ஜசிந்தா ஆடர்ன் அதிகாரத்தை விஞ்சிய கருணை

ஜசிந்தா ஆடர்ன் அதிகாரத்தை விஞ்சிய கருணை
Updated on
3 min read

நியூசிலாந்து பிரதமராக 2017இல் தேர்ந்தெடுக்கப்பட்டபோது உலகின் மிக இளவயது (37) தலைவர் எனக் கொண்டாடப்பட்டவர் ஜசிந்தா ஆடர்ன். ஊழல் குற்றச்சாட்டு, தேர்தல் தோல்வி போன்ற எவ்விதக் காரணங்களுமின்றித் தன் பதவிக் காலத்தில் தன் விருப்பத்தின் பேரில் பதவியைத் துறந்த பிரதமர் என்கிற பெயரும் இவருக்குக் கிடைத்திருக்கிறது. நியூசிலாந்தில் அக்டோபர் 14இல் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், முன்கூட்டியே தனது பதவி விலகல் செய்தியை அறிவித்து உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார்.

எதிர்வரும் தேர்தலில் ஜசிந்தா சார்ந்திருக்கும் தொழிலாளர் கட்சி தோல்வியைச் சந்திக்கக்கூடும் எனவும், தோல்வி பயத்தால்தான் பதவி விலகுகிறார் எனவும் ஒரு சாரார் கருத்துச் சொன்னார்கள். தொடர்ச்சியான மிரட்டல்கள் வந்ததால் இந்த முடிவை எடுத்தார் என்றனர் சிலர். இவற்றை மறுத்திருக்கும் ஜசிந்தா, “தேர்தலில் எங்கள் கட்சி பின்னடைவைச் சந்திக்கும் என்பது எனக்குத் தெரியும்.

ஆனால், அதற்கும் இந்தப் பதவி விலகலுக்கும் தொடர்பில்லை. ஒரு நாட்டின் பிரதமர் பதவி என்பது இரண்டு முடிவுகளை நோக்கி நம்மைத் தள்ளும். ஒன்று, இந்தப் பதவிக்கு நாம் தகுதியானவரா என்பது, இன்னொன்று இதற்கு நாம் தகுதியற்றவர் என்பது. இரண்டையுமே நான் உணர்ந்திருக்கிறேன். என்னால் முடிந்த அளவுக்கு இந்நாட்டு மக்களுக்குப் பணியாற்றியுள்ளேன். இதற்கு மேல் என்னிடம் எதுவும் இல்லை” என்று விளக்கமளித்துள்ளார்.

உணர்வுபூர்வமான ஆதரவு: தனது பதவிக் காலத்தில் அடுத்தடுத்து பல்வேறு பிரச்சினைகளை ஜசிந்தா சந்திக்க வேண்டியிருந்தது. இளம் தலைவராக இருந்தபோதும் பொறுப்பான, பக்குவமான அணுகுமுறையால் பல்வேறு விஷயங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

பேநசீர் பூட்டோவுக்குப் பிறகு பதவிக் காலத்தின்போது குழந்தை பெற்றுக்கொண்ட பிரதமர் ஜசிந்தா தான். ஆறு வார பேறு கால விடுப்புக்குப் பிறகு பணிக்குத் திரும்பினார். 2018 செப்டம்பரில் நடைபெற்ற ஐநா பொது அவைக் கூட்டத்தில் தன் மூன்று மாதக் கைக்குழந்தையுடன் பங்கேற்று புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தினார்.

2019இல் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் நிறவெறி கொண்டவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 52 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். பதற்றம் நிறைந்த அந்தச் சூழலில் பாதிக்கப்பட்டவர்களை ஜசிந்தா சந்தித்தார். அந்தத் துயரில் நாடே பங்கேற்கிறது என்பதை உணர்த்தும்விதமாக ஹிஜாப் அணிந்தபடி அவர் பேசியது மக்களிடையே நற்பெயரைப் பெற்றுத்தந்தது.

அதே நேரம் ஹிஜாப் பெண்ணுரிமைக்கு எதிரானது, அதை அணிந்திருக்கக் கூடாது எனவும் சிலர் விமர்சித்தனர். ஆனால், வெறுப்புக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் துணையாக நிற்பதன் முக்கியத்துவத்தை ஜசிந்தா உணர்ந்திருந்தார். துப்பாக்கி உரிமத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான சட்டத் திருத்தத்தை ஒரே வாரத்தில் கொண்டுவந்தார். வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் தொடங்கினார்.

ஒரே நாடு.. ஒரே அணி: பால் புதுமையினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர்கள் நடத்திய பேரணியில் ஜசிந்தா பங்கேற்றார். இப்படியொரு பேரணியில் பங்கேற்ற முதல் நியூசிலாந்து பிரதமர் என்கிற பெருமையையும் பெற்றார். 21 உயிர்களைப் பலிவாங்கிய எரிமலை வெடிப்பு அடுத்த பேரிடியாக அமைந்தபோது, மிகத் துரிதமாகவும் பொறுப்புடனும் செயல்பட்டு பாராட்டுகளை அள்ளினார்.

