

தேசியக் கல்விக் கொள்கை 2020இன் பரிந்துரையைச் செயல்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு, 100 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை இந்தியாவில் நிறுவுவதற்கான, மாதிரி சட்ட வரையறையை வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்தியப் பல்கலைக்கழகங்களின் கருத்துகளையும் கேட்டிருக்கிறது. இவ்விஷயத்தில் இருக்கும் பல முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட வேண்டியவை.
எண்ணிக்கை ஒப்பீடு: கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாட்டில் பயிலச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 189% அதிகரித்துள்ளது. தற்போது 10 லட்சம் இந்திய மாணவர்கள் 85 நாடுகளில் இளங்கலை முதல் ஆராய்ச்சிப் படிப்புவரை பயின்றுவருகின்றனர். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்கும்போது அங்கேயே பணியிடப் பயிற்சி (Internship) கிடைப்பதோடு, படிப்பை முடித்தவுடன் வெளிநாட்டிலேயே வேலையும் கிடைக்கும்.
படிக்கும்போதே பகுதிநேர வேலை செய்து, படிப்புக் கட்டணத்தை ஈடுகட்ட முடியும். இப்படிப் பல பலன்கள் இருப்பதால்தான் பலர் வெளிநாட்டில் கல்வி கற்க ஆர்வம் காட்டுகின்றனர். இப்படியான வாய்ப்புகள் இந்தியாவில் வரவிருக்கின்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மூலம் கிடைக்குமா என்பது மிகப் பெரிய கேள்வி.
இந்தியாவில் உள்ள 1,100 பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 47,000 மட்டுமே. அவர்களிலும் மேற்குலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் குறைவு. உலக அளவில் உயர்கல்வி அளிப்பதில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் சீனாவும் ஜப்பானும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தங்கள் நாட்டில் கால்பதிக்க இதுவரை அனுமதி அளிக்கவில்லை.
மாறாக, தங்கள் நாட்டுப் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களோடு இணைந்து படிப்பும், ஆராய்ச்சியும் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளன. அந்த நாட்டு மாணவர்கள் ஒரு செமஸ்டர் அல்லது ஒரு வருடம் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சென்று படித்துவர வழிவகை செய்துள்ளன. தங்கள் பல்கலைக்கழகங்களின் தரத்தை மேலைநாடுகளுக்கு இணையாக உயர்த்துவது, தங்கள் மாணவர்களை உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலேயே குறைந்த கட்டணத்தில் படிக்கவைத்து, வெளிநாடுகளில் வேலை பெறுவதற்கு உரிய தகுதிகளை ஏற்படுத்துவதே அந்நாடுகளின் நோக்கம்.
விளைவுகளும் கேள்விகளும்: பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) உள்ளிட்ட அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் இயங்கிவருகின்றன. தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு என்று பிரத்யேகச் சட்ட வரைமுறைகளும் உள்ளன.
இந்தியாவுக்கு வரவிருக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், எந்த வகையில் அவை உயர்கல்வி நிறுவன அமைப்புகளின்கீழ் வருகின்றன என்பது குறிப்பிடப்படவில்லை. இது இந்திய உயர்கல்வியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒழுங்குமுறையில் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும், இந்தியப் பல்கலைக்கழகங்களுக்குமான சட்ட நடைமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.
தேசியக் கல்விக் கொள்கை 2020இல், காலனித்துவப் பாடத்திட்டக் கட்டமைப்பை நீக்கவும், குறிப்பாக சமூக அறிவியல், மனிதநேயப் பாடங்களைப் படித்தல் மற்றும் கற்பித்தல் முறையும் அமைய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இவை கட்டாயம் எனச் சொல்லப்படவில்லை. அறிவியல், மருத்துவப் படிப்புகளில் நெறிமுறையற்ற பழக்கங்களை (Unethical Practice) தவிர்க்கும் பொருட்டு அதற்கான பாடத்திட்ட அமைப்பானது, இந்திய மக்களின் உடற்கூறுகளுக்குத் தகுந்தாற்போல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விதிக்கப்படவில்லை. பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தாங்கள் கட்டணமாகப் பெறும் வருமானத்தை எந்தவிதக் கட்டுப்பாடுகளுமின்றித் தங்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இது வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்கள் லாபம் அடையவே வழிவகுக்கிறது.
