

இன்று தலைநகர் புது டெல்லியில் புதிதாக மேம்படுத்தப்பட்டுப் பெயர் மாற்றப்பட்டுள்ள ‘கடமைப் பாதை’யில் நாட்டின் முதல் பழங்குடிப் பெண் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, முதல் முறையாகத் தேசியக் கொடியை ஏற்றுகிறார் என்னும் பெருமிதத்துடன் இந்தியாவின் 74 ஆம் குடியரசு நாளைக் கொண்டாடிவருகிறோம்.
ஜனவரி 26, 1950 அன்று இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததன் நினைவாகவே ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது. குடியரசு நாடுகளில் அரசமைப்புச் சட்டமே அரசுக்கான வழிகாட்டும் ஆவணமாகச் செயல்படுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை ஒரு இறையாண்மை மிக்க ஜனநாயகக் குடியரசாக அறிவித்தது. சட்டம் இயற்றும் அவை, நிர்வாகம், நீதித் துறை என மூன்று அங்கங்களைக் கொண்டதாக அரசை அது வரையறுத்தது.
அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் அதிகாரம் சட்டம் இயற்றும் அவையான நாடாளுமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய திருத்தங்களின் மூலம் அரசமைப்பு பல வகைகளில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திருத்தங்கள் அரசமைப்பால் பாதுகாக்கப்பட்டுள்ள அடிப்படை விழுமியங்களை மீறுவதாக இருக்கக் கூடாது என்ற ‘அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாட்’டை கேசவானந்த பாரதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி உள்ளிட்ட விழுமியங்களைப் பாதுகாப்பதே அரசமைப்பின் அடிநாதம். கடந்த 73 ஆண்டுகளில் இவை அனைத்திலும் நாம் பெருமளவுமுன்னேறியுள்ளோம் என்பதை மறுக்க முடியாது. 18 வயதைக் கடந்த அனைவருக்கும் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஜனநாயகத்தின் மூலம் ஆட்சி அதிகாரத்திலும், அனைவருக்கும் கல்வியைக் கொண்டு சேர்ப்பதற்கான திட்டங்கள், இடஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகளின் மூலம் அரசு நிர்வாகத்திலும் உயர் பதவிகள் நாட்டின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் கிடைத்திருக்கின்றன.
ஆனால், பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவராக இருக்கும் நாட்டில் பெரும்பாலான பழங்குடியினர் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர். பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் குடியரசுத் தலைவராகவும் பல மாநிலங்களின் முதல்வராகவும் பதவி வகித்துள்ளனர். ஆனால், பட்டியலினத்தவர்களுக்கு எதிரான சாதிக் கொடுமைகள் புதுப்புது வடிவங்களில் தீவிரமடைந்துவருகின்றன.
சிறுபான்மை மதத்தவரின் மத உரிமைகள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. பெண்களின் மீதான ஒடுக்குமுறைகள் பெரிதும் குறையவில்லை, பால் புதுமையினரின் மீது சுமத்தப்பட்ட இழிவு இன்னும் முழுமையாக நீங்கவில்லை. நீதிபதிகள் நியமன விவகாரத்தை முன்வைத்து நீதிமன்றத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. மத்திய அரசின் பிரதிநிதிகளாக மாநிலங்களில் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் சிலரின் செயல்பாடுகள் கூட்டாட்சித் தத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்குவதாக அமைந்துள்ளன.
இந்திய அரசமைப்புச் சட்டமும் அதனால் உறுதிசெய்யப்பட்ட உரிமைகளும்முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கான தடைக்கற்களாகத் திகழும் இந்தப் பிரச்சினைகள் களையப்பட வேண்டும். உரிமைகளைப் பெறுவதைப் போலவே அரசமைப்பு விதித்துள்ள கடமைகளை நிறைவேற்றுவதிலும் அனைவரும் கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டும். அதுவே குடியரசு நாள் கொண்டாட்டங்களுக்கு அர்த்தம் சேர்க்கும்.