மக்கள் மனங்களில் நீங்கள் என்னவாக நிலைபெற வேண்டும் என்கிற கேள்விக்கு, “கூடுமானவரைக்கும் கருணையோடு இருக்க முயன்றவர் என்றே நிலைபெற வேண்டும்” என்று ஜசிந்தா சொல்லியிருக்கிறார். பெரும்பாலான அரசியல்வாதிகள் அதிகாரத்தையும் செல்வாக்கையும்தான் தங்கள் அடையாளமாக முன்னிறுத்துவார்கள். கருணையும் அதிகாரமும் இருவேறு துருவங்கள். ஆனால் அதிகாரம் நிறைந்த பதவியில் இருந்தபடி கருணையின்வழியில் பயணிக்க முனைந்தவர் ஜசிந்தா. கரோனா பெருந்தொற்றை மிகச் சிறப்பாகக் கையாண்டது ஜசிந்தாவின் தனிப்பெரும் அடையாளம்.

கரோனாவுக்கு எதிராக ஓரணியில் மக்களை நிற்க வைத்ததன்மூலம் கோவிட் பெருந்தொற்றை வெல்லும் வலிமையை உருவாக்கினார். ‘50 லட்சம் உறுப்பினரைக் கொண்ட நம் அணி’ என்று ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் குறிப்பிட்டார். செய்தியாளர் சந்திப்பின்போது சுகாதாரத் துறை இயக்குநரை உடன் வைத்துக்கொண்டு பேசியது, மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது. அப்போது எழுச்சிபெற்ற ‘ஜசிந்தா மேனியா’, 2020 தேர்தலில் பெரும் வெற்றியை அவருக்குப் பெற்றுத்தந்தது.

பெண் வெறுப்பும் சதியும்: தொற்று பரவத் தொடங்கியதுமே ஊரடங்கை அறிவித்த மிகச் சில நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. ஆனால், அதுவே ஜசிந்தாவுக்கு எதிராகவும் அமைந்தது. தொடர்ச்சியான ஊரடங்கு, தடுப்பூசி முகாம்கள் போன்றவற்றுக்கு எதிராகச் சிலர் போராட்டங்களை முன்னெடுத்தனர். 2022இல் அது இன்னும் வலுப்பெற்றது. நாடாளுமன்ற வளாகத்தில் மூன்று வாரங்கள் வரைக்கும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொருளாதாரச் சிக்கல், காலநிலை மாற்றம் என அடுத்தடுத்துத் தலைதூக்கிய பிரச்சினைகளை எல்லாம் கூடுமானவரைக்கும் சமாளித்தார். அதனாலேயே இவருக்கு எதிரான விமர்சனங்கள் குறைவு. வேலையில்லாத் திண்டாட்டம், அதிகரிக்கும் கரியமில வாயு உமிழ்வு போன்றவற்றை சரிவரக் கையாளவில்லை என்பது இவரது எதிர்ப்பாளர்களின் குற்றச்சாட்டு.

2020 முதல் 2022க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் இவருக்கு எதிரான அச்சுறுத்தல் மூன்று மடங்கு அதிகரித்ததாக அமெரிக்காவின் முன்னாள் உளவுத் துறை அதிகாரி பால் பியூகேனன் தெரிவித்துள்ளார். பெண் வெறுப்பாளர்கள், சதியாளர்களின் தீவிர அச்சுறுத்தல்கூட இவர் பதவி விலகக் காரணமாக இருக்கக்கூடும் என்று நியூசிலாந்து ஊடகங்கள் சொல்லும் நிலையில், பதவி விலகலுக்குப் பிறகு ஜசிந்தாவுக்குக் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படலாம் என பியூகேனன் கூறியிருக்கிறார்.

எது பெண்ணின் அடையாளம்?: இது போன்ற அரசியல் காரணங்கள் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் ஜசிந்தா கூறியிருக்கும் கருத்து, ஒரு பெண்ணாகத் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வதில் உள்ள அரசியலைச் சொல்கிறது. எந்தப் பதவியில் இருந்தாலும் பெண்கள் பதவி விலகுகையில் சொல்வதைப் போலத்தான் ஜசிந்தாவும் பேசியிருக்கிறார்.

பொதுவாழ்வில் ஈடுபடும் பெரும்பாலான ஆண்களுக்குக் குடும்பம் தடையாகவோ நெருக்கடியாகவோ இருந்ததில்லை. குடும்பப் பணிகளில் ஈடுபட்டாலும் இல்லையென்றாலும் அவர்கள் குடும்பத் தலைவர்களாகத் திகழ்கிறார்கள். ஆனால், மனைவி, அம்மா, மகள் என ஒவ்வொரு பொறுப்பையும் தனித்தனியே நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயமெல்லாம் பெண்களுக்கு மட்டும்தான்.

பதவி விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து தன் இணையருக்கும் மகளுக்கும் ஜசிந்தா கூறியிருக்கும் சேதிகூட ஒருவகையில் இதைத்தான் உணர்த்துகிறது. “நீ பள்ளிக்குப் போகும்போது இனி அம்மா உன்னுடன் இருப்பேன்” என்று மகளிடமும், “நாம் இப்போது திருமணம் செய்துகொள்ளலாம்” என்று தன் இணையரிடமும் சொல்லியிருக்கிறார்.

உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாகத் திகழ்ந்த சானியா மிர்சாவிடம் பிரபல ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய், “குடும்பம், குழந்தை என்று எப்போது செட்டில் ஆகப்போகிறீர்கள்?” என்று கேட்டதுதான் நினைவுக்கு வருகிறது. குடும்பப் பொறுப்பு என்பது எல்லாக் காலத்திலும் பெண்ணுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட ஒன்றா என்பதே நம் முன் வலுவாக எழும் கேள்வி.

2018 செப்டம்பரில் நடைபெற்ற ஐநா பொது அவைக் கூட்டத்தில் தன் மூன்று மாதக் கைக்குழந்தையுடன் பங்கேற்று புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தினார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in