் குறித்த விழிப்புணர்வுச் செயல்பாடுகளை அதிகப்படுத்துவது, பெண் கல்வியை ஊக்குவிப்பது, அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்குச் சம வாய்ப்பு வழங்குவது போன்றவற்றைச் செய்யலாம். இது போன்ற ஆக்கபூர்வ முன்னெடுப்புகள் மட்டுமே பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in