

வேங்கை வனம்
எம்.கோபாலகிருஷ்ணன்
தமிழினி பதிப்பகம்
விலை: ரூ.550
புத்தகக் காட்சி அரங்கு எண்: F 15
எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனின் ‘வேங்கை வனம்’ நாவல் இந்தப் புத்தகக் காட்சியில் வெளியாகியுள்ளது. இவரது ‘மணல் கடிகை’ தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று. இந்நாவல் தொழில் நகரமான திருப்பூரின் சமகால வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. சமகால யதார்த்தமும் மனித மன சஞ்சாரங்களும் இவரது கதைகளின் ஆதாரங்கள் எனலாம். இந்தப் புதிய நாவல் பல நூற்றாண்டுக் கால வரலாற்றைப் பேசுகிறது; களமும் புதியது. ஜெய்ப்பூருக்கு அருகில் உள்ள ராந்தம்பூர் வனம்தான் ‘மாபெரும் தாயின் கதை’ நாவலின் நிலம்.
புகழ்பெற்ற வட இந்திய அரச வம்சமான ராஜபுத்திர செளகான் காலத்தில் நாவல் தொடங்குகிறது. இந்த அரச வம்சத்தினரின் வேட்டைக் களமாகப் புலிகள் அடர்ந்த இந்த வேங்கை வனம் இருந்துள்ளது. பிறகு, இந்த நிலத்துக்கு முகலாயப் பேரரசு வருகிறது. அவர்களும் வேட்டையாடுகிறார்கள்.
பிரிட்டிஷ் காலத்திலும் இந்த வேட்டை தொடர்கிறது. சுதந்திர இந்தியாவில் வேட்டையாடுவதற்குப் புலிகள் தென்படாத வனமாகிறது ராந்தம்பூர். இந்தப் பின்னணியில் இந்திய அரசு ‘புராஜெக்ட் டைகர்’ என்ற திட்டத்துடன் புலிகளைக் காக்க திட்டம் வகுக்கிறது. இந்த இடத்தில்தான் நாவலில் அதன் நாயகியான மச்லி (மீன்) வருகிறாள். மீன் போன்ற கோடுகள் கொண்ட பெண் புலி அவள்; இந்தியாவின் சுற்றுலா முகமாக அறியப்பட்டவள். இந்த மாபெரும் தாய், தன் நான்கு ஈற்றுகளின் வழி ஒரு சந்ததியையே தோற்றுவிக்கிறாள். இன்றைய இந்தியப் புலிகளின் தொகை அதிகரிப்புக்குக் காரணமான தாய் இவள்.
புலிகளின் சராசரி வயதைத் தாண்டி வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற இந்தப் புலியின் கதையாக இரண்டாம் பகுதியில் நாவல் மாற்றம் கொள்கிறது. முதல் பகுதியை ஒருவகையில் மச்லியின் முன்னோர்களின் கதையாகப் பார்க்கலாம். 2016இல் அது இறக்கும் வரை நாவல் பயணிக்கிறது. வெளிப்புறமாக வேட்டை, மச்லி எனத் தோற்றம் கொண்ட இந்நாவல், இதன் வழியாக வெளியில் நிகழ்ந்த சமூக மாற்றத்தையும் உள்ளே நிகழ்ந்த அக மாற்றத்தையும் பதிவுசெய்கிறது.
- மண்குதிரை