

பிஹாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஜனவரி 7ஆம் தேதி தொடங்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர், இந்தியாவில் ஒரு மாநில அரசால் நடத்தப்படும் முதல் சாதிவாரிக் கணக்கெடுப்பு அது. இதற்குத் தடை விதிக்கக் கோரிக்கைவிடுத்துப் பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.
கணக்கெடுப்புகளின் வரலாறு: இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை ஏழு முறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்புகளில், பட்டியலினத்தவர் பட்டியல் பழங்குடியினர் (எஸ்சி, எஸ்டி) குறித்த விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்படுகின்றன.
பிற சாதிகள் தொடர்பான தரவுகள் இல்லாத நிலையில், இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) என்று அறியப்படும் பிற்படுத்தப்பட்டோர் மக்கள்தொகையைச் சரியாக மதிப்பிட முடியாத நிலை இன்றுவரை தொடர்கிறது. 1990இல் வி.பி.சிங் தலைமையிலான அரசு ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கியபோது, 1931ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே அவர்களுக்கு இடஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டது.
1931ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், ஓபிசி மக்கள்தொகை 52% என மதிப்பிடப்பட்டிருந்தது. 1931க்குப் பிறகு, எந்த ஒரு அரசாங்கமும் பிற்படுத்தப்பட்டோரைக் கணக்கிடுவதற்கு அதுபோன்ற முயற்சியை மேற்கொள்ளவில்லை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2011ஆம் ஆண்டு சமூக - பொருளாதார மற்றும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தியது என்றாலும், அந்தக் கணக்கெடுப்பு விவரங்கள் இன்றுவரை வெளியிடப்படவில்லை.
தவறுகள் நிறைந்த தரவுகள்: 2011ஆம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கு முன்பு சாதிகளின் பதிவேடுகள் எதுவும் தயாரிக்கப்படவில்லை. இதிலிருந்தே அந்தத் தரவுகளின் குறைபாடுகள் தொடங்கு கின்றன. ஒரே சாதியை வெவ்வேறு விதமாக உச்சரித்த கணக்கீட்டாளர்களாலும் தவறுகள் ஏற்பட்டன. மாறுபட்ட எழுத்துப் பிழைகளுடன் ஒரே மாதிரியான அல்லது ஒத்த சாதிகளை ஒருங்கிணைக்கவோ அல்லது பிரிக்கவோ முறையான வழி இல்லாததால், சாதி வகைகளின் எண்ணிக்கை அதிகமானது. எடுத்துக்காட்டாக, மகாராஷ்டிரத்தில் தற்போதுள்ள எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவுகள், அரசாங்கப் பதிவுகளின்படி, 494 மட்டுமே.
ஆனால் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இந்தச் சாதிகளின் மொத்த எண்ணிக்கை 4,28,677 என இருந்தது. மகாராஷ்டிர மாநிலத்தின் மக்கள்தொகை 10.3 கோடியாக இருந்தபோது, சுமார் 1.17 கோடி பேர் (11%க்கும் அதிகமானோர்) ‘சாதி இல்லை’ என்ற பிரிவில் இருந்தனர். முக்கியமாக, கணக்கெடுக்கப்பட்ட 99% சாதிகளில் 100 பேருக்கும் குறைவான மக்களே இருந்தனர். தேசிய அளவில் எடுத்துக்கொண்டால், 1931ஆம் ஆண்டின் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மொத்த சாதிகளின் எண்ணிக்கை 4,147.
ஆனால், 2021 கணக்கெடுப்பில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை 46 லட்சம் என்று இருந்தது. இதன் காரணமாக, இந்த முழுத் தரவுத் தொகுப்பும் குறைபாடுடையது; இடஒதுக்கீடு உள்ளிட்ட கொள்கை நோக்கங்களுக்காக இதைப் பயன்படுத்த முடியாது; சாதித் தரவைப் பொதுவெளியில் வெளியிட முடியாது என்று 2022 செப்டம்பரில் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இனி என்ன?: சாதி அடிப்படையிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மூலமாகப் பட்டியல் பிரிவினர், இடஒதுக்கீடு பெற்றுப் பலனடைகின்றனர். ஆனால், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடைத்தாலும் அவர்களது அசல் எண்ணிக்கையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது மத்தியில் ஆட்சிசெய்யும் பாஜகவின் கூட்டணியிலிருந்த ஐக்கிய ஜனதா தளம் உள்படப் பல்வேறு அரசியல் கட்சிகள் சாதிவாரிக் கணக்கெடுப்புக்காகக் குரல் கொடுத்துவருகின்றன.
இந்தச் சூழலில்தான் பிஹார் அரசு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்திவருகிறது. பிஹாரைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் நிலைப்பாடு: பிற்படுத்தப்பட்டோர், முன்னேறிய சாதிகள் உள்ளிட்ட அனைத்து சாதியினருக்குமான சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம் எந்தெந்த சாதிகள் இன்னும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன, எந்தெந்த சாதிகள் முன்னேறிவிட்ட பிறகும் அரசு சலுகைகளை அனுபவித்துக்கொண்டிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
இதன் மூலம் இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் கொள்கை நடவடிக்கைகளும் சலுகைகளும் சரியான - தகுதிவாய்ந்த மக்களுக்குச் சென்றடைவதை உறுதிப்படுத்த முடியும் என்பது சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவான வாதமாக முன்வைக்கப்படுகிறது. அதே நேரம், அனைத்துச் சாதியினருக்குமான கணக்கெடுப்பை நடத்துவது நடைமுறையில் சாத்தியமற்றது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான மத்தியப் பட்டியலில் இடம்பெற்றுள்ள சாதிகள் 2,479; மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் 3,150. அதோடு, பொதுமக்கள் பலர் தமது சாதி உட்பிரிவு, கோத்திரம் உள்ளிட்டவற்றைச் சாதியின் பெயர் என்று குறிப்பிடுவதால் பல குழப்பங்கள் நேர்கின்றன.
அதோடு, பட்டியல் பிரிவுகள் தவிர, பிற பிரிவினருக்குச் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தலைமைப் பதிவாளர் - மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையருக்கு அரசமைப்புச் சட்டரீதியான நிர்ப்பந்தம் இல்லை என்றும், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவது அரசின் கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றம் அதில்தலையிட முடியாது என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தொகுப்பு: நிஷா