வரையறையில் தெளிவின்மை: உலகளாவிய தரவரிசையில் உள்ள முதல் 100 பல்கலைக்கழகங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், பாடத்திட்ட அடிப்படையிலும் அந்த முதல் 100 பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்படும் என்றும் சட்ட வரையறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பல்கலைக்கழகங்கள் குறிப்பிட்ட சில பாடங்களில் மட்டும் தரமுள்ளவை. அப்படியான பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் அந்தப் பாடங்களை மட்டுமே நடத்த அனுமதிக்கப்படுமா அல்லது பிற பாடங்களையும் நடத்த அனுமதிக்கப்படுமா என்றுசொல்லப்படவில்லை. உலகில் சிறந்த பிற பல்கலைக்கழகங்களும் அனுமதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவை எந்தத் தகுதியின் அடிப்படையில் தேர்வுசெய்யப்பட உள்ளன என்பது தெரிவிக்கப்படவில்லை.
கல்வித்திட்டங்களும் பாடங்களும்: வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இளநிலை, முதுநிலை, முனைவர், முதுமுனைவர், பட்டயம், சான்றிதழ் ஆகிய படிப்புகளை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கையின்படி உயர்கல்வி, ஆராய்ச்சிதான் தற்போது மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது.
எனவே, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இளநிலை, பட்டயம், சான்றிதழ் ஆகிய பாடங்களைத் தவிர்த்து ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் முதுநிலை, முனைவர் படிப்புகளை வழங்க வைக்க வேண்டும். இப்படியான பல்கலைக்கழகங்களில் அளிக்கப்படும் பட்டங்கள் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கும் தகுதியுடையதாகும்.
அனைத்து நாடுகளிலும் நுழைவு விசா பெறுவதற்கு ஏதுவாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. மருத்துவம், விவசாயம் சம்பந்தப்பட்ட படிப்புகள் யூஜிசியின்கீழ் அல்லாமல், தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission), இந்தியவிவசாய ஆராய்ச்சி மன்றம் (Indian Council of Agricultural Research) ஆகியவற்றின் கீழ் வருகின்றன.
இது தொடர்பான படிப்புகளை வழங்குவதுதொடர்பாக எதுவும் வரையறையில் குறிப்பிடப்படவில்லை. ஒவ்வொரு பாடத்துக்கும் மதிப்பீடு (CreditAssignment), விவரணையாக்கம் (Mapping), வெளிநாட்டுப் பல்கலைக்கழக மதிப்பெண்கள் மாற்றப்படும் முறைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
செய்ய வேண்டியவை: அனைத்துத் தரப்பினருக்கும் மலிவுக் கட்டணத்தில் தகுதியான கல்வியை அளிப்பது இந்திய உயர் கல்வி நிறுவனங்களின் நோக்கம். இது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்துவதை உறுதிப்படுத்த வேண்டும். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் எந்த நாட்டு மாணவர்களும் எந்த எண்ணிக்கையிலும் சேர்த்துக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது. இவ்விஷயத்தில் இந்திய மாணவர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.
நியமிக்கப்படவுள்ள வெளிநாட்டு ஆசிரியர்களுக்கும் இந்திய ஆசிரியர்களுக்கும் ஊதியத்திலும் பிற சலுகைகளிலும் எந்தவிதமான வேறுபாடுகளும் காட்டப்படக் கூடாது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு முதலில் 10 ஆண்டுகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது சரியல்ல. வரையறையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த வகையான கூறுகளை, அப்பல்கலைக்கழகங்கள் மீறினாலும் எந்த ஆண்டிலும், அனுமதி திரும்பப் பெறப்படும் என்று மாற்றியமைக்க வேண்டும்.
முதற்கட்டமாக 50 பல்கலைக்கழகங்களை முதல் ஐந்து ஆண்டுகளுக்கு பரீட்சார்த்த முறையில் அனுமதிக்கலாம். அப்போதுதான் இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் சரிவுகளைச் சந்திப்பதைத் தவிர்க்க முடியும். இந்த வரையறையைச் சட்டமாக்கும் முன்பாக, இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் பயிலும் மாணவர்கள், பணியாற்றுகின்ற ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், இந்தியப் பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர்கள், பணியாற்றும் இந்திய, வெளிநாட்டு ஆசிரியர்களின் கருத்துகளைப் பெற்று, தகுந்த மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் இதுகுறித்த கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும்.
- க.திருவாசகம் முன்னாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்; தொடர்புக்கு: vc@ametuniv.ac.in